இந்தியா முழுவதும் 7 கட்டங்களாக நடந்த வாக்குப் பதிவுகளின் எண்ணிக்கை நேற்று எண்ணப்பட்டு முடிந்தது. மொத்தம் 543 மக்களவைத் தொகுதிகள் இருக்கும் நிலையில் தேசிய ஜனநாயகக் கூட்டணி 292 இடங்களிலும் இந்தியா கூட்டணி 234 இடங்களிலும் வெற்றி பெற்றுள்ளது. இதில் பா.ஜ.க, தனித்து 240 இடங்களையும் காங்கிரஸ் 99 இடங்களையும் கைப்பற்றியது. ஆட்சி அமைக்கத் தேவையான 272 தொகுதிகளை எந்த கட்சியும் தனித்துப் பெறாததால் கூட்டணி ஆட்சி அமையும் சூழ்நிலை நிலவுகிறது. அதனடிப்படையில் அதிக தொகுதிகளை வென்ற பா.ஜ.க., கூட்டணி கட்சிகளுடன் ஆட்சியை அமைக்க உள்ளது. இதனையொட்டி டெல்லியில் பாஜக தலைமையிலான தேசிய ஜனநாயகக் கூட்டணி தலைவர்கள் ஆலோசனைக் கூட்டம் இன்று நடைபெற இருக்கிறது.
தமிழகத்தை பொறுத்தவரை இந்தியா கூட்டணியில் தி.மு.க. தலைமையிலான கூட்டணி கட்சிகள் மொத்தம் உள்ள 39 தொகுதிகளிலும் போட்டியிட்டு வென்றுள்ளனர். மேலும் பாண்டிச்சேரியில் உள்ள ஒரு நாடாளுமன்ற தொகுதியையும் இந்தியா கூட்டணி வென்றுள்ளது. ஒட்டுமொத்த இந்தியாவிலே ஒரு இடத்தில் கூட பா.ஜ.க. தலமையிலான தேசிய ஜனநாயகக் கூட்டணி தமிழ்நாட்டில் வெற்றி பெறவில்லை. இதையொட்டி தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலினுக்கு பல்வேறு தரப்பினர் வாழ்த்து தெரிவித்து வருகின்றனர்.
அந்த வகையில் கவிஞர் வைரமுத்து, “நாற்பதுக்கு நாற்பது என்பது மாயத்தால் நிகழ்ந்ததல்ல. நிர்வாகத் திறம் என்ற நியாயத்தால் நிகழ்ந்தது. இந்த வெற்றி உங்கள் ஆட்சியின் மாட்சிக்குக் கிடைத்த சாட்சி என்று சொல்லி முதலமைச்சருக்குப் பொன்னாடை பூட்டினேன். பதற்றமில்லாமல் வெற்றியின் பகட்டு இல்லாமல் இயல்பான புன்னகையோடு இருந்தார். வென்றார்க்கு அழகு தோற்றாரை மதித்தல். தோற்றார்க்கு அழகு வென்றாரை வியத்தல். பதவிக்கு அழகு உதவிகள் தொடர்தல். மக்களுக்கு அழகு மறுவேலை பார்த்தல்” என அவரது எக்ஸ் வலைதளப்பக்கத்தில் பதிவிட்டுள்ளார்.