வெளியூரிலிருந்கு வருபவர்களால் கரோனா பரவும் அபாயம் ஏற்பட்டுள்ளது என ஈரோடு மாவட்ட மக்கள் மத்தியில் தொடர் அச்சம் ஏற்பட்டுள்ளது. ஈரோடு மாவட்டத்தில் கரோனா தொற்று தொடக்கத்தில் கண்டறியப்பட்டாலும், மாவட்ட நிர்வாகத்தின் பல கட்ட தடுப்பு நடவடிக்கையால் கரோனா இல்லாத மாவட்டமாக ஈரோடு அறிவிக்கப்பட்டது. இப்போது கரோனா கட்டுக்குள் இருக்கும் மாவட்டமாக ஈரோடு உள்ளது. அதே போல் ஊரடங்கில் தளர்வு ஏற்படுத்தப்பட்டு, தொழில் நிறுவனங்கள் இயக்க அனுமதி வழங்கப்பட்டுள்ளது.
இதனால், பல்வேறு மாவட்டம், மாநிலங்களில் வேலை பார்த்து வந்தவர்கள் அவரவர் சொந்த ஊர்களுக்கு மீண்டும் திரும்பி வருகின்றனர். அப்படி சென்ற வாரம் வந்த ஈரோடு மாவட்டம் கவுந்தப்பாடியை சேர்ந்த ஒருவருக்கு சேலம் அரசு மருத்துவமனையில் கரோனா தொற்று உறுதி செய்யப்பட்டது. இதையடுத்து அவருக்கு சேலம் மருத்துவமனையிலேயே சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. அடுத்ததாக சென்ற இரு நாட்களுக்கு முன்பு மகாராஷ்டிரா மாநிலத்தில் இருந்து ஈரோடு மாவட்டம் கொடுமுடிக்கு வந்த 40 வயதுடைய ஒரு நபர் விமானம் மூலம் கோவை வந்துள்ளார். அங்கு அவருக்கு எடுக்கப்பட்ட பரிசோதனையில் கரோனா தொற்று உறுதியானது. கொடுமுடியை சேர்ந்த அந்த நபரை ஈரோடு அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனையில் சேர்த்தனர்.
இந்த நிலையில் தான் சென்னையில் பணியாற்றி வந்த ஈரோடு சூளை பகுதியை சேர்ந்த 35 வயது பெண், ஊரடங்கில் தளர்வு ஏற்படுத்தப்பட்டதால் அவர் நேற்று மாலை விமானம் மூலம் சென்னையில் இருந்து சேலம் வந்தார். அங்கு அவருக்கு கரோனா பரிசோதனை செய்யப்பட்டது. பிறகு அவர் கார் மூலம் ஈரோடு வந்து அவரது வீட்டுக்குச் சென்றார். சேலத்தில் அந்த பெண்ணுக்கு செய்யப்பட்ட பரிசோதனையில் கரோனா தொற்று உறுதி என தகவல் வந்தது. இதனால் மருத்துவ குழுவினர் அதிர்ச்சி அடைந்து போலீசார் துணையுடன் அந்தப் பெண வீட்டுக்குச் சென்றனர். அந்த பெண்ணை உடனடியாக மீட்டு பெருந்துறையில் உள்ள ஈரோடு அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனை கரோனா வார்டில் அனுமதித்தனர். அங்கு அவருக்கு சிகிச்சை கொடுத்து வருகின்றனா். இதனால், ஈரோடு மாவட்டத்தில் கரோனா பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 73 ஆக உயர்ந்து விட்டது.
ஈரோடு மாவட்டத்தில் மொத்தம் 70 பேருக்குத்தான் கரோனா தொற்று இருந்தது. மாவட்ட அதிகாரிகள் சுகாதார துறை, பனியாளர்களின் தொடர் உழைப்பால் கரோனா தொற்றிலிருந்து விடுபட்டு 40 நாட்களை கடந்தது. ஆனால் வெளியூரிலிருக்கு வரும் நபர்கள் அவர்கள் முன்பு இருந்த ஊர்களில் முறையாக பரிசோதனை செய்து கொள்ளாமல் ஈரோட்டுக்கு வருகிறார்கள். அப்படி வந்தவர்கள் தான் இந்த மூவரும். இப்போது இவர்களால் இந்த வைரஸ் தொற்று மாவட்டத்தில் 73 ஆக அதிகரித்துள்ளது.