17வது சீசன் ஐ.பி.எல் 2024 தொடரானது கடந்த மார்ச் மாதம் 23ஆம் தேதி தொடங்கி நடைபெற்று வருகிறது. இதில் 8வது லீக் ஆட்டம் சன்ரைசர்ஸ் ஹைதராபாத் மற்றும் மும்பை அணிகளுக்கு இடையே கடந்த 27ஆம் தேதி அன்று ஹைதராபாத்தில் நடைபெற்றது. இதில் டாஸ் வென்ற மும்பை அணியின் கேப்டன் ஹர்திக் பாண்ட்யா முதலில் பந்துவீச்சை தேர்வு செய்தார்.
அதன்படி, முதலில் பேட்டிங் செய்த ஐதராபாத் அணி 20 ஓவர்கள் முடிவில் 3 விக்கெட் இழப்புக்கு 227 ரன்கள் குவித்தது. இதன் மூலம் ஐபிஎல் வரலாற்றில் ஒரு இன்னிங்ஸில் அதிக ரன்கள் எடுத்த அணி என்ற புதிய வரலாற்று சாதனையை படைத்தது. அதனைத் தொடர்ந்து 278 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் மும்பை அணி அடுத்து களமிறங்கி விளையாடத் தொடங்கியது. மும்பை அணியின் தொடக்க ஆட்டக்காரர்களாக இஷான், ரோஹித் ஷர்மா சிறப்பான துவக்கம் தந்தனர். இப்போட்டியில், இஷான் 13 பந்துகளில் 4 சிக்சர்கள் உட்பட 34 ரன்கள் எடுத்து அவுட் ஆனார். அதன் பின்பு, ரோஹித் ஷர்மா 12 பந்துகளில் 26 ரன்களில் ஆட்டமிழந்து வெளியேறினார். இந்த நிலையில், ரோஹித் ஷர்மா ஆட்டமிழந்ததை கொண்டாடிய சி.எஸ்.கே அணியின் ரசிகர் ஒருவரை, ரோஹித் ஷர்மாவின் ரசிகர் அடித்து கொலை செய்த சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
மகாராஷ்டிரா மாநிலம், கோலாப்பூர் நகரில் அனுமந்த்வாடி எனும் கிராமத்தில், இந்த போட்டியை காண்பதற்காக சி.எஸ்.கே ரசிகரான பந்தோபண்ட் திபிலே (63) என்பவர் நண்பர் ஒருவரின் வீட்டுக்கு சென்றுள்ளார். அதே வீட்டுக்கு திபிலேவின் மற்றொரு நண்பரான பலவந்த் ஜாஞ்ஜே (50) என்பவரும் சென்றுள்ளார். இருவரும் நண்பரின் வீட்டில் ஐ.பி.எல் போட்டியை ஆர்வத்துடன் கண்டு களித்தனர்.
அப்போது, ரோஹித் ஷர்மா அவுட்டானதும், அதனை திபிலே மகிழ்ச்சியுடன் கொண்டாடியுள்ளார். இதில் ஆத்திரமடைந்த ரோஹித் ஷர்மாவின் ரசிகர் ஜாஞ்ஜே, திபிலேவுடன் வாக்குவாதத்தில் ஈடுபட்டுள்ளார். இருவருக்கும் ஏற்பட்ட வாக்குவாதம் ஒரு கட்டத்தில் சண்டையாக முற்றியது. இதையடுத்து, ஜாஞ்ஜே உடனே அந்த இடத்தில் இருந்து வெளியே சென்றுவிட்டார். சிறிது நேரத்திற்கு பின்னர், சாகர் என்பவரை அழைத்துக் கொண்டு திரும்பி வந்த ஜாஞ்ஜே, திபிலேவை அடித்து உதைத்துள்ளார். இதையடுத்து அவர்கள் இருவரும், மரப்பலகை மற்றும் கம்பு ஆகியவற்றை கொண்டு திபிலேசை கடுமையாக தாக்கியுள்ளனர். இதில், திபிலே, மயங்கி கீழே விழுந்துள்ளார்.
இதையடுத்து, இதைக் கண்ட அக்கம்பக்கத்தினர், திபிலேவை மீட்டு சிகிச்சைக்காக மருத்துவமனையில் அனுமதித்தனர். அங்கு அவர் தீவிர சிகிச்சை பெற்று வந்தார். இருப்பினும், நேற்று முன் தினம் (30-04-24) அவர் சிகிச்சை பலனின்றி பரிதாபமாக உயிரிழந்துவிட்டார். இதனையடுத்து, இந்த சம்பவம் குறித்து போலீசாருக்கு தகவல் கொடுக்கப்பட்டது. தகவலின் பேரில், விரைந்து வந்த போலீசார் வழக்குப்பதிவு செய்து தீவிர விசாரணை நடத்தி வந்தனர். அதில், திபிலேவை கொலை செய்த ஜாஞ்ஜே மற்றும் சாகர் ஆகிய இருவரையும் கைது செய்து நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தினர். கிரிக்கெட் விளையாட்டுக்காக நண்பரை கொலை செய்த சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.