/nakkheeran/media/post_attachments/sites/default/files/inline-images/18_118.jpg)
கிருஷ்ணகிரி மாவட்டம், சூளகிரி வட்டம், காமன்தொட்டி, அரசு உயர்நிலைப்பள்ளி, தொன்மைப் பாதுகாப்பு மன்ற மாணவர்கள் 3000 ஆண்டுகள் பழமையான பெருங்கற்காலக் கல்திட்டைகளைக் கண்டுபிடித்துள்ளனர்.
தமிழ்நாட்டின் கலை, பண்பாடு, வரலாறு, தொல்லியலைப் பள்ளி மாணவர்கள் அறிந்துகொள்ளவும், பாரம்பரியச் சின்னங்களைப் பாதுகாக்க வேண்டும் என்ற உணர்வை அவர்களிடம் ஏற்படுத்தவும் பள்ளிகளில் தொன்மைப் பாதுகாப்பு மன்றங்கள் செயல்பட்டு வருகின்றன. இதற்காக பள்ளிக்கல்வித்துறை பட்டதாரி ஆசிரியர்களுக்கு தொல்லியல் பயிற்சி வழங்கி வருகிறது. காமன்தொட்டி, அரசு உயர்நிலைப்பள்ளி, தொன்மைப் பாதுகாப்பு மன்றம் சார்பில், மாணவர்களுக்கு பழமையான கல்வெட்டுகள், நாணயங்கள், பானை ஓடுகள், பெருங்கற்கால நினைவுச் சின்னங்கள், பழைய, புதிய கற்கருவிகள் பற்றி, மன்றச் செயலரும், பட்டதாரி தமிழாசிரியருமான ம.ஜெயலட்சுமி பயிற்சி கொடுத்து வருகிறார்.
இதனால் இப்பள்ளி பத்தாம் வகுப்பு மாணவர்கள் மு.அருண், சீ.சந்துரு ஆகியோர் காமன்தொட்டி அருகிலுள்ள தின்னூரிலும், கோபசந்திரத்திலும் செவ்வக வடிவிலான இரு பெருங்கற்காலக் கல்திட்டைகளைக் கண்டுபிடித்துள்ளனர். இவற்றை மாணவர்களுடன் நேரில் ஆய்வு செய்தபின் ஆசிரியரும், தொல்லியல் ஆய்வாளருமான ம.ஜெயலட்சுமி கூறியதாவது, இறந்தவர்களுக்குப் பெரிய கற்களைக் கொண்டு ஈமச்சின்னங்கள் அமைக்கப்பட்டதால் இது பெருங்கற்காலம் எனப்படுகிறது. ஈமச்சின்னத்தின் மேற்பகுதியில், பலகைக்கற்களால் நாற்புறங்களிலும் சுவர்போல் அமைத்து அதன்மேல் கற்பலகையைக் கொண்டு மூடி உருவாக்கப்படுவது கல்திட்டை ஆகும்.
/nakkheeran/media/post_attachments/sites/default/files/inline-images/Untitled-1_860.jpg)
தின்னூர் கல்திட்டை
தின்னூர் வயல்வெளியில் உள்ள கல்திட்டை, கங்கம்மா என்ற பெயரில் வழிபாட்டில் உள்ளது. நாற்புறமும் பலகைக் கற்களால் மூடப்பட்டுள்ள இதன் உயரம் 2 அடி, நீளம் 4½ அடி ஆகும். அதில் இரு கற்கள் கீழே சாய்ந்துள்ளன. இதன் நடுவில் 2 அடி உயரமுள்ள ஒரு குத்துக்கல் உள்ளது. அதன் அருகில் 1 அடி உயரமுள்ள ஒரு தலைக்கல் உள்ளது. அதன் மேற்புறம் குழி அமைப்பும், பக்கவாட்டில் பாறைக்கீறல்களும் உள்ளன.
கோபசந்திரம் கல்திட்டை
கோபசந்திரம் ஊர் எல்லையிலுள்ள கற்திட்டை, நாற்புறமும் பலகைக் கற்களால் மூடப்பட்டுள்ளது. இதன் உயரம் 4 அடி, நீளம் 5 அடி ஆகும். இதில் கிழக்கில் இருந்த கல் விழுந்துள்ளது. இதனுள்ளே பழைய, புதிய கற்காலக் கருவிகள் வைத்து வழிபடப்படுகிறது. இதைச் சுற்றிச் சிதைந்தநிலையில் கல்வட்டம் உள்ளது.
கிருஷ்ணகிரி, ஓசூர் பெருவழியின் அருகில் உள்ள தின்னூர், கோபசந்திரம் கல்திட்டைகள் இருவேறுபட்ட அமைப்புகளில் உள்ளன. இவை வெவ்வேறு இனக்குழுக்களுக்காக அமைக்கப்பட்டதாக இருக்கலாம். தமிழ்நாட்டில் பெருங்கற்காலம் கி.மு.2200 முதல் கி.மு.600 வரையிலானது என தொல்லியல் துறை தெரிவித்துள்ளது. இங்குள்ள கல்திட்டைகள் சுமார் 3000 ஆண்டுகள் பழமையானவை எனலாம். இவ்வாறு அவர் கூறினார்.
/nakkheeran/media/agency_attachments/2025/05/19/2025-05-19t062512996z-nkn-png-logo-640x480-nakkheeran-adops.png)
/nakkheeran/media/agency_attachments/2025/05/19/2025-05-19t062422400z-nkn-png-logo-640x480-nakkheeran-adops.png)