பாலிவுட் சூப்பர் ஸ்டாராக வலம் வருபவர் ஷாருக்கான். தனியார் தொலைக்காட்சி தொடரில் நடிகராக அறிமுகமான ஷாருக்கான், கடந்த 1992ஆம் ஆண்டில் வெளியான ‘தீவானா’ படத்தின் மூலம் பாலிவுட் உலகில் கதாநாயகனாக அறிமுகமானார். முதல் படத்திலேயே வெற்றியைக் கொடுத்த ஷாருக்கான், சிறந்த அறிமுக கதாநாயகனுக்கான ஃபிலிம்பேர் விருதை வாங்கினார். அதன் பிறகு வந்த பாஸிகர், டார், என தொடர் வெற்றி படங்கள் கொடுத்து தவிர்க்க முடியாத ஹீரோவாக இருந்தார் ஷாருக்கான்.
கரண் அர்ஜுன், தில்வாலே துல்ஹனியா லே ஜாயேங்கே, தில் தோ பாகல் ஹே போன்ற படங்கள் ஷாருக்கானின் சினிமா வாழ்க்கைக்கு திருப்புமுனையாக அமைந்தது. இதில், ‘தில்வாலே துல்ஹனியா லே ஜாயேங்கே’ திரைப்படம் அதிக நாட்கள் திரையரங்குகளில் ஓடிய திரைப்படம் என்ற கெளரவத்தை பெற்றுள்ளது. ஹிந்தி சினிமாவில் மட்டுமல்லாது, கமல்ஹாசனின் ‘ஹே ராம்’ போன்ற மற்ற மொழி படங்களில் கூட ஷாருக்கான் நடித்திருக்கிறார்.
அதன் பிறகு, சஞ்சய் லீலா பன்சாலி இயக்கத்தில் வெளியான தேவ்தாஸ், யாஷ் சோப்ரா இயக்கத்தில் வெளியான வீர் ஷாரா, அசுதோஷ் கோவாரிகர் இயக்கத்தில் வெளியான ஸ்வேதேஸ் போன்ற படங்களினால் ஷாருக்கானை உலகளவில் திரும்பி பார்க்க வைத்தது. இவரது நடிப்பில் கடந்த வருடம் வெளியான பதான், ஜவான், டங்கி ஆகிய படங்கள் பெரிய வெற்றி பெற்றன. இதில், பதான் மற்றும் ஜவான் ஆகிய இரண்டு படங்கள் 1000 கோடி ரூபாய் வசூலித்துள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.
உலகம் முழுவதும் ரசிகர்கள் பட்டாளத்தை வைத்திருக்கும் ஷாருக்கானுக்கு வாழ்நாள் சாதனையாளர் விருது வழங்கப்பட இருக்கிறது. ஸ்விட்சர்லாந்தில் 77வது லோகார்னோ திரைப்பட விழா ஆகஸ்ட் மாதம் 7ஆம் தேதி முதல் 17ஆம் தேதி வரை நடைபெற இருக்கிறது. இந்த விழாவில் பிரபலமான பாலிவுட் நடிகர் ஷாருக்கானுக்கு வாழ்நாள் சாதனையாளர் விருது வழங்கி கெளரவிக்கப்பட இருப்பதாக அறிவிக்கப்பட்டுள்ளது. இது அவரது ரசிகர்களுக்கு பெரும் மகிழ்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.