Skip to main content

‘கைகழுவக் கூட தண்ணீர் இல்லை’; பள்ளி நிர்வாகங்கள் எடுத்த அதிரடி முடிவு! 

Published on 08/03/2024 | Edited on 08/03/2024
Action taken by school administrations for Water scarcity in bangalore

கர்நாடகா மாநிலம், பெங்களூர் பகுதியில் 1 கோடிக்கும் அதிமான மக்கள் வசித்து வருகிறார்கள். அதிகப்படியான ஐ.டி நிறுவனங்கள், தொழில்நுட்ப நிறுவனங்களால் இந்தியாவில் தகவல் தொழில்நுட்ப தலைநகரமாக பெங்களூர் திகழ்ந்து வருகிறது. இந்த நிலையில், கடந்த ஆண்டு பெய்த தென்மேற்கு மற்றும் வடகிழக்கு பருவமழையால் நீர்நிலைகளில் குறைவான நீர் மட்டுமே தேக்கி வைக்கப்பட்டுள்ளதாக கூறப்படுகிறது. இதனால், பெங்களூர் பகுதியில் வழக்கமாக வழங்கப்படும் அளவை விட குறைந்த அளவில் மட்டுமே நீர் விநியோகிக்கப்பட்டு வந்தது.

இருப்பினும், நீர் வரத்து குறைந்துவிட்டதால், பெங்களூர் பகுதியை சுற்றியுள்ள புறநகர் பகுதிகளில் குடிநீர் தட்டுப்பாடு தலைதூக்கி வருகிறது. இதனை கருத்தில் கொண்டு, டேங்கர் லாரி மூலம் மக்களுக்கு தண்ணீர் விநியோகம் செய்து வருகிறது கர்நாடகா அரசு. இதனிடையே, 3,000க்கும் மேற்பட்ட ஆழ்குழாய் கிணறுகள் வறண்டுவிட்டதால், அதனை பயன்படுத்தி வந்தவர்கள் தண்ணீர் லாரிகளை எதிர்பார்த்து காத்திருக்க வேண்டிய சூழ்நிலைக்கு தள்ளப்பட்டுள்ளனர். 

குறிப்பாக, புறநகர் பகுதிகளில் குடிநீர் தட்டுப்பாடு அதிகமாக இருந்து வருகிறது. இதனால், அந்த பகுதிகளில் வாடகை வீடுகளில் குடியிருப்பவர்கள் பலர், தங்கள் வீடுகளை காலி செய்து தங்களது சொந்த ஊருக்கு செல்லும் நிலைமைக்கும் தள்ளப்பட்டுள்ளனர். இதற்கிடையே, பெங்களூர் பகுதியில் உள்ள தனியார் குடியிருப்பு வாசிகளுக்கு, அதன் குடியிருப்போர் நலச்சங்கம் நோட்டீஸ் அனுப்பியுள்ளது. அந்த நோட்டீஸில், ‘பெங்களூர் பகுதியில் கடும் குடிநீர் தட்டுப்பாடு நிலவி வருகிறது. எனவே, தண்ணீரை சிக்கனமாக கடைபிடிக்க வேண்டும்.  இதை மீறி, நீரை தவறாக பயன்படுத்தினாலோ, வீணடித்தாலோ, குடியிருப்பு வாசிகளுக்கு ரூ.5,000 அபராதம் விதிக்கப்படும்’ என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. 

இந்த நிலையில், பெங்களூர் நகரில் நிலவிவரும் தண்ணீர் தட்டுப்பாடு காரணமாக நகரில் உள்ள தனியார் பள்ளிகள், பயிற்சி மையங்களை தற்காலிகமாக மூட முடிவு செய்துள்ளதாக கூறப்படுகிறது. மேலும், அங்கு படிக்கும் மாணவர்களுக்கு ஆன்லைன் மூலம் வகுப்புகளை நடத்த சம்பந்தப்பட்ட நிர்வாகங்கள் முடிவு செய்துள்ளன. 

சார்ந்த செய்திகள்