ஜார்க்கண்ட் மாநிலத்தின் மொத்தம் உள்ள 81 சட்டப்பேரவை தொகுதிகளுக்கும். கடந்த நவம்பர் மாதம் 30- ஆம் தேதி முதல் ஐந்து கட்டங்களாக தேர்தல் நடைபெற்றது. இந்த தேர்தலில் 65.17% வாக்குகள் பதிவான நிலையில், வாக்குகளை எண்ணும் பணி (23.12.2019) அன்று நடந்தது.
அதில் பாஜக கட்சி- 25 இடங்களிலும், ஏஜெஎஸ்யூ கட்சி- 2 இடங்களிலும், கம்யூனிஸ்ட் கட்சி- 1 இடத்திலும், தேசிய வாத காங்கிரஸ் கட்சி- 1 இடத்திலும், சுயேட்சை- 2 இடங்களிலும், காங்கிரஸ் கட்சி- 16 இடங்களிலும், ஜார்க்கண்ட் முக்தி மோர்ச்சா- 30 இடங்களிலும், ஜார்க்கண்ட் விகாஸ் மோர்ச்சா- 3 இடங்களிலும், ராஷ்ட்ரிய ஜனதா தளம்- 1 இடத்திலும் வெற்றி பெற்றன. இதில் காங்கிரஸ் கட்சி ஜார்க்கண்ட் முக்தி மோர்ச்சா கட்சியுடன் கூட்டணி அமைத்து தேர்தலை சந்தித்த நிலையில், இந்த கூட்டணி 46 இடங்களை கைப்பற்றி ஆட்சியமைக்கிறது.
இந்நிலையில் ஜார்க்கண்ட் மாநிலத்தில் ஆட்சியமைக்க ஆளுநரை சந்தித்த ஜார்க்கண்ட் முக்தி மோர்ச்சா கட்சியின் தலைவர் ஹேமந்த் சோரன், தனக்கு 50 சட்டமன்ற உறுப்பினர்களின் ஆதரவு இருப்பதாக கூறி, சட்டமன்ற உறுப்பினர்களின் ஆதரவு கடிதத்தை ஆளுநர் திரௌபதி முர்முவையிடம் வழங்கி ஆட்சியமைக்க உரிமை கோரினார்.
அதை தொடர்ந்து ஜார்க்கண்ட் மாநில முதல்வராக இரண்டாவது முறையாக டிசம்பர் 29- ஆம் தேதி ஹேமந்த் சோரன் பதவியேற்க உள்ளார்.