இம்முறை அ.தி.மு.க. தொண்டர்களை மையப்படுத்தி தமிழகம் தழுவிய அளவில் கருத்துக்கணிப்பு நடத்தப்பட்டது. பொதுமக்களின் கருத்துகளையும் புறக்கணிக்கவில்லை.
டெல்டா மாவட்டத்தில் கோப அனல் வீசியது. ""நான் அ.தி.மு.க.வின் ஆதரவாளன். ஆனாலும் எனக்கு ஜெயலலிதா மீது சில வெறுப்புகள் உண்டு. அதே நேரத்தில் அவரது சமுதாயத்தினரை ஆடாமல் அடக்கி வைத்திருந்தார். ஆனால் இன்று சங்கரமடத்தின் கூடாரம் முதல் குடுமி வரை ஆடுகிறது. அதற்கு வழிவிட்டுவிட்டார் எடப்பாடி'' என கொக்கரிக்கிறார்கள் மடாலயங்களுக்கும் கோவில்களுக்கும் பெயர்பெற்ற கும்பகோணம் நகரத்தைச் சேர்ந்தவர்கள்.
பா.ஜ.க.வுடன் அ.தி.மு.க. கூட்டணி வைத்திருப்பது இவர்கள், அடித்து வைத்திருக்கும் பணத்திற்கு எங்கே பங்கம் வந்துவிடுமோ என்கிற பயத்தினால்தான். அதேபோல சசிகலா அ.தி.மு.க.வை கைப்பற்றிவிடுவார். அந்த இடையூறு வராமல் இருப்பதற்கு மத்திய ஆட்சியின் தயவு தேவை. இவை அனைத்தும் தங்களுடைய பதவியை தக்கவைப்பதற்குத் தானே தவிர வெற்றி பெறுவதற்கான வாய்ப்பே இல்லை'' என தெளிவாக எச்சரிக்கிறார்கள் அ.தி.மு.க.வினரும் பொதுமக்களும்.
""பா.ஜ.க.வை ஜெ. நிராகரித்தார். மோடி பிரதமராகவே சென்னை வந்தபோதும் எடப்பாடியைப்போல கூழைக்கும்பிடு போட்டு வரவேற்கவில்லை. பிரச்சாரத்தில் மோடியா? லேடியா? என பாட்ஷா பட ஸ்டைலில் கேள்வி கேட்டார். அந்த ஜெ. நிராகரித்த பா.ஜ.க.வுடன் அ.தி.மு.க. கூட்டணி அமைத்திருப்பது சதி என 23 சதவிகிதம் பேர் சொல்கிறார்கள். மோடிக்கு எடப்பாடி பயப்படுவது போல, இந்திராகாந்திக்கு எம்.ஜி.ஆர். பயந்தார். ஆனால் எம்.ஜி.ஆரும் ஜெ.வும் மதவாத சக்திகளை வளரவிடவில்லை. பா.ஜ.க.வுக்கு 20 சீட் வாரி வழங்கியிருக்கிறார் எடப்பாடி. பா.ஜ.க. தயவில் ஆட்சி நடத்தியவருக்கு வேற வழியில்லை'' என்கிறார் திருப்பத்தூர் கனகராஜ்.
சேலம் ஏற்காடு தொகுதியைச் சேர்ந்த விஜயகுமார், ""ஜெ. மறைந்த பிறகு அ.தி.மு.க. நெருக்கடிகளைச் சந்தித்தது. அப்போது பா.ஜ.க. தயவால்தான் ஆட்சியைத் தக்கவைக்க முடிந்தது. அதனால் பா.ஜ.க.வுடன் கூட்டணி வைத்தது தவறில்லை'' என்கிறார்.
நமது கருத்துக் கணிப்பில் 31 சதவிகிதம் பேர் பா.ஜ.க.வுடன் கூட்டணி வைப்பது தவிர வேறு வழியில்லை என சொல்கிறார்கள். ஆனால் கிட்டத்தட்ட பாதிக்குப் பாதி 46 சதவிகிதம் பேர் ஜெ. நிராகரிக்கிற பா.ஜ.க.வுடன் அ.தி.மு.க. கூட்டணி அமைத்திருப்பது தவறு என அடித்துச் சொல்கிறார்கள்.
பா.ஜ.க.வுடனான கூட்டணி நிச்சயம் அ.தி.மு.க.வை பாதிக்கும். விவசாய சட்டம் போல எண்ணற்ற சட்டங்களைப் போட்டு மக்களை வறுத்து எடுத்து வருகிறது பா.ஜ.க அரசு. நீட், பெட்ரோல் என ஏறும் விலைவாசிக்கு எதிராகப் போராட்டம் நடந்துவருகிறது. அத்துடன் பா.ஜ.க. சனாதன கொள்கையை முன்னெடுத்து தமிழகத்தில் இந்தியைத் திணித்துவருகிறது. பா.ஜ.க.வின் இந்த முயற்சிகளுக்கு அ.தி.மு.க. ஆமாம் சாமி போட்டுவருகிறது. இது அ.தி.மு.க.வுக்கு கடுமையான பாதிப்பை ஏற்படுத்தும் என்கிறார்கள் தர்மபுரி மக்கள்.
பா.ஜ.க.வுடனான கூட்டணி அ.தி.மு.க.வின் வெற்றியைப் பாதிக்குமா என்கிற கேள்விக்கு 63 சதவிகிதம் பொது மக்கள் பாதிக்கும் என்றே தங்கள் கருத்தை பதிவு செய்திருக்கிறார்கள்.
""மோடி அறிவிச்ச திட்டங்களில் ஒன்றையாவது நிறைவேற்றியிருக்கிறாரா? மக்களை அலையவிட்ட பி.ஜே.பி.யை மக்களும் அலையவிடுவாங்க'' என்கிறார் கோவை கவுசல்யா.
பி.ஜே.பி.க்கு 20 தொகுதிகள் ஒதுக்கியிருப்பது அதிகம் என 57 சதவிகிதம் பேரும் அந்தத் தொகுதிகளில் எதிர்க்கட்சிகள் எளிதாக வெற்றி பெறும் என 32 சதவிகிதம் பேரும் கருத்து தெரிவிக்கிறார்கள்.
அ.தி.மு.க. கூட்டணியில் பா.ம.க., த.மா.கா. உட்பட பல கட்சிகள் இருக்கிறது. அந்தக் கட்சி நிர்வாகிகள் யாரும் மிரட்டல் தொனியில் பேசமாட்டார்கள். ஆனால் பா.ஜ.க.வினர் மிரட்டல் தோரணையில்தான் அ.தி.மு.க.வினரிடம் பேசுகிறார்கள்.
""மத்தியில் ஆட்சி இருக்கிறது என அ.தி.மு.க. நிர்வாகிகளை மிரட்டி காரியம் சாதிக்கிறார்கள். அதுபோலத்தான் முதல்வரையும் மிரட்டி, கூட்டணி அமைத்துக்கொண்டு சீட்டுகளையும் கூடுதலாக வாங்கியிருக்கிறார்கள். அந்த சீட்டில் ஒரு சீட்கூட பா.ஜ.க. வர வாய்ப்பில்லை'' என்கிறார் பள்ளப்பட்டி அ.தி.மு.க. விசுவாசி ஆறுமுகம்.
எம்.ஜி.ஆர். தன் வாழ்நாளின் கடைசிக்கட்டத்தில் நிராகரித்த ஜெயலலிதாவையே அந்தக் கட்சிக்காரங்க ஏத்துக்கிட்டாங்க. ஜெயலலிதா நிராகரிச்ச பி.ஜே.பி.கூட கூட்டணி வச்சா ஒண்ணும் குடிமுழுகிப் போயிடாதுன்னு எடப்பாடி ஏத்துக்கிட்டார்.
""சென்ட்ரல்ல இருந்து ஆட்டி வைக்கிறவங்களுக்கு 20 சீட் கூட கொடுக்கலைன்னா இங்க டங்குவாரு கழன்றுடும்ல. எடப்பாடிய ரொம்ப கெட்டிக்காரர்னு சொன்னாங்க. ஆனா ஒட்டுமொத்த அ.தி.மு.க.வும் பா.ஜ.க.வால அவுட் ஆகப்போகுது''ன்னு சொல்றாரு விருதுநகர் ஹைகோர்ட் ராஜன்.
தேர்தலில் யாருக்கு வாக்களிப்பீர்கள்..? - நக்கீரன் ஸ்பெஷல் சர்வே ரிசல்ட்!
-நக்கீரன் சர்வே குழு
ராம்கி, ஜீவாதங்கவேல், பரமசிவன், சக்திவேல், எஸ்.பி.எஸ், மனோ, ராஜா, பகத்சிங், செல்வகுமார், மணிகண்டன், அருண்குமார், அரவிந்த், அருண்பாண்டியன், நாகேந்திரன், அண்ணல், சுந்தரபாண்டியன், இளையராஜா, மகேஷ், காளிதாஸ்
தொகுப்பு: -தாமோதரன் பிரகாஷ்
படங்கள்: ராம்குமார், விவேகானந்தன், விவேக்