Skip to main content

லக்கிம்பூர் வன்முறை: மத்திய இனைமைச்சர் மகன் நேபாளுக்கு தப்பி ஓட்டம்?

Published on 08/10/2021 | Edited on 08/10/2021

 

ashish misra

 

உத்தரப்பிரதேச மாநிலம் லக்கிம்பூரில் போராட்டத்தில் ஈடுபட்டிருந்த விவசாயிகள், மத்திய உள்துறை இணை அமைச்சர் அஜய் மிஸ்ராவின் மகன் ஆஷிஸ் மிஸ்ராவுக்கு கறுப்புக்கொடி காட்ட முயன்றனர். அப்போது ஆஷிஸ் மிஸ்ராவின் கார் மோதியதில் 4 விவசாயிகள் இறந்ததாகக் கூறப்படுகிறது. மேலும் ஆஷிஸ் மிஸ்ரா, விவசாயி ஒருவரைத் துப்பாக்கியால் சுட்டதாகவும் கூறப்படுகிறது. இதனையடுத்து, விவசாயிகள் போராட்டத்தில் வன்முறை வெடித்தது. இந்த வன்முறையில் பத்திரிகையாளர் உட்பட மேலும் ஐந்து பேர் உயிரிழந்தனர்.

 

இந்த வன்முறை தொடர்பாக ஆஷிஸ் மிஸ்ரா மற்றும் அவரது ஆதரவாளர்கள் என 14 பேர் மீது கொலை வழக்குப் பதிவு செய்யப்பட்டது. இந்தநிலையில், நேற்று (07.10.2021) லக்கிம்பூர் வன்முறை தொடர்பான வழக்கை விசாரித்த உச்ச நீதிமன்றம், வன்முறை தொடர்பாக குற்றஞ்சாட்டப்பட்டவர்கள் யார்? யார் மீது முதல் தகவல் அறிக்கை பதிவு செய்யப்பட்டுள்ளது? யார் யார் கைது செய்யப்பட்டுள்ளனர் என்பன குறித்து அறிக்கை தாக்கல் செய்யுமாறு உத்தரப்பிரதேச அரசுக்கு உத்தரவிட்டது.

 

இந்தச் சூழலில் நேற்று லக்கிம்பூர் வன்முறை தொடர்பாக ஆஷிஸ் மிஸ்ராவின் ஆதரவாளர்களான லுவ்குஷ் ராணா, ஆஷிஷ் பாண்டே ஆகிய இருவர் கைது செய்யப்பட்டனர். மேலும், இந்த வன்முறை சம்பவம் தொடர்பாக இதுவரை அடையாளம் காணப்பட்டுள்ள குற்றஞ்சாட்டப்பட்ட நபர்களைத் தேடும் பணிகள் நடந்துவருவதாக உத்தரப்பிரதேச காவல்துறை அதிகாரி ஒருவர் தெரிவித்திருந்தார்.

 

இதற்கிடையே, லக்கிம்பூர் வன்முறை தொடர்பான விசாரணைக்கு ஆஜராகுமாறு ஆஷிஸ் மிஸ்ராவுக்கு உத்தரப்பிரதேச காவல்துறை சம்மன் அனுப்பியிருந்தது. ஆனால் அவர் இன்று விசாரணைக்கு ஆஜராகவில்லை. இந்தநிலையில் ஆஷிஸ்  மிஸ்ராவுக்கு நாளைவரை அவகாசம் அளித்திருப்பதாக உத்தரப்பிரதேச அரசு இன்று உச்ச நீதிமன்றத்தில் தெரிவித்துள்ளது.

 

அதேநேரத்தில் ஆஷிஸ் மிஸ்ரா நேபாளம் அல்லது உத்தரகாண்டிற்கு தப்பி சென்றிருக்கலாம் என சந்தேகம் எழுந்துள்ளது. ஆஷிஸ்  மிஸ்ராவின் தொலைபேசி எண்ணைக் கண்காணித்தபோது, கடந்த வியாழனன்று அந்த எண்  உத்தரப் பிரதேசம் - நேபாள எல்லையான கவுரி பாண்டா எல்லையில் இருந்ததாகவும், அதன்பிறகு அந்த எண் உத்தரகாண்டில் உள்ள பாஜ்புரா பகுதியில் செயல்பாட்டில் இருந்ததாகவும் காவல்துறை வட்டாரங்கள் தெரிவித்ததாக ஆங்கில ஊடகம் ஒன்று தெரிவித்துள்ளது.

 

இதனையடுத்து நேபாள நாட்டு அதிகாரிகளுக்கும், உத்தரகாண்ட் மாநில அதிகாரிகளுக்கும் ஆஷிஸ் மிஸ்ரா குறித்து தகவல் தெரிவிக்கப்பட்டுள்ளதாகவும், அவரை தேடி கண்டுபிடிக்க தனிப்படை அமைக்கப்பட்டுள்ளதாகவும் மூத்த காவல்துறை அதிகாரி ஒருவர்  ஐ.ஏ.என்.எஸ் செய்தி முகமையிடம் கூறியுள்ளார்.

 

 

சார்ந்த செய்திகள்