ஆளுநர் மற்றும் பாஜகவின் அரசியல் குறித்து பல்வேறு கருத்துக்களை நம்முடன் திராவிடர் கழக மகளிர் பாசறை மாநிலச் செயலாளர் வழக்கறிஞர் மணியம்மை பகிர்ந்துகொள்கிறார்.
அவர் பேசும்போது, “ஆளுநர் தன்னுடைய பணி என்ன என்பதையே மறந்துவிட்டு பாஜககாரர் போல் செயல்பட்டு வருகிறார். பாஜகவின் ஊதுகுழல் தான் ஆளுநர். திராவிடம் என்பது யாராலும் வீழ்த்த முடியாத ஒன்று. திராவிடம் என்றால் சமூகநீதி, சமத்துவம், பெண்ணுரிமை. எங்களை விமர்சிக்கும் ஹெச்.ராஜாவின் பருப்பு தமிழ்நாட்டில் வேகாது என்பது அவருக்கே தெரியும். பாஜகவின் ஆட்சியில் மணிப்பூர் இன்று பற்றி எரிகிறது. மக்கள் பதற்றத்தில் துடிக்கிறார்கள். ஆளுநர், ஹெச்.ராஜா போன்றவர்கள் அங்கும் திரும்பிப் பார்க்க வேண்டும். பொய்யிலே பிறந்து பொய்யிலே வளர்ந்தவர்கள் சங்கிகள்.
மக்களை திசை திருப்ப இவர்கள் செய்யும் முயற்சி பலிக்காது. கவுன்சிலராகக் கூடத் தகுதியில்லாதவர்கள் இங்கு ஆட்சியைக் கலைத்துவிடுவோம் என்கிறார்கள். இது வடநாடு அல்ல, தமிழ்நாடு. அதுபோக ஆட்சியைக் கலைப்பது என்பது இன்று எளிதான காரியமல்ல. இல்லாத பிரச்சனைகளை உருவாக்கி தமிழ்நாட்டின் அமைதியை சீர்குலைக்க சங்கிகள் முயல்கின்றனர். தமிழ்நாடு அமைதியான மாநிலம் என்று உச்சநீதிமன்றத்தின் தலைமை நீதிபதியே சொல்கிறார். மக்கள் அவருடைய பேச்சைக் கேட்பார்களா? அல்லது பாஜகவின் அடியாளாக இருக்கும் ஆளுநரின் பேச்சைக் கேட்பார்களா?
தமிழ்நாட்டில் மட்டும்தான் மது இருப்பது போல் பேசுகின்றனர். கர்நாடகாவில் மது இல்லையா? பாஜக ஆளும் மற்ற மாநிலங்களில் மது இல்லையா? சாதாரண கூலித் தொழிலாளியின் பெண்ணான நந்தினி இன்று பிளஸ் 2 தேர்வில் 600-க்கு 600 மதிப்பெண் எடுத்துள்ளார். இதுதான் திராவிட மாடல். கள்ளக்குறிச்சி கலவரத்தில் ஆர்எஸ்எஸ் உள்ளே புகுந்தது. தவறு செய்பவர்கள் அனைவரின் மீதும் முதலமைச்சர் நடவடிக்கை எடுத்து வருகிறார். தமிழ்நாடு அரசு எழுதிக் கொடுத்ததை சட்டமன்றத்தில் படிக்க மாட்டேன் என்றார் ஆளுநர். கடைசியில் அவரே சட்டமன்றத்தை விட்டு வெளியேறினார்.
ஆளுநர் என்ன செய்தாலும் அவருடைய கனவு இங்கு பலிக்காது. ஆரியத்துக்கு எதிரானது தான் திராவிடம். மக்களுக்கு உதவி செய்வது போல் உள்ளே நுழைந்து பழங்குடியின மக்களை ஆக்கிரமிப்பது தான் ஆர்எஸ்எஸ் ஸ்டைல். இந்தியாவில் எங்குமே இல்லாத திட்டம் பள்ளிகளில் காலை உணவு வழங்கும் திட்டம். பூண்டு, வெங்காயம் எல்லாம் சாப்பிடக்கூடாது என்று சொன்னார் நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன். அதுதான் அட்சயபாத்திரம் திட்டத்திலும் இருக்கிறது. அதை இங்கு அனுமதிக்க முடியாது. மாட்டு வால் சூப் கொடுக்கச் சொல்லுங்கள். அந்தத் திட்டத்தை நாங்கள் அனுமதிக்கிறோம்.” என்றார்.