18வது மக்களவைத் தேர்தல் இந்தியா முழுவதும் ஒவ்வொரு மாநிலமாக 7 கட்டங்களாக நடைபெற்ற நிலையில் தேர்தலில் பதிவான வாக்குகள் இன்று எண்ணப்பட்டு முடிவுகள் வெளியாகி வருகின்றன.
இன்று வாக்கு எண்ணிக்கை நாள் என்பதால் வாக்கு எண்ணும் மையங்களில் மூன்றடுக்கு போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டுள்ளது. முகவர்கள் உரிய சோதனைக்கு பிறகு அனுமதிக்கப்பட்டு வாக்கு எண்ணிக்கை தொடங்கியது. 9.30 மணி நிலவரப்படி மொத்தமுள்ள 543 தொகுதிகளில் 283 தொகுதிகளில் பாஜக முன்னிலை வகித்து வருகிறது. காங்கிரஸ் 255 இடங்களிலும், மற்றவை 23 இடங்களிலும் முன்னிலை வகித்து வருகிறது. உத்தரப்பிரதேசம் மாநிலம் வாரணாசி தொகுதியில் பிரதமர் மோடியை விட காங்கிரஸ் வேட்பாளர் அஜய்ராய் 6000 வாக்குகள் வித்தியாசத்தில் முன்னிலையில் இருந்த நிலையில் தற்போது இரண்டாவது சுற்றிலும் மோடி பின்னடைவை சந்தித்துள்ளார். இரண்டாவது சுற்று முடிவில் காங்கிரஸ் வேட்பாளர் அஜய் ராய் 14,503 வாக்குகளும் மோடி 9,505 வாக்குகளும் பெற்றுள்ள நிலையில் மோடி பின்னடைவைச் சந்தித்துள்ளார்.