Published on 02/11/2018 | Edited on 02/11/2018
சரக்கு மற்றும் சேவை வரி எனும் ஜிஎஸ்டி கடந்த ஆண்டு ஜுலை மாதம் அறிமுகமானது. அதன் பின் ஒவ்வொரு மாதமும் ஜிஎஸ்டி மூலமாக எவ்வளவு தொகை வசூல் ஆகிறது என்று மத்திய அரசு தெரிவித்துவருகிறது. அதன் அடிப்படையில் அக்டோபர் மாதத்திற்கான ஜிஎஸ்டி ஒரு இலட்சம் கோடி ரூபாயை தாண்டியுள்ளது.
ஜிஎஸ்டி அறிமுகமானதில் இருந்து ஒரு இலட்சம் கோடி ரூபாய் தாண்டி வசூலாவது இது இரண்டாவது முறை என்பது குறிப்பிடத்தக்கது. இதற்கு முன் இந்த ஆண்டு ஏப்ரல் மாதத்தில் ஒரு இலட்சம் கோடியை தாண்டியது. அக்டோபர் மாதத்திற்கான ஜிஎஸ்டி-ல் சிஜிஎஸ்டி எனும் மத்திய அரசுக்கான வரியாக ரூ. 16,464 கோடி, எஸ்ஜிஎஸ்டி எனும் மாநில அரசுக்கான வரியாக ரூ. 22,826 கோடி, ஐஜிஎஸ்டி ரூ. 53,419 கோடி மற்றும் சுங்க வரியாக ரூ. 8,000 கோடி என மொத்தம் ரூ. 1,00,710 கோடி வசூலாகியிருக்கிறது.