நடைமேடையில் தூங்கிக் கொண்டிருந்தவர்கள் மீது லாரி மோதி விபத்தை ஏற்படுத்திய சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.
மகாராஷ்டிரா மாநிலம், புனே நகரில் உள்ள கேஸ்னந்த பாடா பகுதியில் உள்ள சாலை நடைமேடையில் சில பேர் நேற்று இரவு தூங்கிக் கொண்டிருந்தனர். அப்போது அந்த வழியில் அதிவேகமாக வந்த லாரி ஒன்று, நடைமேடையில் தூங்கிக் கொண்டிருந்தவர்கள் மீது மோதியது. இந்த பயங்கர விபத்தில், 2 குழந்தைகள் உள்பட 3 பேர் பரிதாபமாக உயிரிழந்தனர்.
இதையடுத்து, விபத்தில் படுகாயமடைந்தவர்களை அங்கிருந்தவர்கள் மீட்டு அருகில் உள்ள மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். மேலும், இந்த சம்பவம் குறித்து போலீசாருக்கு தகவல் கொடுக்கப்பட்டது. தகவல் அறிந்து விரைந்த வந்த போலீசார், லாரி டிரைவரை கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். சாலை நடைமேடையில் தூங்கிக் கொண்டிருந்தவர்கள் லாரி மோதி பலியான சம்பவம் அப்பகுதியில் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.