மத்திய அரசின் பல்வேறு நடவடிக்கைகள் குறித்து தன்னுடைய கருத்துக்களை தமிழ்நாடு முற்போக்கு எழுத்தாளர்கள் மற்றும் கலைஞர்கள் சங்கத்தின் கடலூர் மாவட்டப் பொறுப்பாளர் பால்கி எடுத்துரைக்கிறார்
எதிர்க்கட்சிகளின் கூட்டணி எப்படி இருக்க வேண்டும் என்பதற்கான விவாதம் பெங்களூரு கூட்டத்தில் நடைபெற்றது. பாஜக ஆட்சியை எதிர்ப்பதில் தமிழ்நாடுதான் முன்னணியில் இருக்கிறது. இந்த எதிர்க்கட்சிகளின் கூட்டணிக்கான அடுத்தகட்ட வளர்ச்சி தமிழ்நாட்டில் தொடங்கிவிட்டது. இந்தியாவில் மீண்டும் பாஜகவை ஆட்சியில் அமர்த்தினால், எந்த ஜனநாயக நடைமுறையையும் அவர்கள் கடைபிடிக்க மாட்டார்கள் என்று தமிழ்நாடு முதலமைச்சர் சரியாகவே சொல்கிறார்.
எதிர்க்கட்சிகளின் கூட்டணி மீது பிரதமர் கடுமையான கோபத்தில் இருக்கிறார். கிழக்கிந்தியக் கம்பெனிக்கும், தீவிரவாத அமைப்புகளுக்கும் 'இந்தியா' என்கிற பெயர் இருக்கிறது என்று அவர் ஒப்பிடுகிறார். கிழக்கிந்தியக் கம்பெனியை எதிர்த்துப் போராடாமல் ஆட்சிக்கு வந்தவர்கள் இவர்கள். வரலாறு தெரிந்தவர்களுக்கு மோடியின் பேச்சின் சூட்சுமம் புரியும். இந்திய பொருளாதாரம் மேம்பட, இறக்குமதியைக் கொஞ்சம் குறைக்க வேண்டும் என்று பொருளாதார நிபுணர்கள் பலர் கூறினர். ஆனால் இவர்களுடைய ஆட்சியில் தொடர்ந்து இறக்குமதி அதிகரித்து வருகிறது.
மோடி அரசின் பொருளாதாரக் கொள்கைகளை நிதியமைச்சர் நிர்மலா சீதாராமனின் கணவரே விமர்சிக்கிறார். விவசாயம் செய்பவர்களின் எண்ணிக்கையே இப்போது குறைந்துவிட்டது. மிகச் சில கம்பெனிகள் மட்டும்தான் வளர்ச்சி கண்டுள்ளன. 2008 ஆம் ஆண்டு காலகட்டத்தில் உலகப் பொருளாதார நெருக்கடி ஏற்பட்டபோது, இந்தியாவில் பொதுத்துறை வங்கிகளின் செயல்பாட்டால் இந்தியப் பொருளாதாரம் காப்பாற்றப்பட்டது. பாஜக ஆட்சியில் சாதாரண மக்களிடையே சேமிப்பு என்பது மிகவும் குறைந்துவிட்டது. எனவே மேல் நிலையில் இருக்கும் தொழிலதிபர்களின் தொழில்கள் மட்டுமே காப்பாற்றப்பட்டுள்ளன.
பாஜகவால் ஏற்பட்டுள்ள இழப்புகளை ஆட்சி மாற்றத்தால் மட்டும் சரிசெய்ய முடியாது. அதற்குப் பல்வேறு நடவடிக்கைகள் தேவை. மக்களின் வாங்கும் சக்தியை அதிகரிக்க இந்த அரசு எதையும் செய்யவில்லை. அமலாக்கத்துறையின் இயக்குநராக இருக்கும் எஸ்.கே.மிஸ்ராவின் பதவிக்காலத்தை நீட்டிப்பு செய்ய வேண்டும் என மத்திய அரசு நீதிமன்றத்தில் கேட்டது. நீதிமன்றமும் செப்டம்பர் மாதம் வரை அவருடைய பதவியை நீட்டிக்கலாம் என்று கூறியுள்ளது. இப்படி செய்திருக்க வேண்டிய அவசியமில்லை. மணிப்பூர் விவகாரம் பற்றிப் பேச நாடாளுமன்றத்துக்கு பிரதமர் வராதது சாதாரண மக்களாலேயே விமர்சிக்கப்படுகிறது. அவர் வந்து பேச வேண்டும் என்பதற்காகத்தான் எதிர்க்கட்சிகள் அவர் மீது நம்பிக்கையில்லாத் தீர்மானம் கொடுத்துள்ளன.