Skip to main content

வடமாநிலங்களை புரட்டிப்போடும் கனமழை; தமிழக முதல்வர் ஆறுதல்

Published on 10/07/2023 | Edited on 10/07/2023

 

nn

 

வடமாநிலங்களில் பெய்து வரும் கனமழை காரணமாக பல்வேறு மாநிலங்களில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டுள்ளது. இமாச்சலப்பிரதேசம், உத்தரகண்ட், பஞ்சாப், டெல்லி, காஷ்மீர் என பல மாநிலங்களில் தொடர்ந்து பெய்து வரும் கனமழை காரணமாக வெள்ளப்பெருக்கு ஏற்பட்டுள்ளது.

 

குறிப்பாக இமாச்சலப்பிரதேசம் பீஸ் நதியில் ஏற்பட்டுள்ள வெள்ளப்பெருக்கால் அருகில் உள்ள மருத்துவமனையில் வெள்ள நீரானது புகுந்தது. இதனால் அங்கிருந்த நோயாளிகள் மீட்கப்பட்டனர். அதேபோல் இமாச்சலப்பிரதேசம் மண்டி பகுதியில் உள்ள வரலாற்றுப் பெருமை வாய்ந்த புரானா என்னும் பாலம் வெள்ளத்தில் அடித்துச் செல்லப்பட்டது. இமாச்சலப்பிரதேசத்தின் குலு மலைப்பகுதிகளிலும் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டுள்ளது.

 

உத்தரகண்ட் மாநிலத்தின் டேராடூன் பகுதிகளில் இடைவிடாது 36 மணி நேரம்  பெய்த மழையால் ஆறுகளில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டுள்ளது. அதேபோல் ஜம்மு - காஷ்மீரில் உதம்பூர் மாவட்டத்தில் பெய்த தொடர் கனமழை காரணமாக மூன்று பகுதிகளை இணைக்க கூடிய பாலம் சரிந்து விழுந்தது. பஞ்சாப், டெல்லியிலும் தொடர்ந்து கனமழை பொழிந்து வருகிறது.

 

இந்நிலையில் வெள்ளப்பெருக்கில் சிக்கியுள்ள இமாச்சலப்பிரதேச மாநிலத்திற்கு தமிழக அரசு உதவி செய்யும் என தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் தெரிவித்துள்ளார். இது தொடர்பாக அவர் வெளியிட்டுள்ள ட்விட்டர் பதிவில், 'கனமழையால் பாதிக்கப்பட்டுள்ள இமாச்சலப்பிரதேசத்திற்கு தமிழக அரசு உதவும். வெள்ளத்தால் இமாச்சலப்பிரதேசம் பாதிக்கப்பட்டுள்ளதை அறிந்து கவலை அடைகிறேன். மழையால் பாதிக்கப்பட்டுள்ள மக்களுக்கு ஆறுதல் தெரிவித்துக் கொள்கிறேன்' எனத் தெரிவித்துள்ளார்.

 

 

சார்ந்த செய்திகள்