Skip to main content

"ஒன்றுமே இல்லை... பூஜ்ஜியம்" - பட்ஜெட்டை விமர்சிக்கும் எதிர்க்கட்சிகள்

Published on 01/02/2022 | Edited on 01/02/2022

 

RAHUL - MAMATA

 

2022-23ஆம் ஆண்டிற்கான பட்ஜெட்டை நிர்மலா சீதாராமன் இன்று தாக்கல் செய்தார். இதில் பல்வேறு அறிவிப்புகளை வெளியிட்டிருந்தார். இந்த நிலையில், மம்தா பானர்ஜி, காங்கிரஸ் உள்ளிட்ட எதிர்க்கட்சிகள் இன்று தாக்கல் செய்யப்பட்ட பட்ஜெட்டைக் கடுமையாக விமர்சித்துள்ளனர்.

 

பட்ஜெட் தொடர்பாக மம்தா பானர்ஜி, "வேலையின்மை மற்றும் பணவீக்கத்தால் நசுக்கப்படும் சாதாரண மக்களுக்குப் பட்ஜெட்டில் பூஜ்யம்தான் உள்ளது. எதையுமே குறிக்காது பெரிய வார்த்தைகளில் அரசு தோற்றுவிட்டது. பெகாசஸால் சுழற்றிவிடப்பட்ட பட்ஜெட் இது" எனக் கூறியுள்ளார்.

 

அதேபோல் ராகுல் காந்தி தனது ட்விட்டர் பக்கத்தில், "இது மோடி அரசின் பூஜ்ய பட்ஜெட். மாத சம்பளதாரர்கள், நடுத்தர வர்க்கத்தினர், ஏழைகள், சமூகத்தில் பின்தங்கியவர்கள், இளைஞர்கள், விவசாயிகள், சிறு, குறு தொழில்முனைவோருக்கு பட்ஜெட்டில் ஒன்றுமேயில்லை" எனத் தெரிவித்துள்ளார்.

 

மாநிலங்களவை எதிர்க்கட்சித் தலைவர் மல்லிகார்ஜுன கார்கே, "இந்தப் பட்ஜெட் பணக்காரர்களுக்கு மட்டுமானது. ஏழைகளுக்கு இதில் எதுவுமே இல்லை. இது அர்ஜுனன் மற்றும் துரோணாச்சாரியாரின் பட்ஜெட், ஏகலைவனின் பட்ஜெட் அல்ல. அவர்கள் கிரிப்டோகரன்சியைப் பற்றி குறிப்பிட்டனர். அதுகுறித்து எந்தச் சட்டமும் இல்லை, அதுபற்றி முன்பு விவாதிக்கப்படவுமில்லை. இது அவர்களுடைய நண்பர்களுக்குப் பயனளிக்கும் பட்ஜெட்" எனக் கூறியுள்ளார்.

 

சிவசேனா எம்.பி சஞ்சய் ராவத், "மோடி அரசின் பட்ஜெட் எப்போதுமே மாயையாகவும் ஏமாற்றும் வகையிலும் இருக்கிறது. விரைவில் எப்படி ஏழைகள் மேலும் ஏழைகள் ஆகிறார்கள், இப்போதிருக்கும் சில பணக்காரர்கள் எப்படி மேலும் பணக்காரர்கள் ஆகிறார்கள் என்பதை நாம் பார்ப்போம்" எனத் தெரிவித்துள்ளார்.

 

சத்தீஸ்கர் முதல்வர் பூபேஷ் பாகேல், "இது ஒரு இலக்கற்ற பட்ஜெட். விவசாயிகள், பெண்கள் மற்றும் இளைஞர்களுக்கு அளிக்க இந்தப் பட்ஜெட்டில் எதுவுமே இல்லை. விவசாயிகளின் வருமானத்தை இரட்டிப்பாக்குவது மற்றும் ஸ்மார்ட் சிட்டி திட்டம் குறித்து எதையுமே இந்தப் பட்ஜெட் கூறவில்லை" எனக் கூறியுள்ளார்.

 

 

சார்ந்த செய்திகள்