Skip to main content

பிரதமர் நரேந்திர மோடிக்கு சோனியா காந்தி கடிதம்!

Published on 12/04/2021 | Edited on 12/04/2021

 

congress president sonia gandhi wrote letter for pm narendra modi

 

இந்தியாவில் கரோனாவால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை நாளுக்கு நாள் தொடர்ந்து அதிகரித்து வரும் நிலையில், அந்தந்த மாநில, யூனியன் அரசுகள் பல்வேறு தடுப்பு நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகின்றன. மேலும் கரோனா தடுப்பூசி போடும் பணிகளையும் மத்திய அரசு முடுக்கிவிட்டுள்ளது. இருப்பினும், ஒடிஷா, மகாராஷ்டிரா, ராஜஸ்தான் உள்ளிட்ட மாநில முதல்வர்கள் கரோனா தடுப்பூசி பற்றாக்குறை குறித்தும், தடுப்பூசிகளை தங்களது மாநிலத்திற்கு  உடனடியாக அனுப்ப வேண்டும் என்று மத்திய அரசுக்கு கடிதம் எழுதியிருந்தனர். அதேபோல், காங்கிரஸ் கட்சியின் முன்னாள் தலைவரும், வயநாடு தொகுதியின் மக்களவை உறுப்பினருமான ராகுல் காந்தி, கரோனா தடுப்பூசி மருந்து ஏற்றுமதிக்குத் தடை விதிக்க வேண்டும் என்று பிரதமரை வலியுறுத்தி இருந்தார்.

 

இந்த நிலையில், கரோனா தடுப்பூசி தொடர்பாக பிரதமர் நரேந்திர மோடிக்கு அகில இந்திய காங்கிரஸ் கட்சியின் இடைக்காலத் தலைவரும், கட்சியின் மக்களவைக் குழு தலைவருமான சோனியா காந்தி கடிதம் எழுதியுள்ளார்.

 

அந்த கடிதத்தில், "அனைத்து மாநிலங்களிலும் தடுப்பூசி பற்றாக்குறையைப் போக்க நடவடிக்கை எடுக்க வேண்டும். கரோனா சிகிச்சைக்கான மருத்துவ உபகரணங்களை ஜி.எஸ்.டி. வரியை ரத்து செய்ய வேண்டும். இரவு நேர ஊரடங்கால் பாதிக்கப்பட்டுள்ள ஏழைகளின் வங்கிக் கணக்கில் ரூபாய் 6,000 செலுத்த வேண்டும். கரோனா தடுப்பூசி போடுவதில் வயது வரம்பை நீக்க வேண்டும். புதிய தடுப்பூசிகளை அனுமதி அளிக்க நடவடிக்கை தேவை" என்று வலியுறுத்தியுள்ளார்.  

 

 

 

சார்ந்த செய்திகள்

Next Story

“புதுச்சேரிக்கு மாநில அந்தஸ்து...” - மல்லிகார்ஜுன கார்கே உறுதி!

Published on 15/04/2024 | Edited on 15/04/2024
State status for Puducherry Mallikarjuna Karke confirmed

நாட்டின் 18 ஆவது நாடாளுமன்ற மக்களவைத் தேர்தலுக்கான தேதிகள் அறிவிக்கப்பட்டு, மொத்தமாக ஏழு கட்டங்களாகத் தேர்தல் நடத்தப்படவுள்ள நிலையில், முதற்கட்டமாக தமிழ்நாட்டில் ஏப்ரல் 19 ஆம் தேதி வாக்குப்பதிவு நடைபெற இருக்கிறது. இதற்கான வாக்கு எண்ணிக்கை ஜூன் 4 ஆம் தேதி நடைபெறவுள்ளது. அதே போன்று புதுச்சேரியிலும் ஏப்ரல் 19 ஆம் தேதி வாக்குப்பதிவு நடைபெற உள்ளது. ஏற்கெனவே அரசியல் கட்சிகள் தேர்தல் பணியில் தீவிரம் காட்டி வரும் நிலையில், தேர்தல் தேதி அறிவிக்கப்பட்டதால் தேர்தல் களம் அனல் பறக்க ஆரம்பித்து விட்டது.

அந்த வகையில் திமுக, அதிமுக, நாம் தமிழர், பாஜக ஆகிய கட்சிகள் தீவிர பரபரப்புரையில் ஈடுபட்டு வருகின்றன. இந்நிலையில், புதுச்சேரி நாடாளுமன்ற மக்களவைத் தொகுதியின் காங்கிரஸ் வேட்பாளர் வைத்திலிங்கத்தை ஆதரித்து காங்கிரஸ் கட்சியின் தேசிய தலைவர் மல்லிகார்ஜூன கார்கே இன்று (15.04.2024) தேர்தல் பரப்புரை மேற்கொண்டார். அப்போது அவர் பேசுகையில், “புதுச்சேரிக்கு முழு மாநில அந்தஸ்து வழங்க வேண்டும். புதுச்சேரிக்கு மாநில அந்தஸ்து கிடைக்க வேண்டும் என்பதில் காங்கிரஸ் கட்சி தீவிரம் காட்டி வருகிறது. நாங்கள் என்ன வாக்குறுதி, சொன்னாலும் செய்வோம். ஆனால் பிரதமர் மோடி செய்ய மாட்டார். இதனை காங்கிரஸும், ராகுல் காந்தியும், சோனியா காந்தியும் மட்டுமே செய்ய முடியும்.

புதுச்சேரி மாநில அந்தஸ்து விவகாரம் பாஜகவின் தேர்தல் அறிக்கையில் கூட இடம் பெறவில்லை. நேற்று வெளியான தேர்தல் அறிக்கை புதுச்சேரி மக்களின் எதிர்ப்பார்ப்புகளை அப்பட்டமாக புறக்கணித்துள்ளது. 2024 தேர்தலில் இந்தியக் கூட்டணி வெற்றி பெற்ற பிறகு வாக்குறுதியளித்ததை நாங்கள் நிறைவேற்றுவோம் என்ற நிலைப்பாட்டை காங்கிரஸ் எடுத்துள்ளது. இந்தியா கூட்டணி ஆட்சிக்கு வந்தவுடன் மூடப்பட்ட ஆலைகள் ரேஷன் கடைகள் திறக்கப்படும்” எனப் பேசினார். 

Next Story

“ஜூம்லா நாடகத்தை மீண்டும் அரங்கேற்றியிருக்கிறது பா.ஜ.க வின் தேர்தல் அறிக்கை” - செல்வப்பெருந்தகை

Published on 14/04/2024 | Edited on 14/04/2024
TN Congress leader Selvaperunthagai has slammed BJP election manifesto

டெல்லியில் உள்ள தலைமை அலுவலகத்தில் பாஜகவின் தேர்தல் அறிக்கையை பிரதமர் மோடி வெளியிட்டார். அதில், பொது சிவில் சட்டம், ஒரே நாடு ஒரே தேர்தல் அமல் உள்ளிட்ட பல்வேறு வாக்குறுதிகள் இடம்பெற்றுள்ளது. இந்த நிலையில் பாஜக தேர்தல் அறிக்கையை தமிழக காங்கிரஸ் தலைவர் செல்வப்பெருந்தகை கடுமையாகச் சாடியுள்ளார்.

இது தொடர்பாக அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில், “ஜூம்லா நாடகத்தை மீண்டும் பா.ஜ.க. அரங்கேற்றியிருக்கிறது. 2014, 2019 ஆகிய தேர்தல்களில் கொடுத்த வாக்குறுதிகளை நிறைவேற்றாத பா.ஜ.க. 2024 தேர்தலுக்கு முதல்கட்ட தேர்தல் தொடங்கி அனைத்து கட்சிகளும் தேர்தல் அறிக்கை வெளியிட்ட பிறகு அவற்றைப் பார்த்து இன்று தேர்தல் அறிக்கை வெளியிட்டிருக்கிறது. பா.ஜ.க.வின் தேர்தல் அறிக்கை சமூகநீதி, மதநல்லிணக்கம், அனைவரையும் உள்ளடக்கிய வளர்ச்சி ஆகியவற்றுக்கு எதிராக பல்வேறு அம்சங்கள் உள்ளன.

பல்வேறு மதம், மொழி, ஜாதி, இனங்களை கொண்ட பன்முகத்தன்மை கொண்ட நாட்டில் பொது சிவில் சட்டம் அமல்படுத்தப்படும் என்று சொல்வது மத நல்லிணக்கத்தை சீர்குலைக்கும் செயலாகும். தற்போது நடைபெறுகின்ற மக்களவைத் தேர்தல் ஏப்ரல் 19 இல் ஆரம்பித்து ஜூன் மாதம் 1 ஆம் தேதி வரை 7 கட்டங்களாக நடத்தப்படுகிற நிலையில் ஒரே நாடு, ஒரே தேர்தலை எப்படி நடத்த முடியும் என்பதை பிரதமர் மோடி தான் விளக்க வேண்டும்.

புதிய நாடாளுமன்ற கட்டட திறப்பு விழாவுக்கு பழங்குடியினத்தைச் சேர்ந்த குடியரசுத் தலைவர் திரௌபதி முர்மு அவர்களை அழைக்காமல் புறக்கணித்த பா.ஜ.க.வினர் 2025 ஆம் ஆண்டை பழங்குடியினர் ஆண்டாக கொண்டாடுவோம் என்பது அப்பட்டமான இரட்டை வேடமாகும். ஏற்கெனவே ஆயுஷ்மான் திட்டத்தில் ஊழல் புரையோடிப் போயிருக்கிற நேரத்தில் மீண்டும் அத்திட்டம் குறித்து தேர்தல் அறிக்கையில் கூறப்பட்டுள்ளது.

இந்தியாவின் பெருமைமிகு தமிழ் மொழி வளர்க்கப்படும் என்று தேர்தல் அறிக்கை கூறுகிறது. நிதி ஒதுக்குவதில் தமிழ் மொழியை விட 18 மடங்கு அதிகமாக சமஸ்கிருத மொழிக்கு நிதி ஒதுக்கி பாரபட்சம் காட்டுகிற பா.ஜ.க., தமிழ் மொழி வளர்ச்சி பற்றி பேசுவதற்கு எந்த அருகதையும் கிடையாது. இதன்மூலம் தமிழக மக்களை ஏமாற்ற முடியாது. தேர்தல் நன்கொடை பத்திரம் மூலமாக ரூபாய் 8,000 கோடி கார்ப்பரேட்டுகளிடம் நிதியைப் பெற்று குவித்த பா.ஜ.க., ஊழலுக்கு எதிராக கடுமையான நடவடிக்கை எடுக்கப்படும் என்று கூறுவது மிகுந்த கேலிக்குரியதாக இருக்கிறது.

வந்தேபாரத் ரயில், புல்லட் ரயில் இவை எதுவுமே சாதாரண மக்களுக்கு பயன்படுகிற வகையில் அமைவதில்லை. தமிழகத்தில் மெட்ரோ ரயிலை புறக்கணித்த பா.ஜ.க.வை எவரும் மறந்திட இயலாது. மோடியின் உத்திரவாதம் நம்பகத் தன்மையை இழந்துள்ளது. ஏற்கனவே 2014 இல் ஆண்டுக்கு 2 கோடி பேருக்கு வேலை, விவசாயிகளின் வருமானத்தை இருமடங்காக கூட்டப்படும், கருப்பு பணத்தை ஒழித்து அனைவரது வங்கிக் கணக்கிலும் ரூபாய் 15 லட்சம் டெபாசிட் செய்யப்படும் என்ற உத்திரவாதத்தை நிறைவேற்றாத மோடியின் உத்திரவாதத்தை மக்கள் எவரும் நம்ப மாட்டார்கள்.

தேர்தல் அறிக்கையை டாக்டர் அம்பேத்கர் பிறந்தநாளில் வெளியிட்டதாக கூறப்பட்டுள்ளது. ஆனால், பிற்படுத்தப்பட்ட, ஒடுக்கப்பட்ட மக்களின் எண்ணிக்கையை ஜாதிவாரியாக கணக்கெடுத்து இட ஒதுக்கீடு வழங்க வேண்டுமென்ற கோரிக்கையை ஏற்காத பா.ஜ.க., டாக்டர் அம்பேத்கர் பெயரை உச்சரிக்கத் தகுதியில்லை.

எனவே, மக்களின் நம்பகத்தன்மையை இழந்த பா.ஜ.க.வின் தேர்தல் அறிக்கை என்பது வெறும் கண்துடைப்பு நாடகமாகவே இருக்கிறது. இதில் இந்தியாவின் வளர்ச்சி குறித்து ஆக்கப்பூர்வமான கருத்துகள் எதையும் பா.ஜ.க. கூறவில்லை. இந்த தேர்தல் அறிக்கையை நாட்டு மக்கள் நிச்சயம் புறக்கணிப்பார்கள்.

கடந்த தேர்தல்களில் கொடுத்த வாக்குறுதிகளை நிறைவேற்றாமல் நிகழ்த்திய ஜூம்லா நாடகத்தை மீண்டும் பா.ஜ.க. தேர்தல் அறிக்கை வெளியிட்டு அரங்கேற்றியிருக்கிறது” எனக் குறிப்பிட்டுள்ளார்.