Skip to main content

பாஜகவிலிருந்து திரிணாமூல் காங்கிரஸுக்குத் தாவத் தயாராகும் மேலும் ஒரு எம்.எல்.ஏ? 

Published on 20/09/2021 | Edited on 20/09/2021

 

bjp mla

 

மேற்கு வங்கத்தில் இந்தாண்டு நடைபெற்ற சட்டமன்ற தேர்தலில், மம்தா பானர்ஜி தலைமையிலான திரிணாமூல் காங்கிரஸ் மாபெரும் வெற்றியைப் பெற்று ஆட்சியைத் தக்கவைத்துக் கொண்டது. மம்தா பானர்ஜி தொடர்ந்து மூன்றாவது முறையாக மேற்குவங்கத்தின் முதல்வரானார்.

 

அதனைத்தொடர்ந்து மேற்குவங்கத்தில் பாஜக சார்பாக வென்ற நான்கு எம்.எல்.ஏக்கள் இதுவரை திரிணாமூல் காங்கிரஸில் இணைந்துள்ளனர். இதற்கிடையே கடந்த சனிக்கிழமை முன்னாள் மத்திய இணையமைச்சரும், பாஜக எம்பியுமான பாபுல் சுப்ரியோ திரிணாமூல் காங்கிரஸில் இணைந்தார். இந்தநிலையில் மேலும் ஒரு பாஜக எம்.எல்.ஏ திரிணாமூல் காங்கிரஸில் இணையலாம் எனத் தகவல்கள் வெளியாகியுள்ளது.

 

மேற்குவங்கத்தின் ராய்கஞ்ச் தொகுதி பாஜக எம்.எல்.ஏ-வான கிருஷ்ண கல்யாணி, திரிணாமூல் காங்கிரஸில் இணையப்போவதாகத் தகவல்கள் தெரிவிக்கின்றன. நேற்று செய்தியாளர்களைச் சந்தித்த போது எம்.எல்.ஏ கிருஷ்ண கல்யாணி, பாஜகவில் இருந்து வெளியேறியவர்களுக்கு ஆதரவாகப் பேசியதுடன், வேறு கட்சியில் இணைவது குறித்து யோசித்து வருவதாகவும் கூறினார்.

 

இதுதொடர்பாக அவர், "பா.ஜ.க.வை விட்டு வெளியேறுபவர்களுக்கு, கவனத்தில் கொள்ளப்படாத கடுமையாக குறைகள் இருக்கும். கட்சியின் அனைத்து நிகழ்ச்சிகளிலிருந்தும் நான் விலகிவிட்டேன். நான் எழுப்பிய பிரச்சனைகளுக்கு இதற்குள் தீர்வு காணவேண்டும் அல்லது என்ன செய்யலாம் என நான் யோசிப்பேன் என்று கட்சிக்கு ஒரு கால அவகாசத்தையும் வழங்கியுள்ளேன்" எனத் தெரிவித்துள்ளார்.

 

மேலும் வேறு ஒரு கட்சியில் சேருவீர்களா என்ற கேள்விக்கு அவர், தனக்கு முன் உள்ள வாய்ப்புகள் குறித்து யோசிப்பதாகவும், தனது முடிவை சரியான நேரத்தில் பொதுமக்களுக்கு தெரிவிப்பேன் எனவும் கூறினார். இதன்தொடர்ச்சியாக அவர் திரிணாமூல் காங்கிரஸில் இணையவுள்ளதாகத் தகவல்கள் வெளியாகி வருகின்றன.

 

உத்தர தினபூர் மாவட்ட திரிணாமூல் காங்கிரஸ் தலைமை,  கிருஷ்ண கல்யாணி தங்களது கட்சிக்கு வந்தால் வரவேற்போம் எனத் தெரிவித்துள்ளது குறிப்பிடத்தக்கது.

 

 

 

சார்ந்த செய்திகள்