கடந்த 28 ஆம் தேதி திங்கட்கிழமை மாலை பாலக்காடு மாவட்டம் அட்டப்பாடி, மஞ்சகண்டி பகுதியில் மூன்று மாவோயிஸ்டுகள் சுட்டுக்கொல்லப்பட்டனர். 29- ஆம் தேதி மீண்டும் அந்த வனப்பகுதியில் கேரள காவல்துறையினர் நடத்திய தேடுதல் வேட்டையில் அடர் வனப்பகுதிக்குள் ஒரு சிறு கூடாரம் இருந்ததாகவும் அதனை நோக்கிச் செல்லும் போது மேலும் ஒரு மாவோயிஸ்ட் கொல்லப்பட்டதாகவும் கேரள அரசு தெரிவித்திருந்தது. இந்தத் தாக்குதலை நடத்தியது கேரளாவின் 'தண்டர்போல்ட்' எனப்படும் நக்சல் ஒழிப்புப் பிரிவாகும். மாவோயிஸ்டுகளின் மீதான தாக்குதல்கள் கேரள கம்யூனிஸ்டுகள் மத்தியில் மோதலை உருவாக்கியுள்ளது.
தமிழ்நாடு கேரளா வனப்பகுதியில் சுற்றித்திரிந்த மாவோயிஸ்டுகளான ரேமா, அரவிந்த், கார்த்திக், மணிவாசகம் ஆகிய நான்கு பேரை கேரளாவின் நக்சல் ஒழிப்புப் பிரிவான 'தண்டர்போல்ட்' பிரிவு சுட்டுக்கொன்றுள்ளது. இதில் இருவர் தமிழகத்தினை சேர்ந்தவர்கள் என்றும், இருவர் கர்நாடகாவை சேர்ந்தவர்கள் என்றும் கேரள காவல் துறையினர் தெரிவித்துள்ளனர்.
இதில், கார்த்திக் புதுக்கோட்டை மாவட்டம் திருமயம் வட்டம் கல்லூர் பகுதியை சேர்ந்தவர். அவரது தாயார் மீனா 'இறந்தது தங்கள் மகன்தான் என்பதை உறுதி செய்ய வேண்டியுள்ளதால் உடலை பார்ப்பதற்கு அனுமதிக்க வேண்டும் என்று பாலக்காடு காவல் கண்காணிப்பாளரிடம் அனுமதி வேண்டியுள்ளார். இறந்தவர்களில் மற்றோருவர் மணிவாசகம், வயது 55 சேலம் மாவட்டம் ஓமலூர் பகுதியை சேர்ந்தவர். தற்போது இவரது மனைவி கலா என்பவரும் சிறையில் இருப்பதாகக் கேரள காவல்துறை தெரிவித்துள்ளது.
இந்நிலையில் கேரளாவில் பல்வேறு இடங்களிலும் மாவோயிஸ்டுகளின் மீதான தாக்குதல்களுக்குக் கண்டனம் தெரிவித்து வருகின்றனர். துப்பாக்கி சூட்டில் இறந்து போன மணிவாசகம் உடல் நிலை சரியில்லாமல் இருந்ததாகவும் சரணடையத் தயாராக இருந்தும் வேண்டுமேன்றே சுட்டுக்கொன்றதாகவும் குற்றம் சாட்டி வருகின்றனர். இதற்கிடையில் மாவோயிஸ்டுகள் சுட்டுக் கொல்லப்பட்டதற்கு கேரள சி.பி.ஐ. கம்யூனிஸ்ட் கட்சியின் மாநில செயலாளர் கானம் ராஜேந்திரன் கண்டனம் தெரிவித்துள்ளார். ஒரு போதும் மாவோயிஸ்டுகள் சுட்டுக்கொல்லப்படுவதை ஏற்றுக் கொள்ள முடியாது, மேலும் மத்திய அரசின் தீவீரவாத எதிர்ப்பு போராட்ட நிதியை பெறுவதற்காக கேரள அரசு இவ்வாறு செய்வதாக குற்றம் சாட்டியுள்ளார்.
கேரள மாநிலம் பாலக்காடு மாவட்டம் வாளையார் பகுதியில் இரண்டு பெண்குழந்தைகள் பாலியல் பலாத்காரம் செய்யப்பட்டு கொலை செய்யப்பட்ட வழக்கில் குற்றவாளிகள் விடுதலை அடைந்துவிட்டனர். அந்த வழக்கை அரசு தரப்பு சரியாக நடத்தாததால் இந்த விடுதலை குற்றவாளிகளுக்குக் கிடைத்தது என்ற குற்றச்சாட்டை மறைக்க இந்தத் தாக்குதல் நடைபெற்றுள்ளது என கேரளா உயர்நீதிமன்ற ஓய்வு பெற்ற நீதிபதி கெமாஸ் பாஷா தெரிவித்துள்ளார்.
மாவோயிஸ்டுகள் சுட்டுக்கொல்லப்பட்ட இடம் மற்றும் தற்போது உடல்கள் வைக்கப்பட்டுள்ள திருச்சூர் மருத்துவ கல்லூரி மருத்துவமனையின் அருகில் எந்த பத்திரிகையாளரும் அனுமதிக்கப்படாமல் காவல்துறையினர் கூறுவதை மட்டும் செய்திகளாக போட வேண்டும் என நிர்பந்திப்பது சந்தேகத்தினை ஏற்படுத்துவதாகவும் கூறப்படுகிறது.