தேனியில் நடந்த பொதுக்கூட்டத்தில் பேசிய ஓ.பன்னீர்செல்வமும், அவரது மகன் ரவீந்திரநாத் ஆகியோர் சசிகலா மற்றும் தினகரனை கடுமையாக குற்றம் சாட்டி பேசினர்.
அவர்களது பேச்சு குறித்து நக்கீரன் இணையதளத்திடம் பேசிய டி.டி.வி. தினகரன் அணியைச் சேர்ந்த நாஞ்சில் சம்பத்:-
ஜெயலலிதாவின் நினைவிடத்தில் தியானம் என்று ஆரம்பித்த அந்த நிமிடத்தில் இவர் பாஜகவின் கைக்கூலியாக செயல்படுகிறார் என்று நான் அப்போதே சொன்னேன். காலில் விழுவதும், கண்ணீர் சிந்துவதும், காரியம் சாதிப்பதும், காட்டிக்கொடுப்பதும் ஓ.பன்னீர்செல்வத்துக்கு கை வந்த கலை. தனது சொந்த ஊரில் ஒரு ஊரணி தோண்டி 5 கிராம மக்களுக்கு நீர் ஆதாரத்திற்கு வழியில்லாமல் செய்த வெகுஜன விரோதி பன்னீர்செல்வம்.
1989 பொதுத்தேர்தலில் ஜெயலலிதாவை எதிர்த்து நின்ற வேட்பாளருக்கு ஏஜெண்டாக இருந்த பேர்வழி பன்னீர்செல்வம். காலில் விழுந்தே காரியம் சாதித்தார். காட்டிக் கொடுத்தார். இப்பொழுது நாடாளும் பிரதமர் நரேந்திர மோடியையே போட்டுக்கொடுத்திருக்கிறார். ஒரு குறைந்தபட்ச நாகரீகம் கூட இல்லாமல் கூச்சம் நாச்சம் இல்லாமல் தேசத்தின் பிரதமர் அவரையே காட்டிக்கொடுப்பதற்கும், போட்டுக்கொடுப்பதற்கும் இவர் முன் வருகிறார் என்றால் ஒரு உண்மை இன்றைக்கு வெட்ட வெளிச்சமாகியிருக்கிறது.
அஇஅதிமுகவை சின்னாபின்னப்படுத்தவும், சிதிலப்படுத்தவும் பாஜகவுக்கு இல்லாவிட்டால் மோடிக்கு கிடைத்த ஒரு கருவிதான் பன்னீர்செல்வம். ஆகவே அதிமுகவை காப்பாற்ற வேண்டுமானால் அது டிடிவி தினகரன் மற்றும் சசிகலாவால்தான் முடியும் என்பதுதான் அதிமுகவில் உழைக்கும் தொண்டர்களின் கருத்து. ஊர் மக்களின் கருத்து. அரசியல் பார்வையாளர்களின் கருத்து.
தீர்ந்துபோகாத திராவிட இயக்கத்தின் கொள்ளிடமாக திகழுகின்ற அதிமுகவை சிதைத்தால் மட்டுமே தமிழ்நாட்டில் ஒரு இடத்தை தக்க வைத்துக்கொள்ள முடியும் என்று பாஜக இன்னும் நம்புகிறது. அதற்கு ஆட்காட்டிகள் கிடைக்க மாட்டார்களா என்று அவர்கள் வலைவீசியபோது அந்த வலையில் சிக்கியவர்தான் பொட்டு வைத்த இந்த யூதாஸ்.
ஆகவே இன்றைக்கு மோடிதான் என்னை இப்படி செய்ய தூண்டினார் என்று சொன்னதன் மூலம் ஒரு உண்மையை வெட்ட வெளிச்சமாக்கியிருக்கிற பன்னீர்செல்வத்துக்கு நன்றி. இதைத்தான் நாங்கள் நீண்ட நாட்களாக சொல்லி வருகிறோம். அரசியல் இப்போது சரியான திசையை நோக்கி நகர்ந்துகொண்டிருக்கிறது.
என்னை தோற்கடிப்பதற்கு முயற்சித்தார்கள் என்று பன்னீர்செல்வம் சொல்கிறார். அந்த முயற்சியை நாங்கள் இதுவரைக்கும் மேற்கொள்ளவில்லை. இனிமேல் மேற்கொள்வோம். பன்னீர்செல்வம் எந்த தொகுதியில் நின்றாலும் டெபாசிட் இழப்பார்.
பாண்டிச்சேரியில் போய் தினகரன் பதுங்கி வாழ்ந்தார் என்று பன்னீர்செல்வம் சொல்லுகிறார். ஆபத்து நேருகிறபோது பதுங்கி வாழ்வதுவற்கு ஏற்ற இடம்தான் பாண்டிச்சேரி. இந்தியாவுக்கான விடுதலைப் போராட்டத்தில் அன்றைக்கும் பாரதி தேர்ந்தெடுத்த இடம் பாண்டிச்சேரி. பாரதி தேர்ந்தெடுத்த இடத்தைத்தான் தினகரனும் தேர்ந்தெடுத்திருக்கிறார். இது எங்களுக்கு பெருமை தருகிற விஷயம்தான்.
நான் கோவப்பட்டால் நிறைய உண்மைகள் வெளியே வரும். அதனால்தான் பொறுமையாக இருக்கிறேன். சசிகலாவால் எனக்கு நேர்ந்த கொடுமைகளில் ஒரு சதவீதத்தையே சொல்லியிருக்கிறேன். மீதமுள்ள 99 சதவீதம், இதேபோல் கோபம் வரும்போது வெளியில்வரும் என்று சொல்லியிருக்கிறாரே ஓ.பி.எஸ்.?
கண்ணாடி வீட்டில் இருந்து கல்லெறிகிறார். ஒன்றுமில்லாமல் அரசியலுக்கு வந்தவருக்கு கிடைத்த ஐஸ்வரியங்களை நாங்கள் பட்டியலிட்டால் இவர் தமிழ்நாட்டிலேயே இருக்க முடியாது. இவ்வாறு கூறினார்.