தென்னிந்திய மொழிகளைத் தாண்டி பாலிவுட் படங்களிலும் பிசியாக நடித்து வருகிறார் விஜய் சேதுபதி. அந்த வகையில், தமிழில் விடுதலை, இந்தியில் ஜவான், மும்பைக்கார், மெர்ரி கிறிஸ்துமஸ் உள்ளிட்ட படங்கள் விஜய் சேதுபதி நடிப்பில் உருவாகி வருகின்றன. இதில் விடுதலை படத்தின் முதல் பாகம் நாளை (31.03.2023) திரையரங்குகளில் வெளியாகவுள்ளது.
இந்த நிலையில், மதுரை மத்திய சிறை நூலகத்திற்கு 1000 புத்தகங்களை வழங்கியுள்ளார் விஜய் சேதுபதி. இந்த புத்தகங்களை மதுரை மத்திய சிறைத்துறை துணைத் தலைவர் பழனி மற்றும் சிறைத்துறை காவல் கண்காணிப்பாளர் வசந்த கண்ணன் ஆகியோரிடம் விஜய்சேதுபதி வழங்கினார். சிறைக் கைதிகளின் வாசிப்பு திறனை மேம்படுத்துவதற்காக சிறை நூலகத் திட்டம் செயல்பட்டு வருகிறது. இந்த திட்டத்தில் 1 நாளில் 1 லட்சம் புத்தகங்கள் நன்கொடைகளாகப் பெற இலக்கு நிர்ணயிக்கப்பட்டுள்ளது. மதுரையில் படப்பிடிப்பிற்காக வந்த விஜய் சேதுபதி இந்த திட்டம் குறித்து அறிந்து புத்தகங்களை வழங்கியுள்ளார்.
சமீபத்தில் இந்திய ஜனநாயக வாலிபர் சங்கத்தின் சார்பில் போதைக்கு எதிராக போதையற்ற தமிழ்நாடு முழக்கத்தினை முன்வைத்து ஒரு கோடி கையெழுத்து இயக்கத்தில், கையெழுத்திட்டு தன்னுடைய ஆதரவை வழங்கினார் என்பது குறிப்பிடத்தக்கது. கடந்த ஜனவரி மாதம் சென்னையில் நடைபெற்ற சர்வதேச புத்தகக் கண்காட்சியில் சிறைத்துறை மற்றும் சீர்திருத்த துறை சார்பாக வைக்கப்பட்டிருந்த 'கூண்டுக்குள் வானம்' எனும் அரங்கில் கைதிகளுக்கு பயன்படும் வகையில் புத்தகங்களைத் தானமாக பொதுமக்கள் கொடுத்தால் அதை கைதிகளுக்கு கொண்டு சேர்க்கும் வகையில் அமைக்கப்பட்டிருந்தது. அதன் மூலமும் சிறைவாசிகளுக்கு புத்தகம் அனுப்பப்பட்டது.