பேரறிஞர் அண்ணாவின் 115வது பிறந்தநாள் இன்று தமிழகம் முழுவதும் கொண்டாடப்படுகிறது. ஆங்காங்கே உள்ள அவரது சிலைக்கு அரசியல் கட்சி தலைவர்களும், பிரபலங்களும் மாலை அணிவித்து மரியாதை செலுத்தி வருகின்றனர். திரைப்பிரபலங்களும் தங்களது சமூக வலைத்தள பக்கங்களில் பேரறிஞர் அண்ணாவின் பிறந்தநாள் வாழ்த்துகளை பகிர்ந்து வருகிறார்கள். அதேசமயத்தில் இன்று தமிழக அரசு மகளிர் உரிமைத்தொகை திட்டத்தை அண்ணா பிறந்தநாளை முன்னிட்டு காஞ்சிபுரத்தில் தொடங்கி வைக்கிறது. அதற்கு கவிஞர் வைரமுத்து வாழ்த்தி பதிவிட்டிருக்கிறார்.
கவிஞர் வைரமுத்து தன்னுடைய ட்விட்டர் பக்கத்தில் “பேரறிஞர் அண்ணாவின் பிறந்த நாளில் பிறந்த மண்ணில் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தொடங்கி வைக்கும் கலைஞர் மகளிர் உரிமைத்தொகைத் திட்டம் தாய்க்குலத்தின் சுதந்திரத்திற்கும், சுயமரியாதைக்கும் பக்கபலமிருந்து தக்க பயன் நல்குவதாகும். திராவிட இயக்க வரலாற்றில் இந்த நாள் குறிக்கப்படுவது மட்டுமல்ல பொறிக்கப்படும் இந்தியாவின் பிற மாநிலங்களும் தளபதி ஏற்றி வைக்கும் இந்தத் திருவிளக்கில் தீபமேற்றிக் கொள்ளலாம்” என்றிருக்கிறார்.