தமிழகத்தில் 8 மாவட்டங்களில் மிதமான மழைக்கு வாய்ப்பு உள்ளதாக வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
வடகிழக்கு பருவமழை காரணமாகத் தமிழ்நாடு, கேரளா, புதுச்சேரி ஆகிய மாநிலங்களில் கனமழைக்கு வாய்ப்பு இருக்கும் என இந்திய வானிலை ஆய்வு மையம் ஏற்கனவே அறிவித்திருந்தது. அதன்படி தமிழகம், புதுச்சேரி உள்ளிட்ட பகுதிகளில் பரவலாக மழை பெய்து வருகிறது. இந்நிலையில் சென்னை வானிலை ஆய்வு மையம் வெளியிட்டுள்ள அறிவிப்பில், “சென்னை, காஞ்சிபுரம், வேலூர், திருவண்ணாமலை, இராமநாதபுரம், திருவள்ளூர், ராணிப்பேட்டை, செங்கல்பட்டு ஆகிய 8 மாவட்டங்களில் அடுத்த 3 மணி நேரத்தில் (காலை 10 மணிக்குள்) மிதமான மழைக்கு வாய்ப்பு உள்ளது” எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
அதே சமயம் காஞ்சிபுரம், செங்கல்பட்டு மாவட்டங்களில் இன்று (27.11.2023) பள்ளி மற்றும் கல்லூரிகள் வழக்கம்போல் செயல்படும் என அந்தந்த மாவட்ட ஆட்சியர்கள் அறிவித்துள்ளனர். முன்னதாக வங்கக் கடலில் இன்று புதிய காற்றழுத்த தாழ்வுப்பகுதி உருவாக வாய்ப்பு உள்ளதாகவும், தமிழ்நாட்டில் 5 நாட்களுக்கு மழை பெய்யக்கூடும் என வானிலை ஆய்வு மையம் கணித்திருந்தது குறிப்பிடத்தக்கது.