தேர்தல் அறிவிப்புக்கு முந்தைய நாள் எடப்பாடியின் வீட்டுக்கு வந்த கட்சிக்காரர்கள் எல்லாம், ஏதோ கேரளாவில் உள்ள கோவிலுக்கு வந்ததுபோல் உணர்ந்தார்கள். யாககுண்டம், மந்திர உச்சாடனம் என கேரள சாமியார்கள் புடைசூழ அமர்ந்திருந்தார்கள் எடப்பாடி பழனிசாமியும், அவரது குடும்பத்தினரும். எடப்பாடி பழனிசாமியின் ராசிக்கு உகந்த அந்நாளில் மிகப் பெரிய பூஜை ஒன்றை, அவருக்கு மிக நெருக்கமான கேரளாவைச் சேர்ந்த ஜோதிடர்கள் மற்றும் மந்திரவாதிகள் துணையுடன் நடத்தி முடித்தனர். அதன் பிறகுதான் கூட்டணிப் பேச்சுவார்த்தைகளுக்கு இறுதி வடிவம் கொடுக்க ஆரம்பித்தார் எடப்பாடி பழனிசாமி.
பா.ம.க. கேட்ட எண்ணிக்கைக்கு அ.தி.மு.க. ஒத்துக்கொள்ளவில்லை. உங்களுக்கு ராஜ்ய சபா சீட் ஏற்கனவே தந்துவிட்டோம் என அ.தி.மு.க. தரப்பில் தங்கமணி, எஸ்.பி.வேலுமணி, கே.பி.அன்பழகன், கே.பி.முனுசாமி, சி.வி.சண்முகம் ஆகியோர் அடங்கிய அமைச்சர்கள் குழு பேச்சுவார்த்தையை இறுதி செய்ய வேண்டும் என டாக்டர் ராமதாஸிடமும், அன்புமணியிடமும் பேசிக்கொண்டிருந்தது. நாங்கள் கூட்டணிக்குள் வராவிட்டால் எடப்பாடி தொகுதியிலேயே பழனிசாமி வெற்றி பெறமாட்டார் என பா.ம.க. எதிர்வாதம் பேசிக்கொண்டிருந்தது.
அத்துடன் வன்னியர்களுக்கு உள்இடஒதுக்கீடு கொடுக்கவில்லையென்றால் நாங்கள் ஓட்டுக் கேட்டு வன்னியர் மக்கள் மத்தியில் போக முடியாது என வாதம் செய்த பா.ம.க.வுக்கு, வெயிட்டாக தர வேண்டியதைக் கொண்டு சென்று இறக்கினார் எடப்பாடி பழனிசாமி. அத்துடன் 10.5 சதவீதம் வன்னியர்களுக்கு உள் இடஒதுக்கீடு தருகிறோம் என பேரம் பேசியது அ.தி.மு.க.. 15 சதவீதம் வேண்டும் என பா.ம.க. தரப்பில் படிய மறுத்தார்கள். அதன் பிறகு தொடர் பேச்சுவார்த்தையின் இறுதியாக, சட்டமன்றக் கூட்டத்தொடரின் கடைசி நாளன்று பா.ம.க. தலைவர் ஜி.கே.மணியை அனுப்பி எடப்பாடி பழனிசாமியை சந்திக்க வைத்தார்கள்.
இரு தரப்புக்கும் நடந்த மாரத்தான் பேச்சுவார்த்தை, சட்டமன்றக் கூட்டத்தொடரின் இறுதி நாளில் மதியம்தான் முடிவடைந்தது. அதன் பிறகு, முதலமைச்சராக எடப்பாடி பழனிசாமி தனது கடைசிப் பத்திரிகையாளர் சந்திப்பை முடித்துவிட்டு சபைக்குள் நுழைந்து, வன்னியர்களுக்கான இட ஒதுக்கீட்டைச் சட்டமன்றத்தில் அறிவித்து, அதை கவர்னரின் கையெழுத்துக்கும் அனுப்பிய பிறகு, மறுநாள் பா.ம.க.வுக்கு 23 தொகுதிகள் என நட் சத்திர ஓட்டலில் ஒப்பந்தம் முடிவானது.