
.
இந்தியாவில் சமூகப் பரவலாக கரோனா வைரஸ் மாறவில்லை என இந்திய மருத்துவ ஆராய்ச்சி கவுன்சில்(ஐ.சி.எம்.ஆர்.) இயக்குநர் பல்ராம் பார்காவும், தமிழகத்தில் சமூகப் பரவல் இல்லை என முதல்வர் எடப்பாடி பழனிசாமியும் கூறியிருப்பது அதிர்ச்சியை ஏற்படுத்தியிருக்கிறது.
இதுதான் உண்மை எனில் இந்தியாவின் பெரு நகரங்களான சென்னை, டெல்லி, மும்பையில் நாளுக்கு நாள் கரோனா தொற்று அதிவேகமாக அதிகரித்து வருவது ஏன்? எனக் கேள்வி எழுப்புகிறார்கள் கரோனா தடுப்புப் பணிகளில் ஈடுபட்டுள்ள டாக்டர்கள். இதற்கிடையே தனியார் மருத்துவமனைகளில் சிகிச்சைக்கான கட்டணம் மற்றும் படுக்கைகள் ஒதுக்கீடு குறித்த விவகாரங்களில் பல வில்லங்கங்கள் எதிரொலிக்கின்றன.

படுக்கைகள் குறித்து சுகாதாரத்துறைத் அதிகாரிகளிடம் பேசியபோது, ’அரசு மற்றும் தனியார் மருத்துவமனைகளில் கரோனா நோயாளிகளுக்கான படுக்கை வசதிகள் போதுமான அளவில் இல்லை என்கிற குற்றச்சாட்டுகள் தொடர்ச்சியாக இருக்கிறது. ஆனால், 11.6.2020 நிலவரப்படி கரோனா நோயாளிகளுக்காக அரசு மருத்துவமனைகளில் 5,000 படுக்கைகளும், 155 தனியார் மருத்துவமனைகளில் 8,148 படுக்கைகளும் இருக்கின்றன. சென்னையில் மட்டும் 31 தனியார் மருத்துவமனைகளில் 3,246 படுக்கைகள் உள்ளன. தமிழகம் முழுவதும் தனியார் மருத்துவமனைகளில் மட்டும் சுமார் 90 சதவீத படுக்கைகள் பயன்படுத்தப்பட்டுள்ளது. 10 சதவீத படுக்கைகள் காலியாக இருக்கிறது என்கிறார்கள்.
நம்மிடம் பேசிய அரசு மருத்துவமனை டாக்டர்களோ, "சென்னையில் தினமும் அதிகரித்து வரும் கரோனா நோயாளிகளைக் கணக்கிடும் போது அரசும், தனியார் மருத்துவமனைகளும் தெரிவிக்கும் புள்ளிவிபரங்கள் ஹம்பக்காக இருக்கின்றன. சென்னையில் தினமும் கரோனா தொற்றால் பாதிக்கப்படுபவர்களின் எண்ணிக்கை 1,000 கணக்கில் அதிவேகமாக அதிகரிக்கிறது. கடந்த 10 நாட்களில் மட்டும் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 10,000-த்தை கடந்துள்ளது.

அப்படியிருக்கும் போது தனியார் மருத்துவமனைகளில் படுக்கைகள் காலியாக இருப்பதாகக் காட்டுவது எந்த உண்மையை மறைப்பதற்காக? தனியார் மருத்துவமனைகளில் படுக்கைகள் காலியாக இருந்தால் நோயாளிகளைச் சம்மந்தப்பட்ட ஹாஸ்பிட்டலுக்கு அரசு அனுப்பி வைக்கலாமே? அதைச் செய்ய அரசு ஏன் முன்வரவில்லை? இத்தனைக்கும் முதல்வரின் காப்பீட்டு திட்டத்தில் கரோனா சிகிச்சையையும் அரசு இணைத்துள்ள சூழலில், தனியார் மருத்துவமனைகளுக்கு நோயாளிகளை அனுப்பி வைத்திருந்தால் படுக்கைகள் இன்றைய தேதியில் காலியாக இருந்திருக்க முடியாது. ஆனால், காலியாக இருப்பதாகச் சொல்வதன் மூலம், படுக்கைகளுக்குப் பற்றாக்குறை இல்லை என்பதை நிரூபிக்கப் பார்க்கிறார்கள்.
அரசு மருத்துவமனைகளிலுள்ள 5,000 படுக்கை வசதிகளை 10,000-ஆக உயர்த்த நடவடிக்கைகள் எடுக்கப்பட்டிருப்பதாக அறிவித்துள்ளது அரசு. ஐந்தாம் கட்ட ஊரடங்கு நடந்துவரும் நிலையில், படுக்கைகளின் எண்ணிக்கையை உயர்த்த இப்போதுதான் நடவடிக்கை எடுத்துள்ளதாக அரசு சொல்வது மக்களின் உயிர்மீது அரசுக்கு அக்கறையில்லை என்பதையே காட்டுகிறது'' என்கிறார்கள் அரசு மருத்துவமனை டாக்டர்கள்.
இந்த நிலையில், தனியார் மருத்துவமனைகளில் கரோனா சிகிச்சைக்கான படுக்கைகள் ஒதுக்குவது பற்றி தனியார் மருத்துவமனை மற்றும் தனியார் மருத்துவக் கல்லூரி மருத்துவமனைகளின் இயக்குநர்கள் 400 பேரிடம் காணொலி காட்சி வழியாக ஆலோசனை நடத்தினார் தமிழக சுகாதாரத்துறை அமைச்சர் விஜயபாஸ்கர்.

அப்போது, ’தனியார் மருத்துவமனைகளில் கரோனா படுக்கைகளின் ஒதுக்கீடுகள் வெளிப்படையாக இருக்க வேண்டும். மொத்தம் எத்தனை படுக்கைகள் ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது? அதில் பயன்பாட்டில் உள்ளவை எத்தனை? காலியாக இருப்பது எத்தனை? என்பதைத் தெளிவாக அறிவிக்க வேண்டும். அதேபோல, ஐ.சி.யு. வார்டில் உள்ள படுக்கைகளின் பயன்பாடுகள், வெண்டிலேட்டரில் உள்ள நோயாளிகளின் எண்ணிக்கை உள்ளிட்ட அனைத்தும் வெளிப்படையாக இருப்பதுடன் பிரத்யேக இணையத்தளத்தில் இதன் விபரங்களைத் தினமும் அப்டேட் செய்ய வேண்டும். இதற்காக, ஒவ்வொரு மருத்துவமனை நிர்வாகமும் தனி அலுவலரை நியமிப்பது கட்டாயம். அரசின் வேகத்துக்கு நீங்களும் ஒத்துழைத்தால்தான் கரோனா தாக்கத்தை குறைக்க முடியும்'' என்று கேட்டுக் கொண்டிருக்கிறார் விஜயபாஸ்கர்.
படுக்கை ஒதுக்கீடு விவகாரங்கள் இப்படியிருக்க, தனியார் மருத்துவமனைகளில் கரோனா சிகிச்சைகளில் கட்டண கொள்ளைகள் நடப்பதாக எழுந்த குற்றச்சாட்டுகளைத் தொடர்ந்து அமைக்கப்பட்டக் குழு, தனது அறிக்கையைக் கடந்த வாரம் சமர்பித்திருந்தது. அதன்படி, தனியார் மருத்துவமனைகளில் கரோனா சிகிச்சைக்கான கட்டணங்களை நிர்ணயித்தது அரசு. இதிலுள்ள பல்வேறு வில்லங்கங்களை விவரிக்கின்றனர் சமூக செயற்பாட்டாளர்கள்.
நம்மிடம் பேசிய ஆர்.டி.ஐ. செயற்பாட்டாளர் செல்வராஜ், "கரோனா வைரஸ் தொடர்பாக தமிழக அரசிடம் ஆர்.டி.ஐ. மூலமாக எந்தத் தகவல் கேட்டாலும் சொல்லப்படுவதில்லை. தனியார் மருத்துவமனைகளில் கரோனா வைரஸ் சிகிச்சைக்கான கட்டணங்களை அரசு அறிவித்திருக்கிறது. அதன்படி, 1 நாளைக்கு பொது வார்டு கட்டணம் குறைந்தபட்சம் 5,000, அதிகபட்சம் 7,500 ரூபாய் எனவும், தீவிர சிகிச்சை பிரிவில் அட்மிட் செய்யப்படுவர்களுக்கு 1 நாளைக்குக் கட்டணம் அதிகபட்சம் 15,000 ரூபாய் எனவும் நிர்ணயித்திருக்கிறார்கள். ஆனால், அரசு கட்டணத்தில் மருத்துவம் செய்ய எந்தத் தனியார் மருத்துவமனைகளும் தயாராக இல்லை. அரசு கட்டணத்தில் சிகிச்சை எடுத்துக்கொள்ள வருபவர்களிடம் ஆரம்பத்திலேயே பெட் (படுக்கை) காலியாக இல்லை எனச் சொல்லி திருப்பி அனுப்பிவிடுகிற அவலங்கள் நடக்கிறது. அதேசமயம், 3 லட்சம், 4 லட்சம் கட்டணம் செலுத்துபவர்களுக்கு மட்டுமே முன்னுரிமை தருகிறது தனியார் மருத்துவமனைகள்.
கரோனாவுக்கு இதுவரை உலக அளவில் மருந்துகள் எதுவும் கண்டுப்பிடிக்கப்படவில்லை. அப்படியிருக்கும்போது, 3 லட்சம், 4 லட்சம் ரூபாய்க்கு என்ன சிகிச்சை தருகிறார்கள்? மருந்தே இல்லாதபோது எந்த மருந்தை கொடுத்து சிகிச்சையளிக்க முடியும்? விட்டமின் மாத்திரைகளும், ஆண்டிபயாட்டிக் இன்ஜெக்ஷன் மட்டும்தான் தருகிறார்கள். இதற்கு 3 லட்சம் ரூபாயா? வெறும் 20 ரூபாய் போதும். இந்த லட்சணத்தில் அரசு வேறு கட்டணங்களை நிர்ணயிக்கிறது. இது மட்டுமல்லாமல், கரோனா வைரஸ் சிகிச்சையை முதல்வரின் காப்பீட்டுத் திட்டத்தின் கீழ் கொண்டுவந்துள்ளது தமிழக அரசு. இதனால் பல தனியார் மருத்துவமனைகள் அப்-செட்டாகியுள்ளன.
இதற்கான காரணங்கள் குறித்து நாங்கள் ஆராய்ந்த போது சில உண்மைகள் தெரிய வந்தது. அதாவது, கரோனா தாக்கம் ஏற்படுவதற்கு முன்பு வரை, காப்பீட்டுத் திட்டத்தில் அட்மிட்டாகும் நோயாளிகளை மனமுவந்து மருத்துவமனையில் சேர்த்துக்கொள்வார்கள். ஏனெனில், நோயாளி டிஸ்சார்ஜ் ஆகும் போது மருத்துவமனைகள் அதிகபட்ச தொகையைப் பூர்த்தி செய்து கொள்ளும். அதனை எவ்வித கிராஸ் செக்கிங் இல்லாமல் அரசிடமிருந்து பணம் வந்துவிடும் அல்லது இன்ஸ்சூரன்ஸ் நிறுவனத்திடமிருந்து காப்பீட்டுத் தொகை கிடைத்துவிடும். ஆனால், கரோனாவுக்குப் பிறகு, நிதி நெருக்கடியில் சிக்கியிருக்கிறது அரசாங்கம். அதனால் பணம் கிடைப்பதில் வருட கணக்கில் தாமதமாகும் எனக் கணக்குப் போடுகின்றன தனியார் மருத்துவமனைகள்.
காப்பீட்டு நிறுவனத்திடம் பணம் தாமதமாவதைத் தனியார் மருத்துவமனைகள் சுட்டிக் காட்டினால், அரசிடமிருந்து பணம் வரவில்லை; வந்ததும் தருகிறோம் எனத் தட்டிக்கழிக்கும். அரசாங்கத்திடம் முறையிட்டால் அரசின் கஜானா காலியாக இருக்கிறது; கரோனா காலம் முடியட்டும் செட்டில் பண்ணுகிறோம் என இழுத்தடிப்பார்கள். மேலும், தங்கள் இஷ்டத்துக்கும் பில் போட்டு க்ளைம் பண்ண முடியாது. அப்படியே போட்டாலும், கிராஸ் செக்கிங் செய்து கணிசமான தொகையைக் காப்பீட்டு நிறுவனமோ, அரசோ கட் பண்ணிவிடும். இத்தகைய பிரச்சனைகளால் தங்களின் வருவாய்ப் பாதிக்கப்படுவதாக நினைக்கும் தனியார் மருத்துவமனைகள், காப்பீட்டுத் திட்டத்தில் வரும் நோயாளிகளிடம், படுக்கை காலியாக இல்லை; வேறு ஹாஸ்பிட்டலை பாருங்கள் எனக் கறாராகச் சொல்லி விடுகின்றன.

அரசின் கட்டாயத்தின் பேரில் ஒதுக்கப்பட்டுள்ள படுக்கைகளைக் கூட பெரும் பணக்காரர்களுக்கு ஒதுக்கப்பட்டுவிடுகிறது. இத்தகைய முறைகேடுகளைத் தடுக்க அனைத்துத் தனியார் மருத்துவமனைகளையும் முதல் ஊரடங்கு அமல்படுத்தப்பட்ட மார்ச் 24- ஆம் தேதியே அரசின் கட்டுப்பாட்டுக்குள் கொண்டு வந்திருக்க வேண்டும். தனியார் மருத்துவமனைகளைக் கட்டுப்படுத்தும் அதிகாரமிக்க அரசாகத் தற்போதைய அரசு இல்லை'' என ஆவேசப்படுகிறார். தனியார் மருத்துவமனைகளின் படுக்கை வியாபாரத்தைத் தடுக்கும் வகையில் அவைகளை அரசு கையகப்படுத்தாமலிருந்தால் கரோனா நோயாளிகளுக்குப் படுக்கை ஒதுக்கீடு செய்வது எடப்பாடி அரசுக்குப் பெரும் சவாலாக இருக்கும்!
படம் : ஸ்டாலின்