கரோனா பாதிப்பிலிருந்து மீண்டு, குணமடைந்தவர்களுக்கு மீண்டும் கரோனா பாதிப்பு ஏற்படுவது குறித்து ஆய்வுகள் மேற்கொண்டு வருவதாக உலக சுகாதார அமைப்பு தெரிவித்துள்ளது.
உலகம் முழுவதும் கரோனா வைரஸ் பாதிப்பால் 18 லட்சத்திற்கும் அதிகமானோர் பாதிக்கப்பட்டுள்ள சூழலில், இதனால், 1.14 லட்சம் பேர் உயிரிழந்துள்ளனர், 4.2 லட்சம் பேர் குணமடைந்து மீண்டுள்ளனர். இந்தியாவைப் பொறுத்தவரை 9000-க்கும் மேற்பட்டோர் இந்த வைரஸ் தொற்று காரணமாகப் பாதிக்கப்பட்டுள்ளனர். இதில் 300-க்கும் மேற்பட்டோர் உயிரிழந்துள்ளனர், 850-க்கும் அதிகமானோர் குணமடைந்துள்ளனர். இந்நிலையில் கரோனா பாதிப்பிலிருந்து மீண்டு, குணமடைந்தவர்களுக்கு மீண்டும் கரோனா பாதிப்பு ஏற்படுவது குறித்து ஆய்வுகள் மேற்கொண்டு வருவதாக உலக சுகாதார அமைப்பு தெரிவித்துள்ளது.
தென்கொரியாவில் கரோனாவிலிருந்து குணமடைந்த 91 பேருக்கு மீண்டும் கரோனா பாதிப்பு ஏற்பட்டுள்ளதாக அந்நாட்டு அரசு தெரிவித்தது. ஏற்கனவே சீனாவிலும் கரோனா குணமடைந்த சிலருக்கு கரோனா பாதிப்பு மீண்டும் ஏற்பட்டதாகத் தகவல்கள் வெளியாகின. இந்நிலையில் தென்கொரியாவில் கரோனா குணமடைந்தவர்களுக்கு மீண்டும் மேற்கொள்ளப்பட்ட சோதனையில் 91 பேருக்கு கரோனா பாசிட்டிவ் என முடிவுகள் வந்துள்ளன. இது உலக முழுவதும் மக்களிடையே அச்சத்தை ஏற்படுத்தியுள்ள சூழலில், இதுகுறித்து ஆய்வு செய்து வருவதாக உலக சுகாதார அமைப்பு தெரிவித்துள்ளது.