சசிகுமார் நடிப்பில் இரா.சரவணன் இயக்கத்தில் கடந்த 20ஆம் தேதி வெளியான படம் நந்தன். இரா என்டர்டெயின்மென்ட் தயாரித்துள்ள இப்படத்தில் கதாநாயகியாக ஸ்ருதி பெரியசாமியும் முக்கிய கதாபாத்திரத்தில் சமுத்திரக்கனியும் வில்லன் கதாபாத்திரத்தில் பாலாஜி சக்திவேலும் நடித்துள்ளனர். ஜிப்ரான் இசையமைத்துள்ள இப்படம் பட்டியலின மக்கள் ஊராட்சி மன்றத் தேர்தலில் போட்டியிடும் போது என்னென்ன பிரச்சனைகளை எதிர்கொள்கிறார்கள் என்பதை அழுத்தமான காட்சிகள் மற்றும் வசனங்களுடன் பேசியிருக்கின்றனர். இப்படத்திற்கு நா.த.க. தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான், சிவகார்த்திகேயன், இயக்குநர் கோபி நயினார் உள்ளிட்ட பலரும் பாராட்டு தெரிவித்திருந்தனர்.
இந்த நிலையில் வி.சி.க. தலைவர் திருமாவளவன் எம்.பி. நந்தன் படத்தை பாராட்டியுள்ளார். படத்தை பார்த்துவிட்டு செய்தியாளர்களை சந்தித்த அவர், “இந்தப் படம் நாடெங்கிலும் பேசப்படுகின்ற மிக முக்கியமான பிரச்சனையை மையமாகக் கொண்டு தயாரிக்கப்பட்டிருக்கிறது. இந்த நாடு விடுதலை அடைந்து முக்கால் நூற்றாண்டு கடந்திருக்கிறது. குடியரசு நாளில் பவளவிழா கொண்டாட இருக்கிறோம். ஆனால் இன்னும் அரசியலைப்பு சட்டம் நடைமுறையில் இல்லை. ஜனநாயகத்தை மதிக்கும் நிலை பரிணமிக்கவில்லை. இதற்கு உள்ளாட்சி அமைப்புகளில் நிலவும் சாதிய வன்கொடுமைகள் சாட்சியங்களாக இருக்கின்றன. இது தமிழ்நாட்டில் நடக்கும் பிரச்சனைகளாக இல்லை. இந்தியா முழுவதும் நடக்கும் பிரச்சனையாக இருக்கிறது. மேலவளவில் முருகேசன் உள்ளிட்ட ஏழு பேர் கொடூரமாக வெட்டி சாய்க்கப்பட்டார்கள். அது மட்டுமே பேசு பொருளாக மாறியது. ஆனால் எண்ணற் தனி ஊராட்சி தொகுதிகளில் மக்களால் தேர்ந்தெடுக்கப்பட்ட ஊராட்சி மன்ற தலைவர்கள் சாதிய வன்மங்களால் எவ்வளவு கொடுமைகளுக்கு உள்ளாகிறார்கள் என்பதை இயக்குநர் இரா.சரவணன் கவனமாக அக்கறையுடன் பதிவு செய்திருக்கிறார்.
வெளிச்சத்திற்கு வராத பல வன்கொடுமைகளை அம்பலப்படுத்தியிருக்கிறார். சசிகுமாரின் நடிப்பு நம்மை நெகிழ வைக்கிறது. ஒவ்வொரு கிராமத்திலும் இன்றைக்கும் எந்தளவுக்கு சாதியம் தலைவிரித்து ஆடுகிறது, எளிய மக்கள் எந்தளவிற்கு ஒடுக்கப்படுகிறார்கள், குறிப்பாக உள்ளாட்சி அமைப்புகளில் ஊராட்சி மன்றத் தலைவர்களாக தேர்ந்தெடுக்கப் படுகிறவர்கள், அந்த இருக்கைகளில் அமர முடிவதில்லை. அவர்களை தேர்ந்தெடுப்பவர்களே எந்தளவிற்கு அவர்களை அடக்கி ஒடுக்கி வைக்கிறார்கள் என்பதை படத்தில் விவரித்திருக்கிறார்கள். தனித்தொகுதியில் எப்படி வேட்பாளர்களை தேர்வு செய்கிறார்கள். அதில் அவர்களுடைய ஆதிக்க மனநிலை எவ்வாறு இருக்கிறது. இதையெல்லாம் தத்ரூபமாக சரவணன் பதிவு செய்திருக்கிறார். அது போற்றுதலுக்குரியது. எவ்வளவு அடங்கி போனாலும், விஸ்வாசமாக இருந்தாலும் அவர்களை அடக்கி வைப்பதில் ஆதிக்க சக்திகள் உறுதியாக இருக்கிறார்கள். ஒன்றுசேர்ந்து செயல் படுகிறார்கள். இறந்து போன பாட்டியை சேற்றிலே புதைக்கின்ற ஒரு அவலம். இது கற்பனை அல்ல. புனைவும் அல்ல. திரைப்படத்திற்காக இட்டுக்கட்டி எடுக்கப்பட்ட காட்சி அமைப்புகள் அல்ல. இது தமிழ்நாட்டு உட்பட இந்தியா முழுவதிலும் நடக்கிறது. படத்தில் காட்டப்பட்டது அதீதமான கற்பனைகள் அல்ல. படம் பார்க்கும் போது கடுமையான மன உளைச்சலைத் தருகிறது. எந்த இடத்தில் அவன் தலைநிமிர்வான், வெகுண்டெழுவான், திருப்பி அடிப்பான என்கிற எதிர்பார்ப்பை பார்வையாளர்களுக்கு உருவாக்குகிறது. நேர்மையான அதிகாரிகள் இருந்தால் இந்தப் படம் தேசிய விருதுகளை அள்ளி குவிக்கும். நந்தன் வெல்வான். ஜனநாயகம் வெல்லும்.” என்றார்.