அண்ணாமலையின் பாதயாத்திரை மற்றும் தற்கால அரசியல் குறித்து தன்னுடைய கருத்துகளை மூத்த பத்திரிகையாளர் தமிழா தமிழா பாண்டியன் நம்மோடு பகிர்ந்து கொள்கிறார்....
“அண்ணாமலையின் அரசியல் கர்நாடகத் தேர்தலுக்குப் பிறகு பாதாளத்துக்கு சென்றுவிட்டது. சி.டி. ரவியை தூக்கிவிட்டார்கள். கர்நாடக ஃபார்முலாவில் பாஜக பெரிய தோல்வியை சந்தித்திருக்கிறது. அங்கு மீண்டும் பாஜகவை ஆட்சிக்கு கொண்டுவருவதற்கு இவர்கள் மேற்கொண்ட முயற்சிகள் மிகப்பெரிய தோல்வியைக் கண்டுள்ளன. காங்கிரஸ் கட்சிக்கு மிகப்பெரிய பிம்பத்தை ஏற்படுத்திக் கொடுத்த தேர்தல் கர்நாடக சட்டமன்ற தேர்தல். தமிழ்நாட்டில் பாதயாத்திரை மூலம் தங்களுக்கான வாக்கு வங்கியை உருவாக்க முடியும் என்று இவர்கள் நினைக்கின்றனர்.
அண்ணாமலை தொண்டர்களோடு ஒருவராக இருப்பதில்லை. கன்ஷிராம், மாயாவதி போன்றவர்கள் தலித் அரசியலுக்காகப் பயன்படுத்திய வேனை இவர்கள் தங்களுடைய கட்சிக்காக பயன்படுத்துகின்றனர். அண்ணாமலையை ஆர்எஸ்எஸ் தான் கட்டுப்படுத்துகிறது. அவர்களோடு இவர் நேரடி தொடர்பில் இருக்கிறார். அதனால்தான் இவருக்கு இவ்வளவு முக்கியத்துவம் கொடுக்கப்படுகிறது. அண்ணாமலையின் பெயரைச் சொல்லி அவருடைய மைத்துனர் வசூல் வேட்டை நடத்துகிறார். அதிமுக முன்னாள் அமைச்சர்கள் அண்ணாமலைக்கு பணம் கொடுக்கின்றனர். அண்ணாமலையின் மைத்துனருடன் முன்னாள் அமைச்சர் வேலுமணி பார்ட்னராக இருக்கிறார். அண்ணாமலையின் பயணத்துக்கு வேலுமணி, தங்கமணி, வீரமணி, விஜயபாஸ்கர் ஆகியோர் பணம் கொடுத்துள்ளனர். இதனால்தான் இவர்கள் மீது நடவடிக்கை எடுப்பதற்கு ஆளுநர் முட்டுக்கட்டையாக இருக்கிறார்.
அதிமுகவும் பாஜகவும் கட்சிகள் என்கிற அடிப்படையில் வேறுவேறாக இருந்தாலும், இருவரும் ஒன்றுதான். ஒருவருடைய கொள்கையை இன்னொருவர் எப்போதோ ஏற்றுக்கொண்டு விட்டனர். ராகுல் காந்தி பாரத் ஜோடோ யாத்திரை சென்ற பிறகுதான் பாஜக கதற ஆரம்பித்தது. அனைத்து எதிர்க்கட்சிகளையும் ஒன்றிணைத்ததே அந்த யாத்திரைதான். அண்ணாமலை செல்வது வீட்டிலிருக்கும்போது நாம் செல்லும் வாக்கிங் போன்றதுதான். உலகிலேயே மாலை 4 மணிக்கு ஆரம்பித்து 6 மணிக்கு முடிக்கிற ஒரே பாதயாத்திரை அண்ணாமலையுடைய பாதயாத்திரைதான். இவர் வைத்திருக்கும் புகார் பெட்டியில் புகார் கொடுக்கும் மக்களுடைய குறையை எவ்வாறு தீர்க்கப் போகிறார் என்பது யாருக்கும் தெரியாது. முதலமைச்சர் சொல்வது போல் இது ஒரு பாவ யாத்திரை தான்” என்றார்.