Skip to main content

'இந்த தேதிக்குள் 12 வகுப்பு மதிப்பெண்களை வெளியிட வேண்டும்' - மாநிலங்களுக்கு உச்சநீதிமன்றம் உத்தரவு!

Published on 24/06/2021 | Edited on 24/06/2021

 

supreme  court of india

 

கரோனா பரவல் காரணமாக, நாடு முழுவதும் நடைபெற இருந்த சிபிஎஸ்இ 12 ஆம் வகுப்பு பொதுத்தேர்வுகள் இரத்து செய்யப்பட்டது. இதனையடுத்து சிபிஎஸ்இ 12 ஆம் வகுப்பு மாணவர்களுக்கு மதிப்பெண் வழங்க வழிமுறை உருவாக்கப்பட்டது. இதற்கு உச்சநீதிமன்றமும் அனுமதி வழங்கியது.

 

இதற்கிடையே 21 மாநிலங்கள், மாநில பாடத்திட்டத்தில் நடைபெறும் 12 வகுப்பு பொதுத்தேர்வுகளை கரோனா பரவல் காரணமாக ரத்து செய்துள்ளன. 6 மாநிலங்கள் தேர்வை நடத்தி முடித்துள்ளன. தேர்வை ரத்து செய்த பல்வேறு மாநிலங்கள், இன்னும் 12 வகுப்பு மாணவர்களுக்கு மதிப்பெண் வழங்கும் முறையை இறுதி செய்யவில்லை. 

 

இந்தநிலையில் 12 வகுப்பு பொதுத்தேர்வுகளை ரத்து செய்வது தொடர்பான வழக்கு இன்று உச்சநீதிமன்றத்தில் விசாரணைக்கு வந்தது. வழக்கை விசாரித்த உச்சநீதிமன்றம், இதுவரை 12 வகுப்பு பொதுத்தேர்வை ரத்து செய்துள்ள மாநிலங்கள், 10 நாட்களுக்குள் மாணவர்களுக்கான அகமதிப்பீட்டு முறையை உருவாக்க வேண்டுமென்றும், ஜூலை 31 ஆம் தேதிக்குள் மதிப்பெண்களை வெளியிட வேண்டுமென்றும் உத்தரவிட்டுள்ளது.

 

மேலும் 12 வகுப்பு தேர்வை நடத்தப்போவதாக தெரிவித்த ஆந்திரா அரசிடம், அரசு எப்படி மாணவர்களின் உயிர்களோடு விளையாடலாம் என கேள்வியெழுப்பிய உச்சநீதிமன்றம், தேர்வை நடத்த ஆந்திரா அரசு மேற்கொண்டுள்ள ஏற்பாடுகள் குறித்த தகவல்களை நாளை நீதிமன்றத்தில் தாக்கல் செய்யவேண்டும் எனவும் உத்தரவிட்டுள்ளது. ஒரு உயிரிழப்பு கூட ஏற்படாமல் தேர்வு நடத்தப்படும் என எங்களுக்கு நம்பிக்கை அளித்தால்தான் தேர்வை நடத்த அனுமதிப்போம் எனவும் உச்சநீதிமன்றம் கூறியது குறிப்பிடத்தக்கது.

 

 

சார்ந்த செய்திகள்