மணிப்பூர் பிரச்சனை, தமிழ்நாட்டில் பாஜகவின் பாதயாத்திரை உள்ளிட்ட பல்வேறு விஷயங்கள் குறித்து தன்னுடைய கருத்துக்களை அரசியல் செயற்பாட்டாளர் லயோலா மணிகண்டன் நம்மோடு பகிர்ந்து கொள்கிறார்.
குற்றமுள்ள நெஞ்சு குறுகுறுக்கும் என்பார்கள். அதனால் தான் மணிப்பூர் விவகாரத்தில் பிரதமரால் மக்களை சந்திக்க முடியவில்லை. அவர் இதுவரை பத்திரிகையாளர்களையே சந்தித்ததில்லை. இந்தியர்களாய் வாழ்ந்து வந்த மக்களிடம் மதப் பிரச்சனையைத் தூண்டியது யார்? சென்னையை விட சிறிய இடமான மணிப்பூரில் ஏற்பட்ட கலவரத்தை உங்களால் அடக்க முடியாதா? கலவரம் செய்தவர்களை அடித்து சிறைக்குள் தள்ளியிருக்க முடியாதா? இந்தக் கலவரத்தை வளர்க்க அரசு தான் முயற்சி எடுக்கிறது. அந்த முதலமைச்சர் ஏன் இன்னும் மக்களை சென்று சந்திக்கவில்லை?
இந்தக் கலவரம் குறித்து மகளிர் ஆணைய உறுப்பினராக இருக்கும் குஷ்பூ வாய் திறந்தாரா? வானதி சீனிவாசன் பேசினாரா? பாதிக்கப்பட்டவர்களை இவர்கள் நேரில் சென்று பார்த்தார்களா? பாஜகவின் மகளிர் அணியினர் என்ன செய்துகொண்டிருக்கிறார்கள்? இவர்களுடைய இரட்டை வேடம் இதில் வெளிப்படுகிறது. அண்ணாமலையின் பாதயாத்திரைக்காக இவர்கள் 200 கோடி வசூலித்துள்ளனர். அவர் செல்லும் வாகனம் அவ்வளவு வசதிகள் நிறைந்ததாக இருக்கிறது. இது பாதயாத்திரையா, இன்பச் சுற்றுலாவா?
ஒரு நாளைக்கு இவர்கள் ஒரு கிலோமீட்டர் தான் நடக்கிறார்கள். மக்களை ஏமாற்றும் வேலை இது. அண்ணாமலையின் வேலை ஆடியோ மற்றும் வீடியோக்களை எடுப்பது தான். அண்ணாமலை எப்போது வேண்டுமானாலும் மாற்றப்படலாம். தமிழிசை சௌந்தரராஜன் மாநில தலைவராக இருந்தபோது தான் அதிக உறுப்பினர்களை சேர்த்தார். அதற்கு அவருக்கு கிடைத்த பரிசு தான் ஆளுநர் பதவி. அண்ணாமலை வந்த பிறகு யார் கட்சியில் சேர்கிறார்கள்? காசு கொடுத்து கொடியை நட்டு வைப்பது எல்லாம் சாதனை அல்ல. ஏன் உள்ளாட்சித் தேர்தலில் இவர்கள் வெற்றி பெறவில்லை?
'ஆழ்ந்த இரங்கல்' என்பதுதான் இப்போது ட்ரெண்டிங்கில் இருக்கிறது. யூடியூப் சேனல்களுக்காக இவர்கள் பல கோடி ரூபாயை செலவு செய்துள்ளனர். பாஜகவில் அனைவரும் அண்ணாமலை மேல் அதிருப்தியில் தான் இருக்கின்றனர். அண்ணாமலையின் பாதயாத்திரை தொடக்க விழாவுக்கு முதலில் மோடி தான் வருவதாக இருந்தது. ஆனால் அவர் அதை புறக்கணித்தார். ராகுல் காந்தி சென்றது ஒற்றுமைக்கான பயணம். அண்ணாமலை செல்வது பிரிவினைக்கான பயணம். பல இடங்களில் இஸ்லாமியர்களின் கடைகளை இவர்கள் தாக்குகிறார்கள்.
கிறிஸ்தவர்களும் இஸ்லாமியர்களும் சாத்தானின் பிள்ளைகள் என்று சமீபத்தில் சீமான் பேசினார். சீமான் இப்போது முழு சங்கியாக மாறிவிட்டார். தமிழ்நாட்டில் மிகப்பெரிய பிரச்சனை ஏதோ நடக்கப்போகிறது என்பதற்கான அறிகுறிகள் தெரிகின்றன. ஊழலுக்கு எதிரான கட்சி பாஜக என்றால் அதிமுகவுடன் அவர்கள் ஏன் கூட்டணி வைக்கிறார்கள்? அதிமுக முன்னாள் அமைச்சர்களின் வீடுகளுக்கு அமலாக்கத்துறை ஏன் செல்வதில்லை? அண்ணாமலையின் பாதயாத்திரையை கூட்டணிக் கட்சித் தலைவர்களே புறக்கணித்தனர். இந்தியாவுக்கான பாதுகாப்பு அரணாக தமிழ்நாடு தான் விளங்குகிறது. அதிமுக, சிவசேனா உள்ளிட்ட பல்வேறு கட்சிகளையும் பிரித்தது பாஜக தான். அதிகாரம் தான் இவர்களுக்கு முக்கியம்.