Skip to main content

''எழுதி வைத்துக்கொள்ளுங்கள்...'' - பாஜகவிற்கு சவால் விட்ட ராகுல்

Published on 01/07/2024 | Edited on 01/07/2024
"Keep it in writing..."-Rahul challenged the BJP

இன்று கூடிய நாடாளுமன்ற மக்களவை பேரவையில் எதிர்க்கட்சி தலைவராக தேர்ந்தெடுக்கப்பட்டுள்ள ராகுல் காந்தி முதல் முறையாக உரையாற்றினார். 'ஜெய் சம்விதான்' என அரசமைப்பை குறிப்பிட்டு மக்களவையில் தனது உரையை ராகுல் காந்தி தொடங்கிய பொழுது பாஜக உறுப்பினர்கள் 'பாரத் மாதா கி ஜெய்' என  முழக்கம் எழுப்பி எதிர்ப்பு தெரிவித்தனர்.

தொடர்ந்து பேசிய ராகுல் காந்தி, ''அரசியலமைப்பை நாங்கள் பாதுகாத்துக் கொள்வோம். 20க்கும் மேற்பட்ட வழக்குகள் என் மீது பதியப்பட்டுள்ளது. எனது வீட்டையும் எடுத்துக் கொண்டனர். அரசியல் சாசனத்தின் மீது தொடர்ந்து தாக்குதல் நடக்கிறது' என இந்து கடவுள் சிவன் படத்தைக் காண்பித்து மக்களவையில் ராகுல் காந்தி உரையாற்றினார். ஆனால் கடவுள் படத்தைக் காட்டியதற்கு சபாநாயகர் ஓம் பிர்லா எதிர்ப்பு தெரிவித்தார்.

தொடர்ந்து உரையாற்றிய ராகுல் காந்தி, 'மக்களவையில் சிவன் படத்தை காட்ட அனுமதி இல்லையா? சிவனின் திரிசூலம் என்பது வன்முறைக்கானது அல்ல அகிம்சைக்கானது. கடவுள் சிவபெருமானின் படத்தை காங்கிரஸ் கட்சி காட்டியதால் சிலருக்கு கோபம் வந்திருக்கும். ஊடகங்கள் வாயிலாக என் மீது தொடர் தாக்குதல் நடத்தப்பட்டது. பாஜக ஆட்சியில் சிறுபான்மையினர் மற்றும் தலித் மக்கள் ஒதுக்கப்பட்டு வருகின்றனர். அதிகாரம் கிடைக்கவில்லை என்றாலும் எதிர்க்கட்சியாக இருப்பது மகிழ்ச்சி அளிக்கிறது. அதிகாரத்தை விட மேலானது ஒன்று இருக்கிறது. அதிகாரத்தை விட உண்மையை நம்புபவன் நான். பாஜகவினர் உண்மையான இந்துக்கள் அல்ல' என்றார். இதனால் பாஜக எம்பிக்கள் அமளியில் ஈடுபட்டனர். தொடர்ந்து பேசிய ராகுல் காந்தி 'கடவுளிடமே நேரடியாக பேசக்கூடியவர் பிரதமர் மோடி, காரணம் அவர்தான் நம்மைப்போல் பயாலஜிக்கலாக பிறக்கவில்லையே. பிரதமர் மோடி ஒன்றும் ஒட்டுமொத்த இந்துக்களின் பிரதிநி அல்ல. உண்மையான இந்துக்கள் வெறுப்பை விதைக்க மாட்டார்கள். ஆனால் பாஜக 24 மணிநேரமும் வெறுப்பைத் தூண்டுகிறது'' என்றார்.

மேலும் தொடர்ந்து பேசிய ராகுல், ''மோடிக்கு பயந்து பாஜக தலைவர்கள் கூட எனக்கு வணக்கம் தெரிவிப்பதில்லை. அந்த அளவிற்கு பாஜக தலைவர்களைக் கூட மோடி பயமுறுத்தி வைத்திருக்கிறார். அரவணைத்து ஆதரிக்க வேண்டிய விவசாயிகளை தீவிரவாதிகள் எனக் கூறுகின்றனர். திருத்த சட்டம் விவசாயிகளுக்கானது அல்ல அது அம்பானி, அதானிகளுக்கானது. அக்னி வீரர் என்பவர் 'யூஸ் அண்ட் த்ரோ' ஊழியர்கள் போல் நடத்தப்படுகின்றனர். 7 ஆண்டுகளில் 70 முறை நீட் வினாத்தாள் கசிந்துள்ளது. பணம் படைத்தவர்கள் எழுதும் தேர்வாக நீட் மாறியுள்ளது. இதனால் மருத்துவக்கல்வி வியாபார பொருளாகிவிட்டது. அக்னி வீரர் திட்டத்தில் சேர்பவர்களுக்கு முறையான பயிற்சி அளிக்கப்படுவதில்லை. அக்னி வீரர் ஒருவர் ராணுவத்தில் உயிரிழந்தால் அவருக்கு இழப்பீடும் தரப்படாது. மணிப்பூரில் உள்நாட்டு கலவரம் மூளும் மோசமான சூழ்நிலை உருவானதற்கு பாஜக அரசே காரணம். மத்திய அரசின் கொள்கையால் மணிப்பூரில் கலவரம் ஏற்பட்டது. வன்முறை ஏற்பட்ட மணிப்பூருக்கு மோடியும், அமித்ஷாவும் இதுவரை செல்லாதது ஏன்? கடவுளுடன் தொடர்பில் உள்ள பிரதமர் கடவுளிடம் கேட்டுத்தான் பணமதிப்பிழப்பு நடவடிக்கை மேற்கொண்டாரா? குஜராத் தேர்தலில் பாஜகவை இந்தியா கூட்டணி தோற்கடிக்கும். இதை எழுதி வைத்துக் கொள்ளுங்கள்'' என்றார்.

அக்னி வீரர் திட்டம் குறித்து ராகுல் பேசுகையில் இடைமறித்த பாதுகாப்புத்துறை அமைச்சர் ராஜ்நாத் சிங்,  'ராகுல் தவறான விபரத்தை சொல்கிறார். அக்னி வீரர் உயிரிழந்தால் மத்திய அரசு ஒரு கோடி ரூபாய் இழப்பீடு வழங்குகிறது' என்றார். அதேபோல் இந்துக்களை அவமதித்துப் பேசியதற்கு ராகுல்காந்தி மன்னிப்பு கேட்க வேண்டும் எனப் பாஜக உள்துறை அமைச்சர் அமித்ஷா கண்டனம் தெரிவித்துள்ளார்.

சார்ந்த செய்திகள்

 

Next Story

''விஜய்யின் குரல் வலுவானது அல்ல; வருந்தத்தக்கக் குரல்'' - தமிழிசை கருத்து

Published on 03/07/2024 | Edited on 03/07/2024
'Vijay's voice is not a strong voice; Regretful voice'-tamizhisai comment

தமிழகத்தில் உள்ள அனைத்து தொகுதிகளிலும் அதிக மதிப்பெண்கள் பெற்ற மாணவர்களுக்கு நடிகர் விஜய் நேரில் அழைத்துப் பாராட்டு தெரிவித்து வருகிறார். கடந்த வாரம் 28 ஆம் தேதி தென் மாவட்டங்களைச் சேர்ந்த மாணவர்களுக்குப் பாராட்டு விழா நடைபெற்றது. இந்த நிலையில், இன்று புதுச்சேரி காரைக்கால் உட்பட 19 மாவட்டங்களில் அதிக மதிப்பெண்கள் பெற்ற மாணவர்களுக்கான பாராட்டு விழா நடைபெற்று வருகிறது.

இந்நிலையில் மேடை ஏறிய நடிகர் விஜய் மாணவர்கள் மத்தியில் உரையாற்ற தொடங்கினார். அவர் உரையில், ''கடந்த மே மாதம் ஐந்தாம் தேதி நீட் எக்ஸாம் நடந்தது. அதில் சில குளறுபடிகள் எல்லாம் நடந்ததா செய்திகள் எல்லாம் பார்த்தோம், படித்தோம். அதன் பிறகு என்ன ஆகிவிட்டது என்று பார்த்தால் நீட் தேர்வுக்கு மேலே இருக்கின்ற நம்பகத்தன்மை மக்கள் மத்தியில் போய்விட்டது. இனிமேல் நாடு முழுக்க நீட் தேவை இல்லை என்பதை நாம் செய்திகள் மூலம் தெரிந்து கொண்ட விஷயம். சரி இதற்கு என்னதான் தீர்வு, நீட் விலக்குதான் தீர்வு. தமிழக அரசு சட்டமன்றத்தில் கொண்டு வந்திருக்கும் தீர்மானத்தை நான் மனப்பூர்வமாக வரவேற்கிறேன். இதற்கு ஒன்றிய அரசு காலதாமதம் செய்யாமல் தமிழ்நாட்டு மக்களுடைய உணர்வுகளுக்கு மதிப்பு கொடுத்து இதைச் சீக்கிரமாக சால்வ் பண்ண வேண்டும் எனக் கேட்டுக்கொள்கிறேன்.

இதற்கு  நிரந்தர தீர்வுதான் என்ன என்று கேட்டால் கல்வி வந்து பொதுப்பட்டியலில் இருந்து மாநில பட்டியலுக்கு கொண்டுவர வேண்டும். ஒருவேளை அதில் ஏதாவது சிக்கல் இருக்கு என்றால் ஒரு இடைக்கால தீர்வாக இந்திய அரசியலமைப்பு சட்டத்தை திருத்தி ஒரு சிறப்பு பொதுப்பட்டியல் என்று உருவாக்கி அதில் கல்வி மற்றும் சுகாதாரத்தைச் சேர்க்க வேண்டும். இப்பொழுது இருக்கிற பொதுப்பட்டியலில் என்ன பிரச்சனை என்றால் அதில் உள்ள துறைகள் எல்லாம் பார்த்தால் மாநில அரசுகளுக்கு என்னதான் அதிகாரம் இருந்தாலும் அது முழுக்க முழுக்க ஒன்றிய அரசின் கட்டுப்பாட்டில் தான் இருக்கு. மாநில அரசுகளுக்கு முழு சுதந்திரம் தரப்பட வேண்டும் என்பதுதான் என்னுடைய தாழ்மையான வேண்டுகோள். இந்தச் சந்தர்ப்பத்தில் என்னுடைய பரிந்துரையைச் சொல்ல வேண்டும் என ஆசைப்பட்டேன். இதுதான் என்னுடைய தனிப்பட்ட ஒரு கருத்து நீட்டைப் பற்றி'' என்றார்.

'Vijay's voice is not a strong voice; Regretful voice'-tamizhisai comment

நடிகர் விஜய்யின் நீட் பற்றிய பேச்சு குறித்து தனியார் சேனலுக்கு தன்னுடைய கருத்தை பதிவு செய்துள்ள தமிழிசை சௌந்தரராஜன், ''இது வலுவான குரல் அல்ல வருந்தத்தக்க குரல் என்று நான் சொல்கிறேன். எல்லாரும் சொல்கிறார்கள் என்பதற்காக மாணவர்களுக்கு நன்மை தருகின்ற ஒரு திட்டத்தை வெளியே தள்ள முடியாது. சட்ட விதிகளுக்குள் பேசினால் சுப்ரீம் கோர்ட் ஆர்டர். விஜய் 3 விஷயங்களை சொல்லி இருக்கிறார். நீட் பிற்படுத்தப்பட்ட, தாழ்த்தப்பட்ட பட்டியல் இன  மாணவர்களுக்கு எதிராக இருக்கிறது என்று சொல்லியுள்ளார். அதை நான் மறுக்கிறேன். நீட்டில் எல்லா இட ஒதுக்கீடும் பின்பற்றப்படுகிறது. இரண்டாவது சிலபஸ்-ஐ வைத்து சொல்லி இருக்கிறார். நீட்டில் எல்லா சிலபஸ்ஸும் பின்பற்றப்படுகிறது. மூன்றாவது கல்வி மாநிலப் பட்டியலில் 1975 க்கு முன்னால் இருந்தது என்று சொல்கிறார். அது திமுக இருக்கும் போது தான் மத்திய பட்டியலுக்கு மாற்றப்பட்டது. அவர்கள் (திமுக) மத்தியில் பல ஆண்டுகள் இருந்த பின்பும் மாநில பட்டியலுக்கு கொண்டு வர முயற்சி செய்யவில்லை. ஆனால் புதிய கல்விக் கொள்கை மத்தியப் பட்டியல், மாநிலப் பட்டியல் என இல்லாமல் பொதுவான மக்களுக்கு, மாணவர்களுக்கு உதவி செய்ய வேண்டும் என்ற நோக்கில் உருவாக்கப்பட்டுள்ளது. நீட் தேர்வை பொறுத்தவரை எத்தனை கிராமப்புற மாணவர்கள் இதற்கு நீட் தேர்வுக்கு முன்னால் பயன் பெற்றார்கள்? நீட் தேர்வுக்கு பின்னால் பலன் பெற்றார்கள் என்று பார்க்க வேண்டும்' எனத் தெரிவித்துள்ளார்.

Next Story

மக்களவை தேதி குறிப்பிடாமல் ஒத்திவைப்பு!

Published on 02/07/2024 | Edited on 02/07/2024
Adjournment of Lok Sabha without specifying a date

18வது மக்களவையின் முதல் கூட்டத்தொடர் கடந்த 24 ஆம் தேதி (24.06.2024) காலை 11 மணியளவில் தொடங்கியது. இந்த கூட்டத் தொடரையொட்டி மக்களவைக்குப் புதிதாகத் தேர்வு செய்யப்பட்ட எம்.பி.க்களுக்கு தற்காலிக சபாநாயகர் பர்த்ருஹரி மகதாப் பதவிப்பிரமாணம் செய்து வைத்தார். அதனைத் தொடர்ந்து மக்களவை சபாநாயகர் தேர்தல் கடந்த 26 ஆம் தேதி (26.06.2024) நடைபெற்றது. இதில் பாஜகவின் ஓம் பிர்லா, காங்கிரசின் கொடிக்குன்னில் சுரேஷ் ஆகியோர் போட்டியிட்டனர். இந்த தேர்தலில் சபாநாயகராக ஓம் பிர்லா தேர்வு செய்யப்பட்டார்.

இதனையடுத்து நாடாளுமன்றத்தின் இரு அவைகளின் கூட்டுக் கூட்டத்தில் குடியரசுத் தலைவர் திரௌபதி முர்மு கடந்த 27 ஆம் தேதி (27.06.2024) உரையாற்றினார். இதனையொட்டி குடியரசுத் தலைவர் உரைக்கு நன்றி தெரிவிக்கும் விவாதம் மீதான விவாதத்தில் கலந்துகொண்டு மக்களவையில் எதிர்க்கட்சித் தலைவர் ராகுல் காந்தி எம்பி, திரிணாமுல் காங்கிரஸ் எம்பி மஹுவா மொய்த்ரா, திமுக எம்பி ஆ.ராசா எனப் பலரும் உரையாற்றினார்.

Adjournment of Lok Sabha without specifying a date

இத்தகைய சூழலில் தான் மக்களவையில் குடியரசுத் தலைவர் உரைக்கு நன்றி தெரிவிக்கும் தீர்மானத்துக்குப் பிரதமர் மோடி இன்று (02.07.2024) பதில் அளித்துப் பேசினார். இதற்கிடையே மணிப்பூர் விவகாரம், நீட் தேர்வு உள்ளிட்ட பிரச்சனைகளை முன்வைத்து எதிர்க்கட்சிகள் முழக்கமிட்டனர். எதிர்க்கட்சிகளின் கடும் அமளிக்கு இடையே மக்களவையில் பிரதமர் மோடி 2 மணி நேரம் 15 நிமிடங்கள் பதில் உரையாற்றினார். அதனைத் தொடர்ந்து குடியரசுத் தலைவர் உரைக்கு நன்றி தெரிவிக்கும் தீர்மானம் குரல் வாக்கெடுப்பு மூலம் நிறைவேற்றப்பட்டது.

இந்நிலையில் மக்களவை கூட்டத்தொடரின் முதல் அமர்வைத் தேதி குறிப்பிடாமல் சபாநாயகர் ஓம் பிர்லா ஒத்திவைத்துள்ளார். மக்களவை கூட்டத்தொடர் நாளை (03.07.2024) வரை நடக்கவிருந்த நிலையில் ஒரு நாள் முன்னதாகவே ஒத்திவைக்கப்பட்டுள்ளது. முன்னதாக நீட் தேர்வு முறைகேடு தொடர்பாகச் சிறப்பு விவாதம் நடத்த வேண்டுமென்று இந்தியா கூட்டணிக் கட்சிகள் சார்பில் வலியுறுத்தப்பட்டிருந்தது. மேலும் நீட் தேர்வு முறைகேடுகள் குறித்து மக்களவையில் நாளை (03.07.2024) விவாதிக்க வேண்டும் எனப் பிரதமர் மோடிக்கு ராகுல் காந்தி கடிதம் எழுதி இருந்த நிலையில் மக்களவையைத் தேதி குறிப்பிடாமல் சபாநாயகர் ஓம் பிர்லா ஒத்திவைத்துள்ளது குறிப்பிடத்தக்கது.