பிரணவ் மற்றும் சரண்யா இவர்கள் இருவரும் கடந்த மூன்று வருடத்திற்கு முன்பு காதலித்து திருமணம் செய்து கொண்டனர். இந்த தம்பதிக்கு இரண்டு வயதில் வியான் என்ற மகன் உள்ளான். இந்த தம்பதிக்கு இடையே கருத்து வேறுபாடு ஏற்பட்டதன் காரணமாக சரண்யா கணவரை விட்டு பிரிந்து தன்னுடைய தாய் வீட்டில் வசித்து வந்துள்ளார்.
இந்நிலையில் கடந்த இரண்டு நாட்களுக்கு முன்பு சரண்யா தனது கணவருக்கு போன் செய்து சேர்ந்து வாழ விரும்புவதாகவும், தன்னை வந்து அழைத்து செல்லும்படியும் கேட்டுள்ளார். இதனால் சரண்யாவின் வீட்டிற்கு இரவு வந்த பிரணவ் அங்கேயே தங்கிவிட்டு காலை நம் வீட்டிற்கு செல்லலாம் என்று சரண்யாவிடம் கூறியுள்ளார்.
இரவு அவருடன் உறங்கிக்கொண்டிருந்த மகன் காலையில் பிரணவ் விழித்து பார்க்கும்போது காணாவில்லை. இதன்பின் குழந்தையை பிரணவ்தான் கடத்திவிட்டார் என்று சரண்யா கூச்சலிட்டுள்ளார். போலிஸ் ஸ்டேஷன் சென்று, என் மீது இருக்கும் கோபத்தால் மகன் வியனை ஆள் வைத்து கடத்திவிட்டார் என்று போலிஸிடம் புகாரளித்துள்ளார்.
இதனையடுத்து பிரணவை காவல் நிலையத்திற்கு அழைத்து சென்று விசாரணை நடத்தியுள்ளனர். அதன்பின் சரண்யா மீது சந்தேகமடைந்த போலீஸார், சரண்யாவை அழைத்து விசாரித்தபோது முன்னுக்கு பின் முரணாக பேசியிருக்கிறார். இவ்வாறு அவர் பேசியதை அடுத்து விசாரணையை வேறு விதமாக அனுகியுள்ளனர். அப்போது பல திடுக்கிடும் தகவல்களை கூறியுள்ளார் வியானின் தாய்.
சரண்யாவுக்கும், அந்த பகுதியை சேர்ந்த திருமணம் ஆகாத வாலிபர் ஒருவருக்கும் கடந்த 6 மாதங்களுக்கு முன்பு பேஸ்புக் மூலம் பழக்கம் ஏற்பட்டு உள்ளது. அதன் பிறகு அவர்கள் 2 பேரும் போனில் பேசி தங்கள் நட்பை வளர்த்துக்கொண்டனர். நாளடைவில் அவர்களது பழக்கம் காதலாக மாறியுள்ளது.
பேஸ்புக் காதலனுடன் சேர்ந்து வாழ குழந்தை வியான் இடையூறாக இருப்பார் என்பதால் குழந்தையை கொலை செய்ய சரண்யா திட்டமிட்டிருக்கிறார். அதேசமயம் கொலை பழியை கணவர் மீது போடவும் முடிவு செய்து, வீட்டிற்கு போன் செய்து வீட்டிற்கு வரவழைத்திருக்கிறார்.
சம்பவத்தன்று அதிகாலையில் அனைவரும் வீட்டில் தூங்கிக்கொண்டிருந்த போது குழந்தையை தூக்கிக் கொண்டு அந்த பகுதியில் உள்ள கடலுக்கு சென்ற சரண்யா குழந்தையை கடலில் வீசி கொன்றுவிட்டு ஒன்றும் தெரியாதவர் போல வீட்டிற்கு வந்து நாடகமாடி உள்ளார். இதைத் தொடர்ந்து சரண்யாவை போலீஸார் கைது செய்தனர். அவர் குழந்தையை வீசிய கடல் பகுதிக்கு சென்று போலீசார் தேடுதல் வேட்டையில் ஈடுபட்டனர். அங்கு குழந்தையின் பிணம் கடற்கரையில் ஒதுங்கி இருந்தது கண்டு பிடிக்கப்பட்டு மீட்கப்பட்டது.