நாடாளுமன்ற பட்ஜெட் கூட்டத்தொடரின் முதல் அமர்வு கடந்த ஜனவரி 31ம் தொடங்கி பிப்.13ம் தேதி வரை நடைபெற்றது. அதனைத் தொடர்ந்து நாடாளுமன்ற பட்ஜெட் கூட்டத்தொடரின் இரண்டாவது அமர்வு மார்ச் 13ம் தேதி தொடங்கியது. இந்த இரண்டாவது அமர்வு வரும் ஏப்ரல் 6ம் தேதி வரை நடைபெறவுள்ளது.
நாடாளுமன்றத்தின் இரண்டாம் அமர்வு தொடங்கியதும், ஆளுங்கட்சி எம்.பி.க்கள், ராகுல் காந்தி வெளிநாட்டிற்குச் சென்று நாடாளுமன்றப் பிரச்சனைகள் குறித்து விவாதித்தது தவறு என்றனர். அதேபோல், எதிர்க்கட்சி எம்.பி.க்கள் அதானி உள்ளிட்ட பிரச்சனைகளை முன்வைத்தனர். இதனால், நாடாளுமன்றத்தில் அமளி ஏற்பட்டது. அதனைத் தொடர்ந்து நாடாளுமன்றத்தை பிற்பகல் 2 மணி வரை ஒத்திவைத்து சபாநாயகர் உத்தரவிட்டார். தொடர்ந்து பிற்பகல் 2 மணிக்கு மக்களவை கூடியது. அப்போது மீண்டும் பாஜகவினர், இந்திய ஜனநாயகத்தை இழிவு செய்த ராகுல் காந்தி மன்னிப்பு கேட்க வேண்டும் என வலியுறுத்தி முழக்கங்கள் எழுப்பினர். அதேபோல், எதிர்க்கட்சிகள் அதானி விவகாரம் குறித்து நாடாளுமன்றக் கூட்டுக்குழு விசாரணை வேண்டும் என்றும் முழக்கங்கள் எழுப்பின. ஆளுங்கட்சி மற்றும் எதிர்க்கட்சிகள் மாறி மாறி முழக்கங்கள் எழுப்பி அமளியில் ஈடுபட்டதால் மறுநாள் வரை நாடாளுமன்றத்தை ஒத்திவைத்து சபாநாயகர் உத்தரவிட்டார்.
அதேபோல் நேற்றும் நேற்று முன் தினமும் சட்டப்பேரவை கூடியதும் ஆளும் கட்சி மற்றும் எதிர்கட்சிகள் அமளியில் ஈடுபடுவதும் அவை 2 மணி வரை ஒத்தி வைக்கப்படுவதும் 2 மணிக்குப் பின் மீண்டும் அவை கூடி மீண்டும் அமளி ஏற்பட்டு, பேரவை நாள் முழுவதும் ஒத்திவைக்கப்படுவதும் தொடர்கதையாகி போனது.
இந்நிலையில் 4 ஆவது நாளாக நாடாளுமன்றம் இன்று கூடியது. இன்றும் இரு அவைகளிலும் பேரவை துவங்கிய உடன் ஆளும் கட்சி மற்றும் எதிர்கட்சிகளின் தொடர் அமளி காரணமாக 4 ஆவது நாளாக நாடாளுமன்றம் இன்றும் 2 மணி வரை ஒத்திவைக்கப்பட்டது. இந்தியாவின் ஜனநாயகம் குறித்து வெளிநாட்டில் அவதூறாகப் பேசியதாகவும் ராகுல்காந்தி மன்னிப்பு கோர வலியுறுத்தியும் பாஜக உறுப்பினர்கள் ஒருபுறம் அமளியில் ஈடுபட்டனர். மறுபுறத்தில் எதிர்க்கட்சியினரும் அதானி விவகாரம் தொடர்பாக விவாதிக்க வேண்டும் என்றும், பணவீக்கம், டீசல் - பெட்ரோல் விலை உயர்வு போன்ற காரணங்களுக்காக அமளியில் ஈடுபட்டதால் 4 ஆவது நாளாக நாடாளுமன்றம் பிற்பகல் 2 மணி வரை ஒத்திவைக்கப்பட்டது.
சட்டப்பேரவை ஒத்திவைக்கப்பட்டதும் எதிர்க்கட்சி எம்.பி.க்கள் மோடி, அதானி புகைப்படங்களுடன் போராட்டத்தில் ஈடுபட்டனர். மனிதச் சங்கிலி போராட்டத்தில் ஈடுபட்ட எதிர்க்கட்சி எம்.பி.க்கள் காங்கிரஸ் கட்சியின் தலைவர் மல்லிகார்ஜுன கார்கே, திமுக நாடாளுமன்ற குழு தலைவர் டி.ஆர்.பாலு, விடுதலைச் சிறுத்தைகள் கட்சித் தலைவர் திருமாவளவன் மற்றும் ஏராளமான எதிர்க்கட்சிகளைச் சேர்ந்த எம்.பி.க்களும் இந்தப் போராட்டத்தில் ஈடுபட்டனர்.
ஆளும் பாஜக நாடாளுமன்றத்தை முழுமையாக முடக்கியுள்ளது. இரண்டாம் அமர்வு தொடங்கியதில் இருந்து எதிர்க்கட்சிகளைப் பேச விடாமல் ஆளும் கட்சியினர் முட்டுக்கட்டை போடுகிறார்கள். ராகுல் காந்தி மன்னிப்பு கேட்க வேண்டும் என பாஜகவினர் கூறுகின்றனர். ஆனால் ராகுல் காந்தி இந்தியாவிற்கு எதிராக எந்த ஒரு கருத்தையும் கூறவில்லை என எதிர்க்கட்சியினர் கூறுகின்றனர். நேற்று நாடாளுமன்ற வளாகத்தில் இருந்து அமைதியாக பேரணி சென்று அமலாக்கத்துறையிடம் மனு கொடுக்க சென்றோம், ஆனால் அதையும் பாஜக காவல்துறையினரை வைத்து தடுத்தது என எதிர்க்கட்சி எம்.பி.க்கள் பாஜகவை குற்றம் சாட்டியுள்ளனர்.
இந்நிலையில் 2 மணியளவில் மீண்டும் அவை கூடியவுடன் மீண்டும் அமளி தொடந்ததால் நாள் முழுவதும் அவை ஒத்திவைக்கப்பட்டது. தொடர்ந்து நான்கு நாட்களாக உறுப்பினர்கள் அமளியில் ஈடுபடுவதால் எந்த நடவடிக்கையும் இல்லாமல் அவை நான்காவது நாளாக ஒத்திவைக்கப்பட்டுள்ளது.