Skip to main content

சி.பி.ஐ காவல் முடிவடைவதால் ப.சிதம்பரம் இன்று நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்படுகிறார்.

Published on 26/08/2019 | Edited on 26/08/2019

ஐ.என்.எக்ஸ் மீடியா முறைகேடு வழக்கில் காங்கிரஸ் மூத்த தலைவர்களில் ஒருவரும், முன்னாள் மத்திய நிதி  அமைச்சருமான ப.சிதம்பரம், அவரது மகன் கார்த்தி சிதம்பரம் உள்ளிட்ட சிலர் மீது, சி.பி.ஐ.யும், அமலாக்கத்துறையும் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றன. இந்த வழக்கில் ப.சிதம்பரத்தின் முன்ஜாமீன் மனுவை டெல்லி உயர்நீதிமன்றம் கடந்த 20- ஆம் தேதி தள்ளுபடி செய்தது. இதைத்தொடர்ந்து ப.சிதம்பரத்தை சி.பி.ஐ. அதிகாரிகள் 21-ஆம் தேதி டெல்லியில் உள்ள அவரது வீட்டில் கைது செய்தனர்.
 

பின்னர் அவரை தங்கள் தலைமை அலுவலகத்துக்கு அழைத்துச் சென்று சி.பி.ஐ அதிகாரிகள் விசாரணை நடத்தினார்கள். மறுநாள் அவரை சி.பி.ஐ. டெல்லி ரோஸ் அவென்யூ நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தினார்கள். அப்போது ப.சிதம்பரத்தை 5 நாட்கள் தங்கள் காவலில் வைத்து விசாரிக்க அனுமதி கோரி சி.பி.ஐ. தரப்பில் மனு தாக்கல் செய்யப்பட்டது. இதனை ஏற்ற நீதிமன்றம் ப. சிதம்பரத்தை 5 நாட்கள் காவலில் எடுத்து விசாரிக்க சிபிஐ அனுமதி வழங்கி, திங்கள்கிழமை ஆஜர்படுத்துமாறு சிபிஐக்கு நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
 

ப.சிதம்பரத்துக்கு வழங்கப்பட்ட 5 நாள் சி.பி.ஐ காவல் இன்றுடன் முடிவடைவதால், சி.பி.ஐ அதிகாரிகள் அவரை இன்று மாலை டெல்லி ரோஸ் அவென்யூ நீதிமன்றத்தில் ஆஜர்படுத்துகின்றனர். இதற்கிடையே, டெல்லி உயர்நீதிமன்றம் முன்ஜாமீன் வழங்க மறுத்ததை எதிர்த்து ப.சிதம்பரம் தரப்பில் உச்சநீதிமன்றத்தில் மேல்முறையீட்டு மனு தாக்கல் செய்துள்ளனர். அந்த மனு இன்று காலை விசாரணைக்கு வருகிறது. 

 

 PC Chidambaram to appear in court today cbi may be extend custody



இதேபோல் அமலாக்கத்துறை வழக்கில் ப.சிதம்பரம் தாக்கல் செய்த மேல்முறையீட்டு மனுவை விசாரித்த உச்சநீதிமன்றம், ப. சிதம்பரத்தை 26-ந் தேதி வரை கைது செய்ய தடை விதித்து கடந்த வெள்ளிக்கிழமை உத்தரவிட்டது. அந்த மனு மீதான விசாரணையும் உச்சநீதிமன்றத்தில் இன்று நடக்கிறது.


உச்சநீதிமன்றத்தில் ப. சிதம்பரம் தொடர்பான இரு வழக்குகள் இன்று விசாரணைக்கு வரவுள்ளதால், அவருக்கு ஜாமீன் கிடைக்குமா? அல்லது அமலாக்கத்துறை ப.சிதம்பரத்தை காவலில் எடுத்து விசாரிக்க அனுமதிக்குமா? என்பது இன்று மாலை உச்சநீதிமன்றம் வழங்கும் உத்தரவில் தெரிந்துவிடும்.



 

சார்ந்த செய்திகள்

Next Story

பிரதமர் மோடிக்கு எதிரான மனு தள்ளுபடி!

Published on 29/04/2024 | Edited on 29/04/2024
Petition against Prime Minister Modi dismissed

உலகின் மிகப்பெரிய ஜனநாயக திருவிழாவான இந்திய நாட்டின் 18ஆவது நாடாளுமன்ற தேர்தல் நாடு முழுவதும் களைகட்டியுள்ளது. அதன்படி கடந்த 19 ஆம் தேதி (19.04.2024) தொடங்கி வரும் ஜூன் 1 ஆம் தேதி வரை 7 கட்டமாக வாக்குப்பதிவு நடைபெறவுள்ளது. அதில் முதற்கட்டமாக தமிழகம் உள்ளிட்ட 21 மாநிலங்கள் மற்றும் யூனியன் பிரதேசங்களில் உள்ள 102 இடங்களுக்கு கடந்த 19 ஆம் தேதி வாக்குப்பதிவு நடைபெற்றது. அதனைத் தொடர்ந்து நாடு முழுவதும் 13 மாநிலங்களில் உள்ள 87 மக்களவைத் தொகுதிகளில் கடந்த 26 ஆம் தேத் (26.04.2024) 2ஆம் கட்ட வாக்குப்பதிவு நடைபெற்றது.

இத்தகைய சூழலில் பிரதமர் மோடி தேர்தலில் போட்டியிட 6 ஆண்டுகள் தடை விதிக்கக் கோரி டெல்லி உயர்நீதிமன்றத்தில் ரிட் மனு ஒன்று தாக்கல் செய்யப்பட்டிருந்தது. இந்த மனுவை வழக்கறிஞர் ஆனந்த் ஜோன்டேல் என்பவர் தாக்கல் செய்திருந்தார். அந்த மனுவில், “உத்திரபிரதேசத்தின் பிலிபிட்டில் கடந்த 9 ஆம் தேதி நடைபெற்ற தேர்தல் பரப்புரையின்போது பிரதமர் மோடி, மதம், கடவுள் மற்றும் வழிபாட்டுத் தலங்களை குறிப்பிட்டு வாக்கு சேகரித்ததுடன், இஸ்லாமியர்களுக்கு எதிராக பேசினார். மேலும் பிரதமரின் இத்தகைய பேச்சு மக்கள் பிரதிநித்துவ சட்டத்திற்கு எதிரானது. எனவே பிரதமர்  மோடி தேர்தலில் போட்டியிட 6 ஆண்டுகள் தடை விதிக்கக் வேண்டும். இது குறித்த உத்தரவை தேர்தல் ஆணையத்திற்கு பிறப்பிக்க வேண்டும்” எனத் தெரிவிக்கப்பட்டிருந்தது. 

Petition against Prime Minister Modi dismissed

இதனையடுத்து இந்த வழக்கு கடந்த 26 ஆம் தேதி (26.04.2024) நீதிபதி சச்சின் தத்தா முன்பு விசாரணைக்கு வர இருந்தது. ஆனால் அன்றைய தினம் நீதிபதி சச்சின் தத்தா விடுப்பு எடுத்ததால் இந்த வழக்கு விசாரணை திங்கட்கிழமைக்கு (29.04.2024) ஒத்திவைக்கப்பட்டது. இந்நிலையில் இந்த வழக்கு இன்று (29.04.2024) விசாரணைக்கு வந்தது அப்போது, நீதிபதிகள், “இந்த மனு முற்றிலும் தவறாக புரிந்துகொள்ளப்பட்ட மனுவாக தான் கருதுகிறோம்” எனத் தெரிவித்தனர். இதனையடுத்து இந்த மனுவை தள்ளுபடி செய்து டெல்லி உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. 

Next Story

செந்தில் பாலாஜி ஜாமீன் மனு; உச்ச நீதிமன்றத்தில் மன்னிப்பு கோரிய அமலாக்கத்துறை!

Published on 29/04/2024 | Edited on 29/04/2024
Senthil Balaji Bail Petition ED apologized to the Supreme Court

போக்குவரத்துத்துறையில் சட்ட விரோதமாகப் பணப்பரிமாற்றம் செய்ததாகப் பதியப்பட்ட வழக்கில், கடந்த ஆண்டு ஜூன் மாதம் 14 ஆம் தேதி சட்ட விரோதப் பணப்பரிமாற்றத் தடுப்பு சட்டத்தின் கீழ், அமைச்சராக இருந்த செந்தில் பாலாஜி அமலாக்கத்துறையால் கைது செய்யப்பட்டு நீதிமன்றக் காவலில் இருந்து வருகிறார். இந்த வழக்கு தொடர்பாக சென்னை முதன்மை அமர்வு நீதிமன்றத்தில் செந்தில் பாலாஜிக்கு எதிராகக் கடந்த ஆண்டு ஆகஸ்ட் 12 ஆம் தேதி குற்றப்பத்திரிகை மற்றும் வழக்கு தொடர்பான ஆவணங்களை அமலாக்கத்துறையினர் தாக்கல் செய்தனர்.

அதே சமயம் இலாகா இல்லாத அமைச்சராக செந்தில் பாலாஜி நீடித்து வந்தார். மேலும் செந்தில் பாலாஜி வகித்து வந்த இலாகாக்களான மின்சாரத்துறை அமைச்சர் தங்கம் தென்னரசுவுக்கும், மதுவிலக்குத்துறை அமைச்சர் சு. முத்துசாமிக்கும் ஒதுக்கப்பட்டது. இத்தகைய சூழலில் செந்தில் பாலாஜி கடந்த பிப்ரவரி 12 ஆம் தேதி தனது அமைச்சர் பதவியை ராஜினாமா செய்திருந்தார். இதற்கிடையே பலமுறை செந்தில் பாலாஜிக்கு சென்னை அமர்வு நீதிமன்றம், சென்னை உயர் நீதிமன்றம் மற்றும் உச்ச நீதிமன்றத்தில் ஜாமீன் நிராகரிக்கப்பட்டது. 

Senthil Balaji Bail Petition ED apologized to the Supreme Court

இத்தகைய சூழலில் மீண்டும் ஜாமீன் கோரி உச்ச நீதிமன்றத்தில் செந்தில் பாலாஜி சார்பில் ஜாமீன் மனுத்தாக்கல் செய்யப்பட்டது. இந்த மனு கடந்த 1 ஆம் தேதி (01.04.2024) உச்சநீதிமன்ற நீதிபதி அபய் எஸ்.ஓஹா தலைமையிலான அமர்வில் விசாரணைக்கு வந்தது. அப்போது கீழமை நீதிமன்ற விசாரணைக்கு தடை விதிக்க மறுப்பு தெரிவித்ததுடன் அமலாக்கத்துறை பதிலளிக்க உச்சநீதிமன்றம் உத்தரவிட்டிருந்தது. மேலும் இந்த வழக்கு விசாரணையை ஏப்ரல் 29 ஆம் தேதிக்கு ஒத்தி வைத்திருந்தனர்.

இந்நிலையில் இந்த வழக்கு இன்று (29.04.2024) மீண்டும் விசாரணைக்கு வந்தது. முன்னதாக  அமலாக்கத்துறை சார்பில் நேற்று (28.04.2024) இரவு தாக்கல் செய்யப்பட்ட பதில் மனுவில், “செந்தில் பாலாஜிக்கு எதிரான ஆதாரங்கள் வலுவாக உள்ளதால் அவரது ஜாமீன் மனுவை தள்ளுபடி செய்ய வேண்டும். அமைச்சராக இல்லாவிட்டாலும், எம்.எல்.ஏ.வாக உள்ள செந்தில் பாலாஜி அதிகாரமிக்க நபராக உள்ளதால், சாட்சியங்களை அழிக்க வாய்ப்புள்ளது” எனத் தெரிவிக்கப்பட்டது. 

Senthil Balaji Bail Petition ED apologized to the Supreme Court

இதனையடுத்து செந்தில்பாலாஜி தரப்பில் வாதிடுகையில், “வழக்கில் விசாரணையை தாமதப்படுத்த அமலாக்கத்துறை முயற்சிக்கிறது. தனிநபர்களுக்குள் நடந்த கொடுக்கல், வாங்கல் விவகாரத்தை நிறுவனங்கள் சம்பந்தப்பட்ட மோசடியாக கட்டமைக்கின்றனர்” என குற்றச்சாட்டு முன் வைக்கப்பட்டது. இத்தகைய சூழலில் இந்த வழக்கில் தாமதமாக பதில் மனு தாக்கல் செய்ததற்கு உச்சநீதிமன்றத்தில் அமலாக்கத்துறை மன்னிப்பு கோரியது. முன்னதாக அமலாக்கத்துறை மிகத் தாமதமாக பதில் மனு தாக்கல் செய்துள்ளதாக செந்தில் பாலாஜி தரப்பு குற்றம் சாட்டியிருந்தது குறிப்பிடத்தக்கது. இந்த வழக்கு மே 6 ஆம் தேதிக்கு ஒத்தி வைக்கப்பட்டுள்ளது.