Skip to main content

ஹேமந்த் சோரனுக்கு ஜாமீன்; உச்ச நீதிமன்றத்தை நாடிய அமலாக்கத்துறை!

Published on 08/07/2024 | Edited on 08/07/2024
Bail for Hemant Soren The ed sought the Supreme Court

ஜார்க்கண்ட் மாநில முதல்வராக ஜார்க்கண்ட் முக்தி மோர்ச்சா கட்சியின் செயல் தலைவர் ஹேமந்த் சோரன் பதவி வகித்து வந்தார். இந்தச் சூழலில் இவர் சுரங்க முறைகேட்டுடன் தொடர்புடைய பண மோசடியில் ஈடுபட்டதாகக் கூறி, ஹேமந்த் சோரன் மீதான சட்டவிரோதப் பணப்பரிமாற்ற வழக்கை அமலாக்கத்துறை விசாரித்து வருகிறது. இதன் ஒரு பகுதியாக ஹேமந்த் சோரனை அவரது இல்லத்தில் வைத்து அமலாக்கத்துறை அதிகாரிகள் கடந்த ஜனவரி 31 ஆம் தேதி (31.01.2024) விசாரணை மேற்கொண்டனர்.

இதனையடுத்து ஹேமந்த் சோரன் கைது செய்யப்பட இருப்பதாகத் தகவல்கள் வெளியான நிலையில் ஹேமந்த் சோரன் தனது முதல்வர் பதவியை ராஜினாமா செய்தார். இதையடுத்து அமலாக்கத்துறை அதிகாரிகள் ஹேமந்த் சோரனை கைது செய்து சிறையில் அடைத்தனர். அதனைத் தொடர்ந்து, அம்மாநில போக்குவரத்துத் துறை அமைச்சராக இருந்த சம்பாய் சோரன் அம்மாநில முதல்வராகப் பதவியேற்றார். அதன் பின்னர், அமலாக்கத்துறையால் கைது செய்யப்பட்ட ஹேமந்த் சோரன் கடந்த ஜூன் 28 ஆம் தேதி (28.06.2024) ஜாமீனில் வெளியே வந்தார். அதனையடுத்து, சம்பாய் சோரன் தனது முதல்வர் பதவியை ராஜினாமா செய்ததால் மீண்டும் ஹேமந்த் சோரன் முதல்வராகப் பதவியேற்றார். இந்த நிலையில், ஜார்க்கண்ட் பேரவையில் ஹேமந்த் சோரன் தலைமையிலான கூட்டணி அரசு மீது நம்பிக்கை வாக்கெடுப்பு இன்று (08.07.2024) நடந்தது. 

Bail for Hemant Soren The ed sought the Supreme Court

81 உறுப்பினர்கள் கொண்ட ஜார்க்கண்ட் பேரவையில் நம்பிக்கை வாக்கெடுப்பில் வெற்றி பெற 39 எம்.எல்.ஏக்கள் ஆதரவு தேவை. ஆளும் கூட்டணிக் கட்சியான ஜார்க்கண்ட் முக்தி மோர்ச்சா 27 எம்.எல்.ஏக்கள், காங்கிரஸ் 17 எம்.எல்.ஏக்கள், ராஷ்ட்ரிய ஜனதா தளம் 1 எம்.எல்.ஏக்கள் ஆதரவு நிலைப்பாட்டில் உள்ளனர். அதே போல், பா.ஜ.கவின் 25 எம்.எல்.ஏக்கள் உள்பட எதிர்க்கட்சியில் 27 எம்.எல்.ஏக்கள், 3 சுயேட்சை எம்.எல்.ஏக்கள் உள்ளனர். 81 உறுப்பினர்களைக் கொண்ட சட்டப்பேரவையில் நடைபெற்ற நம்பிக்கை வாக்கெடுப்பில் 45 எம்.எல்.ஏக்கள் ஆதரவுடன் ஹேமந்த் சோரன் வெற்றி பெற்றார்.

இந்நிலையில் முதல்வர் ஹேமந்த் சோரனுக்கு ஜாமீன் அளித்த ஜார்க்கண்ட் உயர்நீதிமன்ற உத்தரவுக்கு எதிராக அமலாக்கத்துறை உச்சநீதிமன்றத்தில் மேல்முறையீடு செய்துள்ளது. அமலாக்கத்துறை தரப்பில் தாக்கல் செய்யப்பட்டுள்ள மனுவில், “ஹேமந்த் சோரனுக்கு உயர் நீதிமன்றம் ஜாமீன் வழங்கியது சட்ட விரோதம். ஹேமந்த் சோரனுக்கு எதிராக முதன்மை ஆதாரமில்லை என உயர் நீதிமன்றக் கருத்து தவறானது” எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்த வழக்கு விரைவில் விசாரணைக்கு வரும் என எதிர்பார்க்கப்படுகிறது.

சார்ந்த செய்திகள்