Skip to main content

மக்களவைத் தேர்தல் எதிரொலி; ஒரே நாளில் சரிவைக் கண்ட அம்பானி, அதானி!

Published on 06/06/2024 | Edited on 06/06/2024
 Ambani, Adani who saw the decline in one day for Lok Sabha Election Echoes

உலகமே எதிர்பார்த்த இந்தியாவின் 18வது மக்களவைத் தேர்தல் கடந்த ஏப்ரல் 19ஆம் தேதி முதல் ஜூன் 1ஆம் தேதி வரை ஏழு கட்டங்களாக நடைபெற்றது. தேர்தல் முடிந்த பிறகு இந்தியாவில் உள்ள முக்கிய செய்தி நிறுவனங்கள் தேர்தலுக்கு பிந்தைய கருத்துக்கணிப்புகளை வெளியிட்டன.

அதில், பா.ஜ.க தலைமையில் தேசிய ஜனநாயகக் கூட்டணி 350க்கும் மேற்பட்ட தொகுதிகளையும், இந்தியா கூட்டணி 150க்கும் குறைவான தொகுதிகளையும் என்று கூறியிருந்தது. அந்த முடிவுகளால், பங்குச்சந்தை வர்த்தகம் வரலாற்றில் இல்லாத ஏற்றம் கண்டது. இதனையடுத்து, கடந்த 4ஆம் தேதி மக்களவைத் தேர்தல் முடிவுகள் வெளியானது. 

அதில்,  543 மக்களவைத் தொகுதிகளில் தேசிய ஜனநாயகக் கூட்டணி 292 இடங்களிலும், இந்தியா கூட்டணி 234 இடங்களிலும் வென்றுள்ளது. இதில் தேசிய ஜனநாயகக் கூட்டணியில் உள்ள பா.ஜ.க தனித்து 240 தொகுதிகளை மட்டுமே கைப்பற்றியிருந்தாலும், கூட்டணிக் கட்சிகளின் தயவால் பா.ஜ.க கூட்டணி மூன்றாவது முறையாக ஆட்சியை அமைக்கவுள்ளது. இந்த முடிவுகளால் பங்குச்சந்தை வர்த்தகம் ஒரேயடியாக வீழ்ச்சியடைந்துள்ளது. 

பங்குச்சந்தை வர்த்தகம் வீழ்ச்சியால் பிரபல தொழிலதிபர்கள் முகேஷ் அம்பானி மற்றும் கவுதம் அதானி ஆகியோரின் சொத்து மதிப்பில் ஒரே நாளில் பெரிய அளவில் சரிவை ஏற்படுத்தியுள்ளது. பிரபல நிறுவனமான புளூம்பெர்க் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியதாவது, ‘பங்குச்சந்தை சரிவால் கவுதம் அதானி, தனது சொத்து மதிப்பில் சுமார் 24.9 பில்லியன் டாலர்களை இழந்து தற்போது 97.5 பில்லியன் டாலர்களைச் சொத்து மதிப்பாகக் கொண்டுள்ளார். அதே போல், முகேஷ் அம்பானி, தனது சொத்து மதிப்பில் 9 பில்லியன் டாலர்களை இழந்து தற்போது 106 பில்லியன் டாலர்களைச் சொத்து மதிப்பாகக் கொண்டுள்ளார். ரிலையன்ஸ் குழுமத் தலைவராக உள்ள முகேஷ் அம்பானி, உலக பணக்காரர்கள் பட்டியலில் தற்போது 11-வது இடத்தில் உள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.

சார்ந்த செய்திகள்