நடிகை ஜோதிகா தஞ்சை பெரிய கோயில் குறித்து பேசியது சர்ச்சையாக்கப்பட்டுள்ள நிலையில் இதுகுறித்து விடுதலைச் சிறுத்தைகள் கட்சியின் தலைவர் தொல். திருமாவளவன் அவரின் கருத்துக்கு ஆதரவு தெரிவித்து பேசியதாவது, "கரோனா தொற்றுக்கு எதிராக உலகமே போராடிக்கொண்டிருக்கின்ற இந்த வேளையில், யாதும் ஊரே யாவரும் கேளிர் என்ற கோட்பாடு இன்றைக்கு உண்மையாகிக் கொண்டிருக்கும் வேளையில், ஒருவருக்கொருவர் கடந்த கால கசப்புணர்வுகளை எல்லாம் மறந்துவிட்டு சகோதரத்துவத்துடன் இருக்க வேண்டும் என்ற எண்ணத்தை நமக்கு கற்றுக்கொடுத்துள்ளது. முற்போக்கான கருத்துகளுக்கு எதிராகப் பிற்போக்கான கருத்துகளை சில சக்திகள் தொடர்ந்து சமூக ஊடகங்களில் தெரிவித்து வருகிறார்கள்.
தாக்குதல் நடத்துவது, விமர்சனம் என்ற பெயரால் அவதூறு பரப்புவது என்று தொடர்ந்து அந்த சக்திகள் இயங்கிக்கொண்டு இருக்கிறார்கள். மக்களிடம் விரோதத்தை விதைக்க வேண்டும், அதன் மூலம் பிரிவினையைச் செய்ய வேண்டும் என்று நினைக்கிறார்கள். அதனால் இழிமொழிகளில் வசை மொழிகளை அடுத்தவர் மீது வாரி இறைக்கிறார்கள். இது வன்மையான கண்டனத்துக்குரியது. இப்படிபட்ட விஷயங்களில் நாம் நம்மை ஈடுபடுத்திக்கொள்ள கூடாது, நம் கருத்துகளை தெரிவிக்க வேண்டிய அவசியமில்லை என்ற நிலையிலும், நாம் கரோனா போன்ற வைரஸிடம் இருந்து மனித சமூகத்தை தற்காத்துக்கொள்வதற்கான போராட்டங்களில் ஈடுபட்டு வரும் நிலையில், இந்த மாதிரியான விஷயங்களில் நம் கவனம் திரும்ப கூடாது என்ற நிலையை நாம் தொடர்ந்து கடைப்பிடிக்க வேண்டும்.
நமக்கு பாரதிய ஜனதாவோடு முரண்பாடுகள் இருக்கலாம், ஆளும் அதிமுகவோடு முரண்பாடுகள் இருந்துகொண்டு இருக்கலாம். ஆனால் இந்தக் கொள்ளை நோயை விரட்ட அவர்களோடு இணைந்து விடுதலைச் சிறுத்தைகள் கட்சி தொடர்ந்து செயல்படும் என்பதை நாம் தொடர்ந்து கூறிவருகிறோம். ஜாதி, மத பித்து பிடித்தவர்கள் அவர்களை மாற்றிக்கொள்ள மாட்டார்கள் என்பதை அவர்களின் அருவருக்கதக்க இந்தகைய பேச்சுக்கள் மூலம் நாம் அறிந்துகொள்ளலாம்.
நடிகை ஜோதிகாவுக்கு ஆதரவு தெரிவிக்க வேண்டும் என்பதல்ல நம்முடைய நோக்கம். அல்லது அவரை விமர்சிக்கும் ஜாதி மத பித்து பிடித்தவர்களை விமர்சிக்க வேண்டும் என்பதல்ல நம்முடைய நோக்கம். கல்விக் கூடங்களுக்கு, மருத்துவமனைகளுக்கு கொடை அளியுங்கள் என்று கூறியது எந்த வகையில் பிழையான கருத்தாக அமைந்துள்ளது. அதனை ஏன் விமர்சிக்க வேண்டும். அந்த வகையில் நடிகை ஜோதிகா கூறிய கருத்து என்பது அனைவராலும் வரவேற்கக்கூடிய ஒரு கருத்தாகவே நான் கருதுகிறேன். கோயிலே கட்ட வேண்டாம் என்று யாரும் கூறவில்லை. நம்முடைய பண்பு கூறுகளில் சில மாற்றங்கள் தேவைப்படுகின்றது. அது மக்கள் நலன்களில் அக்கறை செலுத்தம் வகைகளில் அமைய வேண்டும் என்றுதான் நாம் எதிர்பார்க்கிறோம்" என்றார்.