கடந்த ஆண்டு அக்.02 அன்று மும்பையில், கோவா செல்லக்கூடிய சொகுசு கப்பலில் போதைப்பொருள் பயன்படுத்தியதாக நடிகர் ஷாருக்கான் மகன் ஆர்யன் கான் மும்பையில் கைது செய்யப்பட்டார். இந்த வழக்கில் தொடர்ந்து விசாரணை நடைபெற்று வரும் நிலையில், ஆர்யன் கானின் தரப்பில் பலமுறை ஜாமீன் கோரி மனுத்தாக்கல் செய்யப்பட்டிருந்தது. ஜாமீன் மனு பலமுறை விசாரணைக்கு வந்த நிலையில் 21 நாட்களுக்குப் பிறகுதான் ஆர்யன் கானுக்கு ஜாமீன் வழங்கப்பட்டது. இந்த வழக்கில் அரசியல் உள்நோக்கம் இருப்பதாக பல்வேறு அரசியல் கட்சி தலைவர்களும், திரை பிரபலங்களும் கருத்து தெரிவித்து வந்தனர்.
அந்தவகையில் சமீபத்திய நேர்காணலில் பேசிய மலையாள நடிகர் டோவினோ தாமஸ் ஆர்யன் கான் வழக்கு அரசியல் உள்நோக்கம் என்று கூறியுள்ளார். மேலும் இது ஷாருக்கான் மற்றும் அவரது மகன் ஆர்யன் கான் இருவருக்கும் இருக்கும் நற்பெயருக்கு களங்கம் விளைவிக்கும் அரசியல் உள்நோக்கம் என்று தெரிகிறது. நான் அப்படி உறுதியாக சொல்லவில்லை. ஆனால் அப்படித்தான் தோன்றுகிறது" எனத் தெரிவித்துள்ளார்.