உலகம் முழுவதும் கரோனா வைரஸால் பலரும் பாதிக்கப்பட்டுள்ளனர். குறிப்பாக அமெரிக்கா கரோனா வைரஸால் பெரும் இழப்பை சந்தித்துள்ளது. அதேபோல் இந்தியாவிலும் இதன் பாதிப்பு அதிகரித்துக்கொண்டே இருப்பதால் கடந்த ஒரு மாதத்திற்கும் மேலாக ஊரடங்கு உத்தரவு அமலில் உள்ளது. குறிப்பாக தமிழகத்தில் இதன் பாதிப்பு அதிகமாக உள்ளதால் தமிழக காவல்துறையினர் இடைவிடாது பணிபுரிந்து வருகிறார்கள். இதனால் காவல்துறையினரில் 75-க்கும் அதிகமானோருக்கு கரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. இருந்தும் அவர்கள் நேரம், காலம் பார்க்காமல் பணி செய்துகொண்டிருப்பதற்கு பலரும் பாராட்டு தெரிவித்து வரும் நிலையில், நடிகை வரலட்சுமி காவல்துறையினரின் சேவையை பாராட்டி வீடியோ வெளியிட்டுள்ளார். அதில்..
"காவல்துறையினருக்கு மிகப்பெரிய நன்றி. இரவும் பகலுமாக எங்களுக்காக உழைத்துக் கொண்டிருக்கிறீர்கள். யாரும் பார்க்கவில்லை என நினைக்காதீர்கள். நாங்கள் பார்த்துக் கொண்டுதான் இருக்கிறோம். உங்களுக்கு அவ்வளவு கடமைப்பட்டுள்ளோம். நீங்கள் பண்ணும் ஒவ்வொரு விஷயமும் எங்களுடைய நல்லதுக்குத்தான். உங்களுடைய குடும்பத்தினரையும், உங்களுடைய உயிரையும் பாதுகாக்காமல், எங்களுடைய உயிரைப் பாதுகாத்துக் கொண்டிருக்கிறீர்கள். அதற்குப் பெரிய நன்றி. உங்களுடைய சேவை கடவுளுக்குச் சமமானது. கடும் வெயிலிலும் நின்று கொண்டு உங்களுடைய வேலையை பார்த்துக் கொண்டிருக்கிறீர்கள். அதற்குப் பெரிய நன்றி. நீங்கள் எல்லாம் எங்களுக்கு ஒரு உத்வேகம்" என கூறியுள்ளார்.