Skip to main content

கத்துவா சிறுமி வழக்கினை பஞ்சாபிற்கு மாற்றி உச்சநீதிமன்றம் உத்தரவு!

Published on 07/05/2018 | Edited on 07/05/2018

கத்துவா சிறுமி பாலியல் வன்புணர்வு மற்றும் படுகொலை செய்யப்பட்ட வழக்கு தொடர்பான விசாரணையை, பஞ்சாப் நீதிமன்றத்திற்கு மாற்றி உச்சநீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

 

deepika

 

ஜம்மு மாநிலம் கத்துவா மாவட்டத்தைச் சேர்ந்த ஏழு வயது சிறுமி, கடந்த ஜனவரி 10ஆம் தேதி கடத்தப்பட்டார். ஏழு நாட்களுக்குப் பிறகு பிணமாக மீட்கப்பட்ட சிறுமி, போதை மருந்து கொடுத்து கூட்டு பாலியல் வன்கொடுமை செய்து, படுகொலை செய்யப்பட்டிருப்பது விசாரணையில் தெரியவந்தது. இந்த சம்பவத்தில் தொடர்புடையவர்கள், வழக்கை மூடிமறைக்க முயன்ற உள்ளூர் காவலர்கள் என எட்டு பேரின் வழக்குப்பதிவு செய்து குற்றப்பத்திரிகை தாக்கல் செய்தது காவல்துறை.

 

இதுதொடர்பான வழக்கு விசாரணை ஜம்முவின் கத்துவா நீதிமன்றத்தில் நடைபெற்று வந்த நிலையில், குற்றவாளிகளுக்கு ஆதரவாக வந்த மிரட்டல்கள் உள்ளிட்ட எதிர்பாராத சம்பவங்களால் வழக்கு விசாரணை முடக்கப்படும் வாய்ப்பு உருவானது. இந்த வழக்கில் கொல்லப்பட்ட சிறுமியின் பெற்றோர் சார்பு வழக்கறிஞர் தீபிகா சிங் தனக்கு மிரட்டல்கள் விடுக்கப்படுவதாக தெரிவித்திருந்தார். அதேபோல், சிறுமியின் தந்தை வழக்கு விசாரணை முறையாக நடக்கவேண்டுமென்றால், அது வேறு நீதிமன்றத்திற்கு மாற்றப்பட வேண்டும் என உச்சநீதிமன்றத்தில் மனு அளித்திருந்தார்.

 

இதுதொடர்பான வழக்கு இன்று உச்சநீதிமன்றத்தில் தலைமை நீதிபதி தீபக் மிஷ்ரா அடங்கிய அமர்வு முன்பு விசாரணைக்கு வந்தபோது, வழக்கு விசாரணையை பஞ்சாப் மாநிலம் பதான்கோட் நீதிமன்றத்திற்கு மாற்றி உத்தரவிட்டனர். மேலும், வழக்கு விசாரணை முழுவதும் படமாக்கப்பட வேண்டும் மற்றும் வழக்கறிஞர்கள் மற்றும் சாட்சியங்களுக்கு உரிய பாதுகாப்பு வழங்கப்படவேண்டும் எனவும் உத்தரவிடப்பட்டுள்ளது. 

 

 

 

சார்ந்த செய்திகள்