உலகம் முழுவதும் கரோனா பாதிப்பு உச்சத்தில் இருந்து வருகிறது. இதுவரை இரண்டு கோடிக்கும் அதிகமானவர்களை இந்த நோய்த் தாக்கியுள்ளது. 8 லட்சத்துக்கும் மேற்பட்டவர்கள் இந்த நோயினால் உயிரிழந்துள்ளனர்.
இந்தியாவைப் பொறுத்தமட்டில் மராட்டியம், தமிழ்நாடு, ஆந்திரா, டெல்லி, கர்நாடகா, தெலுங்கானா மாநிலங்களில் கரோனா மிக வேகமாகப் பரவிக்கொண்டுள்ளது. அமைச்சர்கள், ஆளுநர்கள், முதல்வர்கள் எனக் கரோனா தொற்று அடுத்த கட்ட பாய்ச்சல் எடுத்து வருகின்றது. இந்நிலையில், நாடாளுமன்ற மழைக்கால கூட்டத்தொடரையொட்டி நடத்தப்பட்ட பரிசோதனையில் 17 எம்.பி.க்களுக்கு கரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. மீனாட்சி லேக்கி, ஆனந்த் குமார் ஹெக்டே, பர்வேஷ் ஷாஹிப் சிங் உள்ளிட்ட 17 பேரும் தற்போது சிகிச்சையில் இருந்து வருகிறார்கள். இவர்கள் தற்போது நடைபெற்று வரும் நாடாளுமன்ற கூட்டத்தொடரில் கலந்துகொள்ளவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.