
தமிழ் சினிமாவில் கதாபாத்திரத்திற்கு ஏற்றார்போல் தன் அர்ப்பணிப்பான நடிப்பை கொடுப்பவர்களில், இன்றைய காலகட்டத்தில் முக்கியமாகப் பார்க்கப்படுபவர் விக்ரம். நடிகர், பாடகர், டப்பிங் ஆர்ட்டிஸ்ட்,போட்டோகிராஃபர் என்று பன்முகத் திறன்கொண்ட விக்ரம் இன்று (17.04.2023) தனது பிறந்தநாளைக் கொண்டாடி வருகிறார். அவருக்கு ரசிகர்கள் மற்றும் திரைப் பிரபலங்கள் உள்ளிட்ட பலரும் வாழ்த்து தெரிவித்து வருகின்றனர்.
அந்த வகையில் இப்போது அவர் நடித்து வரும் 'தங்கலான்' படக்குழு பிறந்தநாள் வாழ்த்து தெரிவித்துள்ளது. மேலும் இப்படத்தின் மேக்கிங் வீடியோவை வெளியிட்டுள்ளது. அந்த வீடியோவில் வழக்கமான விக்ரமின் அர்ப்பணிப்பு அந்த கதாபாத்திரத்திற்கு தயாராவது குறித்து காட்சிகள் இடம் பெற்றிருக்கிறது. மேலும் படத்தின் மீதான எதிர்பார்ப்பை அதிகரித்துள்ளது.
கோலார் தங்க வயலை மையமாக வைத்து உருவாகும் இப்படத்தில் பார்வதி, மாளவிகா மோகனன், பசுபதி உள்ளிட்ட பலர் நடிக்க ஜி.வி.பிரகாஷ்குமார் இசையமைக்கிறார். ஸ்டூடியோ க்ரீன் நிறுவனம் தயாரிக்கும் இப்படத்தின் படப்பிடிப்பு சென்னை மற்றும் கர்நாடகாவின் கோலார் பகுதியில் மாறி மாறி நடந்து வருகிறது. 80 சதவீதம் படப்பிடிப்பு முடிந்துள்ளது. இந்தாண்டு இறுதிக்குள் இப்படத்தை வெளியிட படக்குழு திட்டமிட்டுள்ளது.