இந்த ஆண்டிற்கான நீட் நுழைவுத்தேர்வு மே 6ஆம் தேதி நடந்துமுடிந்துள்ளது. கடந்த ஆண்டைப் போலவே இந்த ஆண்டும், தேர்வு எழுதச் சென்ற மாணவர்கள் பல்வேறு இன்னல்களைச் சந்திக்க வேண்டியிருந்தது. மதுரை நரிமேட்டில் தமிழுக்கு பதிலாக இந்தி வினாத்தாள்கள் கொடுக்கப்பட்டது பரபரப்பானது.
இந்நிலையில், நீட் தேர்வுக்காக தமிழ் மொழியில் கொடுக்கப்பட்ட வினாத்தாளில், 49 கேள்விகளில் மொழிபெயர்ப்புப் பிழைகள் இருப்பதாக என்.ஜி.ஓ. நிறுவனம் ஆதாரத்துடன் குற்றம்சாட்டியுள்ளது. ‘டெக் ஃபார் ஆல்’ என்ற என்.ஜி.ஓ. நிறுவனம் வறுமைக்கோட்டிற்குக் கீழ் உள்ள மாணவர்களுக்கு நீட் பயிற்சி வழங்கியுள்ளது. இந்த நிறுவனம் நீட் தமிழ் வினாத்தாள்களில் இருக்கும் பிழைகளைச் சுட்டிக்காட்டியுள்ளது.
நீட் வினாத்தாளில் 180 கேள்விகள் இடம்பெற்றிருக்கும். இதில் 75ஆவது கேள்வியில் cheetah என்ற வார்த்தையில் சிறுத்தைக்கு பதிலாக, சீத்தா என அச்சிடப்பட்டிருந்தது. அதேபோல், 77ஆவது கேள்வியில் multiple allele என்ற வார்த்தைக்கு பல்கூட்டு அலீல்கள் என்ற வார்த்தைக்குப் பதிலாக பல குட்டு அல்லீல்கள் என இடம்பெற்றிருந்தது. இதுபோல், 49 கேள்விகளிலும் தமிழில் எழுதிய மாணவர்களை குழப்பும் விதமான மொழிபெயர்ப்புப் பிழைகள் இருந்ததாக டெக் ஃபார் ஆல் நிறுவனர் ராம் பிரகாஷ் தெரிவித்துள்ளார்.
மேலும், அவர் கூறுகையில், ‘தவறாக மொழிபெயர்க்கப்பட்ட கேள்விகளுக்கு பதிலளித்த மாணவர்களுக்கு, கிரேஸ் மதிப்பெண்கள் வழங்கவேண்டும். இதன்மூலம், அவர்களுக்கு 196 மதிப்பெண்கள் கிடைக்க வாய்ப்புள்ளது. இந்தக் குழப்பத்திற்கு என்.சி.இ.ஆர்.டி.யிடம் தமிழ் புத்தகங்கள் இல்லாததே காரணம். இதே காரணத்தால் கடந்த ஆண்டு ஆங்கிலம் மற்றும் தமிழ் மொழியில் வெவ்வேறான வினாத்தாள்கள் கொடுக்கப்பட்டன. இந்தத் தவறு இந்தாண்டு சரிசெய்யப்படும் என கூறியிருந்த நிலையில், அது இன்னமும் சரிசெய்யப்படவில்லை. ஒருவேளை மாணவர்களுக்குக் கேள்விகளில் குழப்பம் எழுந்தால், அவர்கள் ஆங்கிலத்தில் இருக்கும் கேள்வியை வைத்தே இறுதி முடிவுக்கு வரவேண்டும். ஆனால், நேரநெருக்கடி அவர்களுக்கு அந்த வாய்ப்பைத் தராது’ என ஆதங்கத்துடன் தெரிவித்துள்ளார்.
நீட் தேர்வு சமூக அநீதியின் உச்சமாக இருப்பதாக பலரும் தெரிவித்து வரும் நிலையில், இந்தக் கொடுமைகள் குறித்து தமிழக அரசு கள்ளமவுனம் காப்பது வேதனையளிப்பதாகவும், கண்டனத்திற்குரியது எனவும் சமூக செயற்பாட்டாளர்கள் தெரிவித்துள்ளனர்.