பீகார் மாநில சட்டப்பேரவை தேர்தலில் வென்றால் அனைவருக்கும் இலவச கரோனா தடுப்பூசி வழங்கப்படும் என பாஜக அறிவித்துள்ளது.
பீகார் மாநிலத்தில் வரும் அக்டோபர் 28, நவம்பர் 3 மற்றும் 7 ஆகிய தேதிகளில் மூன்று கட்டங்களாகச் சட்டப்பேரவை தேர்தல் நடைபெறவுள்ளது. இதில் ஐக்கிய ஜனதா தளம் மற்றும் பாஜக கூட்டணியை எதிர்த்து காங்கிரஸ், ராஷ்ட்ரிய ஜனதா தளம் உள்ளிட்ட கட்சிகள் ஒன்றிணைந்து தேர்தலில் போட்டியிட உள்ளன. அம்மாநிலத்தில் அரசியல் கட்சிகள் அனைத்தும் வேட்பாளர்களை அறிவித்து பிரசாரத்தில் ஈடுபட்டு வருகின்றன. இந்நிலையில் பாஜகவின் தேர்தல் அறிக்கையை பாட்னாவில் நடைபெற்ற நிகழ்ச்சியில் மத்திய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் வெளியிட்டார். அப்போது பேசிய அவர், "கரோனா தடுப்பூசி விற்பனைக்கு வந்தவுடன் பீகாரில் உள்ள ஒவ்வொரு நபருக்கும் இலவசமாகத் தடுப்பூசி கிடைக்கும். இது எங்கள் தேர்தல் அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ள முதல் வாக்குறுதியாகும்.
என்.டி.ஏ-க்கு வாக்களித்து அதை வெற்றிபெறச் செய்யுமாறு மாநில மக்கள் அனைவரிடமும் நான் வேண்டுகோள் விடுக்கின்றேன். நிதீஷ் குமார் அடுத்த 5 ஆண்டுகளுக்கு பீகார் முதல்வராக இருந்தால், அவரது ஆட்சியின் கீழ், பீகார் இந்தியாவின் முற்போக்கான மற்றும் வளர்ந்த மாநிலமாக மாறும்.
பீகார் மக்கள் அரசியல் ரீதியாக உணர்வு மிக்கவர்கள், கட்சிகள் அளிக்கும் வாக்குறுதிகளை அவர்கள் அறிவார்கள், புரிந்துகொள்வார்கள். எங்கள் அறிக்கையில் யாராவது கேள்விகளை எழுப்பினால், நாங்கள் வாக்குறுதியளித்ததை நிறைவேற்றுவோம் என அவர்களுக்கு நம்பிக்கையுடன் பதிலளிக்க முடியும்" எனத் தெரிவித்துள்ளார். பாஜகவின் கரோனா தடுப்பூசி குறித்த வாக்குறுதி வெளியாகியுள்ள நிலையில், நாட்டு மக்கள் அனைவரும் இந்த பெருந்தொற்றால் பாதிக்கப்பட்டிருக்கும் நிலையில், ஒரு மாநிலத்திற்கு மட்டும் இலவசமாக கரோனா தடுப்பூசி வழங்கப்படும் என பாஜக கூறுவது, கரோனாவை அரசியல் லாபத்திற்காக பயன்படுத்தும் விதமாக இருப்பதாக விமர்சனங்கள் எழுந்துள்ளன.