தே.மு.தி.க. தலைவர் விஜயகாந்த்தின் சொத்துக்கள் ஏலத்திற்கு வந்து அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. சென்னையிலிருந்து திருச்சி செல்லும் சாலையில் மேல்மருவத்தூரை அடுத்த மாமண்டூரில் விஜயகாந்த்திற்கு சொந்தமான ஆண்டாள் அழகர் கல்லூரி அமைந்துள்ளது. மொத்தம் 4 லட்சத்து 38 ஆயிரம் சதுர அடி பரப்பில் கட்டிடங்கள். 25 ஏக்கர் நிலத்தில் அமைந்துள்ள கல்லூரி உள்ளது. பல்கலைக்கழக மதிப்பீடுகள்படி முதல் தரத்தில் இருக்கும் இந்த கல்லூரியின் மதிப்பு என 92 கோடியே 5 லட்சத்து ஐயாயிரத்து 51 ரூபாய் என வங்கி மதிப்பிடுகிறது. அந்த கல்லூரியின் மார்க்கெட் மதிப்பு இந்த மதிப்பை விட பத்து மடங்கு அதிகமாகும். தற்போதைய கல்வி ஆண்டில் மாணவர் சேர்க்கையுடன் பேருந்து மற்றும் விடுதி வசதிகளுடன் வெற்றிகரமாக இயங்கிக் கொண்டிருக்கிறது இந்த கல்லூரி.
இந்த கல்லூரியை ஏலம் விடப் போவதாக இந்தியன் ஓவர்சீஸ் வங்கியின் மவுண்ட் ரோடு கிளை அறிவித்துள்ளது. "விஜயகாந்த் மற்றும் அவரது மனைவி பிரேமலதாவுக்கு சொந்தமான இந்த கல்லூரியையும் சென்னை விருகம்பாக்கம் காவேரி தெருவில் உள்ள 1027 சதுர அடி பரப்பளவுள்ள வங்கி மதிப்பீட்டின்படி 4 கோடியே 34 லட்சத்து 849 ரூபாய் மதிப்புள்ள விஜயகாந்த் திற்கு சொந்தமான வீட்டையும், அதே விருகம்பாக் கம் கண்ணபிரான் காலனியில் உள்ள மூன்று கோடியே 4 லட்சத்து 34 ஆயிரம் மதிப்புள்ள 3013 சதுர அடி பரப்பளவு வணிக வளாகத்தையும் ஏலம் விட முடிவு செய்துள்ளோம். இந்த கல்லூரிக்காக வாங்கிய கடனை கட்டவில்லை. அந்த கடனுக்கான ஜாமீன் சொத்தாக விஜயகாந்த்தின் வீடும் வணிக வளாகமும் சான்றளிக்கப்பட்டுள்ளன. இந்த சொத்துக்களின் மொத்த மதிப்பு சுமார் 98 கோடி ரூபாய். இத்தனை சொத்துக்களையும் வங்கியில் வாங்கிய கடன் தொகையில் கட்டாமல் விடப்பட்ட 5 கோடியே 52 லட்சத்து 78 ஆயிரத்து 825 ரூபாய்க்காக ஏலம் விடப் போகிறோம்' என அறிவித்துள்ளது இந்தியன் ஓவர்சீஸ் வங்கியின் மவுண்ட் ரோடு கிளை.
ஐந்தரைக் கோடி ரூபாய் கடன் பாக்கிக்காக வங்கி மதிப்பில் 98 கோடி ரூபாய் மதிப்புள்ள சொத்துக்களை எப்படி ஏலம் விடலாம் என எழுந்த கேள்விக்கு விஜயகாந்த்தின் மனைவி பிரேமலதா பதிலளித்தார். நாங்கள் வங்கியில் வாங்கிய கடனை சரியாக கட்ட முடியவில்லை. கல்லூரி ஊழியர்களுக்கு சரியாக சம்பளம் கூட தர முடியவில்லை. சமீபகாலமாக எங்கள் குடும்பத்திற்கு சரியான வருமானமில்லை. எனது மகன் சண்முகபாண்டியன் நடித்த படம் கூட வெற்றிப்படமாக அமையவில்லை. அதனால் நாங்கள் குடியிருக்கும் வீடே ஏலத்திற்கு வந்து விட்டது. இந்த கடுமையான சூழலை எப்படி தீர்ப்பது என வங்கி அதிகாரிகளிடம் பேசி வருகிறோம்'' என்கிறார் உருக்கமாக.
நாம் வங்கி அதிகாரிகளிடம் பேசினோம். இந்தியன் ஓவர்சீஸ் வங்கி மவுண்ட் ரோடு கிளை மேலாளரிடம் கேட்டோம். "இது ஒன்றும் ஏல அறிவிப்பல்ல. உடனடியாக நாங்கள் விஜயகாந்த் தின் சொத்துக்களை ஏலம் விடப் போவதில்லை. யார் வங்கியில் கடன் வாங்கியிருந்தாலும் தொடர்ந்து மூன்று மாதம் அந்த கடன் தொகையை கட்டவில்லையென்றால் அந்த கடன்தொகை வருமானம் ஈட்டாத சொத்தாக மாறிவிடும். அதுவே ஆறு மாதம் கட்டவில்லையென்றால் அதை ஏலத்தில் விடுவோம் என வங்கி நிர்வாகம் பத்திரிகை விளம்பரம் மூலம் அறிவிப்பு ஒன்றை வெளியிடும். அதற்கு பெயர் டிமாண்ட் நோட்டீஸ். அதைத்தான் விஜயகாந்தின் சொத்துக்கள் மீது வங்கி நிர்வாகம் வெளியிட்டிருக்கிறது'' என்றார். மேலும் விபரம் அறிய சட்டப்பிரிவு மேலாளர் திரு. அனூப் அவர்களை தொடர்பு கொள்ளச் சொன்னார்கள்.
அனூப் பேசும்போது, இது ஒரு சாதாரண அறிவிப்புதான். இந்த அறிவிப்பு வெளியிடப்பட்ட 60 நாட்களுக்குள் வங்கிக்கு கட்ட வேண்டிய ஐந்தரைக் கோடி ரூபாயை எப்படி கட்டுவேன் என விஜயகாந்த் விளக்க வேண்டும். அவர் சரியான விளக்கம் தருவாரேயானால் இந்த அறிவிப்பை நாங்கள் வாபஸ் பெறுவோம். இல்லையென்றால் அந்த சொத்துக்களை ஏலம் விடும் பணியை 60 நாட்களுக்குப் பிறகு தொடங்குவோம்'' என்றார். கடந்த 19-ம் தேதி பத்திரிகை விளம்பரமாக வந்த இந்த ஏல அறிவிப்பை தொடர்ந்து விஜயகாந்த் குடும்பத்தினர் வங்கியை தொடர்பு கொண்டு கடனை அடைப்பது தொடர்பாக பேசினார்களா? என வங்கியின் மவுண்ட்ரோடு கிளை மேனேஜரை கேட்டோம். ""இதுவரை இல்லை'' என்றார்.
விஜயகாந்த் மனைவி பிரேமலதா நினைத்தால், வீட்டுக்கே வந்து பல மணி நேரம் கூட்டணி பேரம் நடத்திய மத்திய மந்திரி பியூஷ் கோயல் மூலமாக மத்திய நிதி அமைச்சர் நிர்மலா சீதாராமனிடமே பேச வாய்ப்பிருக்கிறதே? ஒரு போன் மூலம் இந்த ஏல அறிவிப்பையே நிறுத்தியிருக்கலாமே, என்ன தான் நடக்கிறது என தே.மு.தி.க. காஞ்சிபுரம் தெற்கு மாவட்ட செயலாளரும், ஆண்டாள் அழகர் கல்லூரியின் நிர்வாகத்தின் சார்பாக விஜயகாந்த்தின் காஞ்சிபுரம் சொத்துக்களை நிர்வகிப்பவருமான ராஜேந்திரனை கேட்டோம். எனக்கொன்றும் தெரியாது'' என அவர் ஒதுங்கிக் கொண்டார்.
ஏலத்தில் வந்துள்ள மூன்று சொத்துக்களில் சென்னை விருகம்பாக்கம் கண்ணபிரான் காலனி ஷாப்பிங் காம்ப்ளக்சை விற்றாலே மொத்த கடனையும் அடைக்கலாம். இது தவிர சென்னை போரூரில் ஒரு பெரிய வீட்டை விஜயகாந்த் சில வருடங்களுக்கு முன்புதான் கட்டினார். அத்துடன் கல்லூரி அமைந்துள்ள மாமண்டூருக்கு பக்கத்தில் உள்ள மதுராந்தகத்தில் நூற்றுக்கணக்கான ஏக்கரில் பண்ணை வீடு அமைத்துள்ளார். இப்படி ஏகப்பட்ட சொத்துக்கள் இருக்கும்போது வெறும் ஐந்தரைக் கோடி ரூபாய்க்காக, நூறு கோடி ரூபாய்க்கு மேல மார்க்கெட்டில் விலை போகும் கல்லூரியை ஏன் ஏலத்திற்கு கொண்டு வந்தார்கள் என தெரியவில்லை'' என்கிறார்கள் தே.மு.தி.க. தலைவர்கள்.
2009-2011 காலகட்டத்தில் தே.மு.தி.க. பிரமுகர்களிடம் இருந்து கட்சி வளர்ச்சி நிதி என்ற பெயரில் சுமார் 300 கோடி ரூபாயை தே.மு.தி.க. வசூல் செய்துள்ளது. தொடர்ந்து தோல்விக் கூட்டணியில் பிரேமலதா தே.மு.தி.க.வை இடம் பெற செய்வதால் இனி கட்சிக்கு எதிர்காலம் இல்லை என பணம் கொடுத்தவர்கள், அதனைத் திரும்ப கேட்டு நச்சரிக்க ஆரம்பித்து விட்டார்கள். அவர்களை சமாளிக்க பிரேமலதா போட்ட டிராமாதான் இந்த ஏல அறிவிப்பு'' என ஏல அறிவிப்பின் பின்னணியை விவரிக்கிறார்கள் தே.மு.தி.க. தலைவர்கள்.
சொத்துக்கள் ஏலத்துக்குப் போய் வீதிக்கு வரும் அளவுக்கு விஜயகாந்தின் நிலை இல்லை. அவரது அயராத உழைப்பு நல்ல முறையில் முதலீடு செய்யப்பட்டுள்ளது. எனினும், அரசியலுக்காக சில ஸ்டண்ட்டுகள் தேவைப்படுகின்றன'' என்கிறார்கள் விபரமறிந்தவர்கள்.