காங்கிரஸ் கட்சியின் தலைவராக இருந்த ராகுல் காந்தி, கடந்த 2019 நாடாளுமன்றத் தேர்தல் தோல்விக்குப் பொறுப்பேற்று தலைவர் பதவியிலிருந்து விலகினார். இதனையடுத்து சோனியா காந்தி காங்கிரஸ் இடைக்கால தலைவராக இருந்து வருகிறார். இந்நிலையில் 2024 ஆம் தேர்தலையொட்டி கட்சியில் அதிரடி மாற்றங்களை மேற்கொள்ள காங்கிரஸ் கட்சி முடிவெடுத்தவுள்ளதாக கூறப்படுகிறது.
இதன் தொடர்ச்சியாக காங்கிரஸ் தலைவர் பதவியை ராகுல் காந்தி மீண்டும் ஏற்கவுள்ளார் என்றும் தகவல் வெளியானது. இந்நிலையில் 2024 ஆம் ஆண்டு பொதுத்தேர்தல் வரை சோனியா காந்தியே கட்சியின் இடைக்கால தலைவராக நீடிப்பார் என்றும், கட்சியில் இளம் தலைவர்களுக்கு முக்கிய பதவிகள் வழங்கப்படவுள்ளதென்றும் தகவல் வெளியாகியுள்ளது.
ராகுல் காந்தி தலைவர் பதவியை ஏற்காவிட்டாலும், கட்சியில் எடுக்கப்படும் முக்கிய முடிவுகளில் பங்கேற்பார் என்றும் தகவல்கள் கூறுகின்றன. மேலும், காங்கிரஸ் கட்சிக்கு நான்கு செயல் தலைவர்கள் நியமிக்கப்படவுள்ளதாகவும், குலாம் நபி ஆசாத், சச்சின் பைலட், குமாரி செல்ஜா, முகுல் வாஸ்னிக் மற்றும் ரமேஷ் சென்னிதலா ஆகியோர் அதற்கான போட்டியில் இருப்பதாகவும் அத்தகவல்கள் கூறுகின்றன.