தமிழர்களை போல், முருகனும் பா.ஜ.கவை ஏற்கமாட்டார் என கூறியுள்ளார் அரியலூர் மாவட்ட திமுக செயலாளரும், முன்னாள் எம்.எல்.ஏ.வுமான எஸ்.எஸ்.சிவசங்கர். மேலும் தமிழக வரலாறு தெரியாமல் முரளிதர் ராவ் பேட்டி அளித்துள்ளதாகவும் கூறியுள்ளார்.
இதுதொடர்பாக எஸ்.எஸ்.சிவசங்கர் நக்கீரன் இணையதளத்திடம் கருத்து தெரிவிக்கையில்,
"தமிழகத்தில் பாஜகவை எதிர்ப்பவர்கள் கடவுள் முருகனுக்கு எதிரானவர்களே", என்று பா.ஜ.க மாநில பொறுப்பாளர் முரளிதர் ராவ் பேட்டி கொடுத்துள்ளார்.
முரளிதர் ராவ் பேட்டியிலேயே பா.ஜ.கவினரின் அகம்பாவம் வெளிப்படுகிறது.
கடவுள் முருகனுக்கு எதிரானவர்கள் பா.ஜ.கவிற்கு எதிரானவர்கள் என்று சொன்னால், இவர்கள் கடவுள் முருகனை மதிப்பதாக அர்த்தம். ஆனால் முரளிதர் ராவ் சொல்வது பா.ஜ.கவை எதிர்ப்பவர்கள் கடவுள் முருகனுக்கு எதிரானவர்கள்.
முரளிதர் ராவ் சொல்வதை எப்படி அர்த்தம் கொள்வது?
கடவுள் முருகன் பா.ஜ.கவின் தொண்டரா, பா.ஜ.கவின் எதிரிகளை அவரின் எதிரிகளாக கொள்ள?
கடந்த மாதம் கடவுள் முருகனை பா.ஜ.கவினர் எப்படி அவமானப் படுத்தினார்கள் என்பதை தமிழகமே பார்த்தது. அதே போல் தான் முரளிதர் ராவும் கடவுள் முருகனை அவமானப்படுத்துகிறார்.
ஒட்டடை அடிக்கும் டஸ்டரில் பேப்பர் சுற்றி வேல் என ஏமாற்றினார் ஒரு பா.ஜ.க தலைவர். ராமரை வீட்டினுள்ளும், முருகனை வாசலிலும் வைத்து வணங்கினார் ஒரு பெண் தலைவர். ஒருவர் முதல் இரவுக்கு போகும் வள்ளிகந்தன் போல் கழுத்தில் மல்லிகைப் பூவை சுற்றிக் கொண்டு கையில் அட்டை வேலை வைத்துக் கொண்டு போஸ் கொடுத்தார். இன்னொருவர் பூஜை அறையில் இடம் கொடுக்க மனமில்லாமல், சமையலறையில் முருகன் படத்தை வைத்து வணங்குவதாக நடித்தார். கணித மேதை ஒருவர், பாக்கெட் டைரி முருகன் படத்தை வைத்து பூஜிப்பதாக பாவ்லா காட்டினார்.
கடவுள் இல்லை என்று சொல்லும் நாத்திகவாதிகள் கூட கடவுளரை இப்படி அவமானப் படுத்த மாட்டார்கள். முருகனை "படுத்தி" எடுத்து விட்டார்கள், இந்த "மேல்மட்ட" பா.ஜ.கவினர்.
அவர்கள் அப்படி தான் செய்வார்கள். காரணம், அவர்கள் முருகனை வணங்குபவர்கள் கிடையாது. விநாயகனை வணங்குபவர்கள் அவர்கள். வினாயகனிடம் உள்ள 'ஒன்று' முருகனிடம் கிடையாது. அவர்களை பொறுத்தவரை முருகன் காடு, மலையில் இருக்கும் தமிழ் கடவுள். அதனால் முருகனை வணங்க மாட்டார்கள். அதனால் தான், அவர்களின் வேல் பூஜை நாடகம் பல்லிளித்தது.
அவர்கள் எல்.முருகனை மாநிலத் தலைவராக நியமித்ததையே ஏற்க முடியாமல் தவிப்பவர்கள். கடவுள் முருகனையும் அப்படி தான் தவிப்பார்கள்.
பாவம் முரளிதர் ராவ், அவருக்கு இந்த நுட்பம் புரியாமல், பேட்டி கொடுத்திருக்கிறார். முரளிதர் ராவ்க்கு தமிழ்நாட்டு வரலாறும் தெரியாது.
தி.மு.க ஆட்சி 1967ல் முதல் முறை அமைந்த போது, தி.மு.கவினர் திராவிடர் கழகத்து தயாரிப்புகள், அதனால் நாத்திகர்களாக தான் இருப்பார்கள், அவர்கள் கோவில்களை புறகணிப்பார்கள் என்ற எண்ணம் இருந்தது. அப்படி பிரச்சாரமும் செய்யப்பட்டது. ஆனால் அறநிலையத்துறை மூலம் பல கோவில்களுக்கு கும்பாபிசேகம் செய்யப்பட்டது, ஓடாமல் இருந்த தேர்கள் ஓட வைக்கப்பட்டது, கோவில்களில் திருமண மண்டபங்கள் அமைக்கப்பட்டன.
இவற்றை பார்த்த முருகப் பெருமான் புகழ்பாடும் திருமுருக கிருபானந்த வாரியார், ''நல்ல காரியம் செய்தாரப்பா முதல்வர் என்று எம்பெருமானே மகிழ்வார்", என அன்றைய முதல்வர் கலைஞரை புகழ்ந்தார். வாரியார் சொன்ன 'எம்பெருமான்' கடவுள் முருகன் தான்.
பின்னர் எம்.ஜி.ஆர் ஆட்சிக் காலத்தில், திருச்செந்தூர் முருகக் கடவுளின் "வேல்" திருடு போனது. அப்போது, அதனை கண்டித்து நடைபயணம் போய் போராட்டம் நடத்தியவர் தி.மு.க தலைவர் கலைஞர் தான்.
ஆட்சியில் இருந்த போது முருகனுக்கு விழா எடுத்தவரும் கலைஞர் தான், எதிர்கட்சியாக இருந்த போது முருக வேலுக்காக போராடியவரும் கலைஞர் தான்.
வரலாறு படித்து விட்டு வாருங்கள் முரளிதர் ராவ்.
நீங்கள் நினைக்கும் "ஷுப்ரமண்யா" அல்ல இவன்.
இவன் "தமிழன்" முருகன்.
நோட்டாவோடு போட்டி போட்டு 3% ஓட்டு வாங்கியது உங்கள் பா.ஜ.க. தமிழகத்தில் இருக்கும் ஏனைய 97% மக்கள் பா.ஜ.கவை ஏற்கவில்லை.
தமிழர்களை போல், முருகனும் பா.ஜ.கவை ஏற்கமாட்டார். முருகனை வைத்து தமிழகத்தில் அரசியல் செய்ய நினைத்தால், சம்காரம் தான் நடக்கும்! இவ்வாறு கூறியுள்ளார்.