Skip to main content

உச்சநீதிமன்றத்தில் பொன்முடி மேல்முறையீடு

Published on 03/01/2024 | Edited on 03/01/2024
Ponmudi's appeal to the Supreme Court

கடந்த 2006 முதல் 2011 ஆம் ஆண்டு வரையிலான திமுக ஆட்சியில் கல்வித்துறை மற்றும் கனிம வளத்துறை அமைச்சராகவும் பொன்முடி பதவி வகித்தார். அப்போது வருமானத்திற்கு அதிகமாக 1.75 கோடி ரூபாய் சொத்து சேர்த்ததாக லஞ்ச ஒழிப்புத்துறை போலீசார் கடந்த 2011 ஆம் ஆண்டு வழக்குப்பதிவு செய்தனர். அந்த வழக்கில் அமைச்சர் பொன்முடி மற்றும் அவரது மனைவி விசாலாட்சி, மணிவண்ணன் உள்ளிட்ட மூவரும் குற்றம் சாட்டப்பட்டனர். இந்த வழக்கை விசாரித்த எம்எல்ஏ, எம்பிக்கள் வழக்குகளை விசாரிக்கும் சிறப்பு நீதிமன்றம் மூவரையும் விடுவித்து உத்தரவிட்டிருந்தது.

இந்த தீர்ப்பை எதிர்த்து 2016 ஆம் ஆண்டு லஞ்ச ஒழிப்புத்துறை மேல்முறையீடு செய்தது. உயர்நீதிமன்றத்தில் தாக்கல் செய்யப்பட்ட இந்த மேல் முறையீட்டு மனு நீதிபதி ஜெயச்சந்திரன் முன்பு விசாரணைக்கு வந்தது. அப்போது பொன்முடி தரப்பில் ஆஜரான வழக்கறிஞர்கள் பொன்முடியின் மனைவி வருமானத்தை பொன்முடியின் வருமானமாக லஞ்ச ஒழிப்புத்துறை கணக்கிட்டிருக்கிறார்கள். அவருடைய மனைவிக்கு சொந்தமாக தனியார் விவசாய நிலங்கள் உள்ளது. அதன் மூலமாகவும் வருமானம் இருக்கிறது. இதை கருத்தில் கொள்ளாமல் லஞ்ச ஒழிப்புத்துறை வழக்குப்பதிவு செய்துள்ளது. அதைச் சரியாக புரிந்து கொண்டு சிறப்பு நீதிமன்றம் உத்தரவு பிறப்பித்துள்ளது. எனவே அந்த உத்தரவை ரத்து செய்யக்கூடாது என வாதங்கள் வைக்கப்பட்டது.

இருதரப்பு வாதங்களைக் கேட்ட நீதிபதி ஜெயச்சந்திரன், வழக்கின் தீர்ப்பைத் தேதி குறிப்பிடாமல் ஒத்தி வைத்திருந்தார். இந்நிலையில் கடந்த டிசம்பர் 19  ஆம் தேதி அன்று இந்த வழக்கில் பிறப்பித்த உத்தரவில் 'வருமான வரி கணக்கு, வங்கி கணக்கு, சொத்து கணக்குகளை கொண்டு சிறப்பு நீதிமன்ற நீதிபதி இந்த உத்தரவு பிறப்பித்திருக்கிறார். இந்த உத்தரவு தவறானது. செல்லாதது என ரத்து செய்து உத்தரவிட்டதோடு, பொன்முடிக்கான தண்டனை விவரங்கள் டிசம்பர் 21 ஆம் தேதி அறிவிக்கப்படும் எனத் தெரிவிக்கப்பட்டிருந்தது. இதையடுத்து டிசம்பர் 21 இல் பொன்முடி மற்றும் அவரது மனைவி நேரில் அல்லது காணொளி வாயிலாக ஆஜராக வேண்டும் எனவும் உத்தரவு பிறப்பிக்கப்பட்டிருந்தது.

அதன்படி டிசம்பர் 21 ஆம் தேதி அமைச்சர் பொன்முடி, அவரது மனைவி விசாலாட்சி ஆகியோர் நீதிமன்றத்திற்கு வந்திருந்தனர். அப்போது பொன்முடி மற்றும் அவர் மனைவி சார்பில் ஆஜரான வழக்கறிஞர் என்.ஆர்.இளங்கோ, பொன்முடி மற்றும் அவரது மனைவியின் வயது, மருத்துவ காரணங்களை கருத்தில் கொள்ள வேண்டும் என கோரிக்கை வைத்து மருத்துவ அறிக்கையை தாக்கல் செய்தார். அதனைத்தொடர்ந்து கொடுக்கப்பட்ட தண்டனை உத்தரவில், பொன்முடி அவரது மனைவி விசாலாட்சி ஆகியோருக்கு மூன்றாண்டுகள் சிறை தண்டனை, தலா ரூ.50 லட்சம் அபராதம் விதித்து நீதிபதி ஜெயச்சந்திரன் உத்தரவிட்டிருந்தார்.

Ponmudi's appeal to the Supreme Court

மேலும் மேல்முறையீடு செய்வதற்காக 30 நாட்களுக்கு தண்டனை நிறுத்தி வைக்கப்பட்டுள்ளது. தண்டனை விதிக்கப்பட்டதால், சட்டமன்ற உறுப்பினர், அமைச்சர் உள்ளிட்ட பதவிகளை பொன்முடி இழந்திருந்தார். இந்நிலையில் சொத்துக் குவிப்பு வழக்கில் உயர்நீதிமன்றம் விதித்த தண்டனையை எதிர்த்து பொன்முடி மற்றும் அவரது மனைவி சார்பில் உச்ச நீதிமன்றத்தில் மேல் முறையீடு செய்யப்பட்டுள்ளது. மேல் முறையீட்டு மனுவில், “இந்த வழக்கை பொறுத்த வரையில் சென்னை உயர்நீதிமன்றம் சரியாக விசாரணை செய்யவில்லை. ஒருதலைபட்சமாக தீர்ப்பு வழங்கப்பட்டிருக்கிறது” எனத் தெரிவிக்கப்பட்டிருக்கிறது. இந்த மேல்முறையீட்டு மனு விரைவில் விசாரணைக்கு வர உள்ளது என எதிர்பார்க்கப்படுகிறது. 

சார்ந்த செய்திகள்