பிரதமர் மோடியை விமர்சிப்பது என்பது எப்போதும் நடக்கும் ஒன்றுதான். அதேபோல அவர் பேசியதை காலாய்ப்பதும் ஒரு வழக்கம்தான். அப்படி அவர் பேசியதில் கலாய்க்கப்பட்ட ஒரு விஷயம்தான் பக்கோடா. இவர் பக்கோடாவை பற்றி பேசியதால், இனி பக்கோடாதான் இந்தியாவின் தேசிய உணவு என்ற அளவுக்கு கலாய்க்கப்பட்டது. பிரதமர் மோடி 2014 ஆம் ஆண்டு தேர்தல் பிரச்சாரங்களில் இரண்டு கோடி இளைஞர்களுக்கு வேலைவாய்ப்பு உருவாக்கி தருவேன் என்று வாக்களித்தார். அதை நம்பி தேர்தலில் வாக்கு அளித்தவர்கள் பலரின் தலையில் தற்போது இடி விழுந்துள்ளது. இதுபோல நம்பி வாக்கு செலுத்துவது என்பது இந்திய மக்களுக்கு பழக்கப்பட்ட ஒன்றுதான். வேலைவாய்ப்புக்கு திட்டம் வகுக்கிறார்களே தவிர, அதனால் பயனடைந்தவர்கள் யாரும் இருக்கிறார்களா என்பது கேள்வி குறியே...
கடந்த சில மாதங்களுக்கு முன்பு இளைஞர்களின் வேலைவாய்ப்புக்காக ஒரு திட்டத்தை சொல்லி இந்தியா, உலகம் முழுவதும் கலாய்க்கப்பட்டார். அது என்ன என்றால் படித்து முடித்தவர்கள் வேலை இல்லை என்று ஏன் சொல்கிறீர்கள், பக்கோடா கடை போட்டால் கூட நாளுக்கு ரூபாய் 200 சம்பாரிக்கலாம் என்றார். அதற்கு அமித் ஷா முதல் பாஜகவில் இருக்கும் அனைத்து தேசிய செயலாளர்கள் பலரும் அதை ஆதரித்தனர். காங்கிரஸ் கட்சியைச் சேர்ந்தவர்கள் வழக்கம் போல இதை விமர்சித்தனர். குஜராத் மாநில காங்கிரஸ் கட்சியின் தீவிர தொண்டர் ஒருவர் ஒரு படி மேலே ஏறி பக்கோடா கடை திறந்தே கலாய்த்தார். அதுவும் பரவலாக பேசப்பட்டு வந்தது. அப்படி கலாய்க்க பக்கோடா கடை போட்டவர், இன்று ஒரு நாளுக்கு கிட்டதட்ட 600 கிலோ வரை பக்கோடா தயாரித்து 35 கடைகளுக்கு விநியோகம் செய்து வருகிறார். அவர் பேசியதை கலாய்க்கும் விதமாக இந்தியா முழுவதும் பலரும் பக்கோடா போட்டு போராட்டம் நடத்தினார்கள் என்பதும் குறிப்பிடத்தக்கது.
இதைப்பற்றி அந்த பக்கோடா கடையை திறந்து வெற்றிகரமாக நடத்திகொண்டிருக்கும் நாராயன்பாய் கூறியது, "நான் தற்போதும் காங்கிரஸ் கட்சியைச் சேர்ந்தவன்தான். அடுத்த ஜென்மம் என்று ஒன்று இருந்தால் அப்போதும் காங்கிரஸ் கட்சியில்தான் இருப்பேன். மோடி இந்த பக்கோடா திட்டத்தை பற்றி சொன்னபொழுது வெறும் 10 கிலோ மூலப்பொருட்களுடன் இந்த கடையை ஆரம்பித்தேன். இரண்டு மாத உழைப்பிற்கு பின்னர் இன்று ஒருநாளுக்கு 600 கிலோ வரை பக்கோடா போடுகிறேன். அது 35 கடைகளால் வாங்கப்படுகிறது என்பது மகிழ்ச்சிதான். இந்த கடைக்கு ஸ்ரீ ராம் என்று பெயர் வைத்துள்ளேன். (ராமாயணத்தின் படி) ராமரின் பெயர் சொன்னால் கடலில் கூட கல் மிதக்கும், ராமரின் பெயரை வைத்து அமித் ஷா, மோடி ஆட்சியை பிடிக்கிறார்கள், ஏன் எனது கடை அவர் பெயர் வைத்தால் ஓடாதா".
இந்த கடையில் காலை வேளையிலேயே 300 கிலோ பக்கோடா விற்று தீர்ந்துவிடுகிறதாம்...