Skip to main content

11 புதிய மருத்துவக் கல்லூரிகளை காணொளி மூலம் திறந்து வைக்கிறார் பிரதமர் நரேந்திர மோடி!

Published on 10/01/2022 | Edited on 10/01/2022

 

Prime Minister Narendra Modi opens 11 medical colleges through video!

 

சென்னை பெரும்பாக்கத்தில் கட்டப்பட்டுள்ள தமிழாய்வு நிறுவனத்தின் புதிய வளாகம் மற்றும் 11 புதிய மருத்துவக் கல்லூரிகளை வரும் ஜனவரி 12- ஆம் தேதி அன்று பிரதமர் நரேந்திர மோடி காணொளி மூலம் திறந்து வைக்கிறார். 

 

தமிழ்நாட்டில் விருதுநகர், நாமக்கல், நீலகிரி, திருப்பூர், திருவள்ளூர், நாகை, திண்டுக்கல், அரியலூர், கள்ளக்குறிச்சி, ராமநாதபுரம் மற்றும் கிருஷ்ணகிரி ஆகிய 11 மாவட்டங்களில் புதிய மருத்துவக் கல்லூரிகள் ரூபாய் 4,000 கோடி மதிப்பீட்டில் கட்டப்பட்டுள்ளன. இந்த மருத்துவக் கல்லூரிகளை பிரதமர் நரேந்திர மோடி வரும் ஜனவரி 12- ஆம் தேதி மாலை 04.00 மணியளவில் காணொளி வாயிலாக திறந்து வைக்க உள்ளார். 

 

இதன் மூலம் மொத்தமாக 1,250 மருத்துவ இடங்கள் தமிழ்நாட்டிற்கு கூடுதலாக கிடைக்கும். இதற்காக மத்திய அரசின் தொகுப்பில் இருந்து தமிழ்நாட்டிற்கு 2,145 கோடி ரூபாய் வழங்கப்பட்டுள்ளது. மேலும், சென்னையில் செம்மொழித் தமிழாய்வு மத்திய நிறுவனத்தின் புதிய வளாகத்தையும் பிரதமர் நரேந்திர மோடி அன்றைய தினம் திறந்து வைக்க உள்ளார். 

 

24 கோடி ரூபாய் செலவில் கட்டப்பட்டுள்ள செம்மொழித் தமிழாய்வு மத்திய நிறுவனத்தின் புதிய வளாகம் இதுவரை வாடகை கட்டிடத்தில் செயல்பட்டு வந்த நிலையில், மூன்று தளங்களைக் கொண்ட புதிய வளாகம் கட்டப்பட்டுள்ளது. 

 

இந்த நிகழ்ச்சியில் தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின், தமிழ்நாடு மருத்துவம் மற்றும் மக்கள் நல்வாழ்வுத்துறை அமைச்சர் மா.சுப்பிரமணியன், மத்திய சுகாதாரத்துறை அமைச்சர் மன்சுக் மாண்டவியா மற்றும் அரசு உயரதிகாரிகள் உள்ளிட்டோர் கலந்து கொள்கின்றனர்.  

 

முன்னதாக, இந்த நிகழ்ச்சிகளுக்காக பிரதமர் நரேந்திர மோடி, தமிழ்நாட்டிற்கு வருகை தரவிருந்த நிலையில், அதிகரித்து வரும் கரோனா பரவலையடுத்து, பிரதமரின் அனைத்து பயணங்களும் ரத்து செய்யப்பட்டு, நிகழ்ச்சிகள் அனைத்தும் காணொளி வாயிலாக நடந்து வருகின்றன. 

 

சார்ந்த செய்திகள்